திங்கள், 27 ஜூன், 2016

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு ஒரு இருக்கை


ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சங்கத்தமிழுக்கு ஒரு இருக்கை அனுமதிக்க நிதி திரட்டி வருகிறார்கள். இரு அமெரிக்க வாழ் மருத்துவர்கள் (தமிழர்கள்) முன்னின்றும் முதல் நிதியாக மூன்று கோடி போட்டும் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதற்கான அறிமுகக்கூட்டம் தியாகராயர் அரங்கில் சனிக்கிழமை சாயுங்காலம் நடைபெற்றது.விழாவில் தமிழில் பிழைப்பு நடத்தும் பிரபலஸ்தர்கள் யாரும் இல்லை. வழக்கமான இலக்கிய கூட்டங்களில் காணக்கிடைக்கும் அரைவேக்காடுகளும் கண்ணில் படவில்லை. தாஜ்நூர் இசையில் பழனிபாரதின் பாடல் ஒன்றை தீம் இசை என வெளியிட்டார்க்ள். மிகவும் சுமாரான ஆல்பம் அது. சுமார் கூட அதிகம் தான்.
ஞாநி அவர்கள் “ஹார்வர்டில் தமிழ் இருக்கை: இங்கே அம்மணம். அங்கே பட்டாடையா?” என்று இந்த முன்னெடுப்பைப்பற்றி விமர்சிக்கிறார். ஞாநி அவர்களின் உள்ளார்ந்த வெறுப்பு புரியவில்லை என்றாலும் நேரிடையாக சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.
1. தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் முனைவர் பட்டம் வரை படிக்கிறார்கள்.
2. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் விடுதி மட்டமாக உள்ளது. அங்கே தமிழ் படிக்கும் தலித் மற்றும் வன்னியர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
4. தமிழ் மீடியத்தில் படிப்பவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் இல்லை.
5. சில பத்திரிக்கைகள் மற்றும் கம்பெனிகளுக்கு இதில் என்ன ஆர்வம்
(அந்தப்பத்திரிக்கை இந்து; கம்பெனி சி.பி.சி.எல் என கணிக்கிறேன்)
6. இங்கே ஒரு 40 கோடி ரூபாய் திரட்டினால், அதைக் கொண்டு முதலில் தமிழுக்கு இங்கேயே செய்யவேண்டிய வேலைகள் ஏராளமாக இருக்கின்றன.
மிகவும் தட்டையான பார்வை இது. ஞாநிக்கு இப்படி தோன்றாமல் போனால் தான் ஆச்சர்யம். எதையும் வளைந்து பின்பக்க்கம் பார்த்து தன் தனித்துவமாகா பேசுவார். பேசட்டும். இந்த 40 கோடி தமிழ் நாட்டில் திரட்டுவதால் என்ன கெட்டுவிடப் போகிறது? கடந்த தேர்தலில் புழங்கிய பணத்தொடு 40 கோடியை ஒப்பிடுங்கள். கடுகு அய்யா கடுகு
தமிழ்நாட்டில் எப்போதும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் தீரட்டும் என்றால் சூரியனும் சந்திரனும் உள்ளவரை காத்திருக்க வேண்டியதுதான். சுனாமி வந்த அன்று சினிமா பார்த்த நாடு இது. வெள்ளம் புகுந்த வீடுகளில் திருடுடிய வீடு இது. நெடுஞ்சாலை விபத்தில் இறந்தவர்களின் நகைகளை திருடும் நாடு இது. எப்போ இதெல்லாம் குறைய............?
வள்ளுவர் கோட்டம் அருகே இன்னமும் பிச்சை எடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அதை கட்டாமல் விட்டிருக்கலாம் என்று சொல்ல முடியுமா? சல்லிப்பயல்களும் சில்லறைத்தனங்களும் இருக்கத்தான் செய்யும் . சிலப்போது சில விஷயங்கள் நடக்கும். சாவு வீட்டில் காப்பி கொடுப்பதில்லையா? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு 40 கோுடி ஒரு காசா ?
இந்த 40 கோடியை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிலோ ஈழத்திலோ எள்ளளவு பிரச்சனையை கூடத் தீர்க்க முடியாது. அவர்கள் ஏற்கனவே கட்டிய பயண்பாட்டில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனை ஆக்குவது போல முயன்றால் தப்பு சொல்லலாம். பிசாத்து காசு 40 கோடியில் ஹார்வார்ட் உள்ளவரை ஒரு தமிழ் இருக்கை இருக்கப்போகிறது. யாருமே பேசாத சமஸ்கிருதத்துக்கு கோடிகள் கொட்டும் போது கோடிகள் பேசும் தமிழுக்கு சில கோடிகள் போட்டால் என்ன? இது அரசின் வரிப்பணம் அல்ல. மனமிருப்பவர்கள் கொடுக்கட்டும். அரசும் இதில் உதவ வேண்டும். செய்பவர்களுக்கு பிண்ணனி எப்படியும் இருக்கட்டும். தமிழின் பெயர் இன்னும் சில நூற்றாண்டுகள் அமெரிக்காவில் இருக்கும் இருக்கட்டுமே.
கொடுக்க விருப்பமுள்ளவர்கள் கொடுக்கட்டும். ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லாவிட்டால் இங்கே எல்லாம் சரியாகி விடுமா? எவனோ செய்யறான். எவனோ கொடுக்கறான். தமிழ் இன்னும் கொஞ்ச காலம் அமெரிக்க மண்ணிலும் தழைக்கட்டுமே..........? வரிப்பணத்தில் கட்டிய சட்டசபையை வம்புக்காக மருத்துவமனையாக மாற்றுகிறார்கள். அரசுப்பணத்தில் கட்சிக்கூட்டம் நடக்குது. கட்சி அறிக்கையை செய்திதுறை கொடுக்குது. இப்படியெல்லாம் ஒரு நாட்டில் நடக்குதாம். அதெல்லாம் போலாம் இது போகக்கூடாதா?
முதல் ஐந்து குற்றச்சாட்டுகளும் தமிழக அரசு மீது வைக்க வேண்டியவை. அவை அனைத்தும் அரசு செய்ய வேண்டியன. அதை இப்படி திரட்டப்படும் 40 கோடியில் செய்யலாம் என்கிறார். ஆகவே ஹார்வார்ட் தமிழ் இருக்கை தேவை அல்ல. அல்லது அதற்கு இங்கே நிதி திரட்டாதே என்கிறார்.
பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பரின் பலபத்தாண்டு கடின உழைப்புகளான சினிமா வரலாற்றுப்பதிவுகளை அரசு வாங்கிக் கொண்டது. அதை எப்படி பராமரிக்கிறது? அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எப்படி பராமரிக்கிறது? ரோஜா முத்தையா என்ற தனிநபரின் உழைப்பை சிகாகோ பல்கலையின் நிதியுதவி காப்பாற்றி ரோஜா முத்தையா நூலகம் அமைய உதவியது என்கிறார் இந்து ராம். அப்படி எதாவது நல்லது ஹார்வார்டு இருக்கையாலும் நடக்கும் என்கிறார். அப்படி இருக்க ஒரு இருக்கை தான் அமைந்து விட்டு போகட்டுமே?
இந்த கம்பெனிகளுக்கு, இந்து ராமுக்கோ, அந்த இரு மருத்துவர்களுக்கு அல்லது ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு என்ன ஒரு மறைமுக அஜெண்டாவும் இருந்து விட்டுப் போகட்டும். தமிழ் என்ற வார்த்தை இன்னும் சில நூறாண்டுகள் அமெரிக்க மண்ணில் புழங்குமே அதற்காகவாவது இந்த இருக்கை அமைப்பதை ஆதரிப்போம்.
செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழுக்கு மத்திய மாநில அரசுகள் என்ன செய்தன? யாராவது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு போனீர்களா? அங்கு வேலை செய்யும் பேராசிரியர்கள் என்ன செய்ய முடிகிறது? எத்தனை நூல்களை கொண்டு வருகிறது? தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் என்ன செய்கிறது என்று கேட்டுப் பாருங்கள். செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனம் தரமணியில் ஒண்டுக்குடித்தனம் நடத்தி வருகிறது. எத்தனை ஆண்டுகள் ஆகிறது செம்மொழி என்று சொல்லி...? அந்தநிறுவனத்திற்கு வளாகச்சுவர் மட்டும் கட்டியுள்ளார்கள் குளோபல் மருத்துவமனை அருகே. (பள்ளிக்கரனை சதுப்பு நிலத்தில் தான்)
இதையெல்லாம் ஞாநி போன்றவர்கள் அரசிடம் எடுத்துச் சொல்லி சரியாக நடத்தி இருந்தால் ஹார்வார்டில் போய் ஏன் நாம் இருக்கை கேட்கப்போகிறோம்?

அமைப்பாக இல்லாமல் உதிரிகளாக நடுநிலைமை பேசுபவர்கள் இப்படித்தான் பேச முடியும். யாராவது எதாவது செய்யும் வரை எதுவும் பேச மாட்டார்கள். ஆரம்பித்ததும் பேசுவார்கள்.
ஹார்வார்டு உண்மையிலேய மெச்சத்தகுந்த பல்கலைக்கழகம் தான். சமஸ்கிருதம் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்துக்கும் அங்கே இருக்கை இருக்கிறதாம். தமிழைத்தவிர. எட்டுகோடி தமிழர்கள் இருக்கும் உலகில் 40 கோடி செலவில் ஒரு சிறிய ஆய்வு இருக்கை அமையப்போகிறது என்பது ஒரு நல்ல விசயம் தானே...?
ஒரு கனடிய பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமைய முயற்சி நடந்தது. அது அப்படியே இருக்க இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்கிறார் தோழர் யமுனா ராஜேந்திரன். அங்கேயும் இருக்கட்டும். இங்கேயும் இருக்கட்டும். என்ன போகிறது?
என்னைபொறுத்தவரையில் இந்த இருக்கை அமைய தமிழக அரசும் அரசியல் கட்சிகளும், தமிழ்த்தலைவர்களும் (தமிழினத்தலைவர் கலைஞர்; அய்யா தமிழ்க்குடிதாங்கி; பொங்குதமிழ்ப்போராளி அண்ணன் சீமான், ஈழத்தாய் உட்பட), தமிழ் முதலாளிகளும் பெரிய அளவிலும்
பொதுமக்களும், எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் கலைஞர்கள் யாவரும் தம்மால் முடிந்த அளவும் இந்த முயற்சிக்கு நிதியளித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
அந்த நிகழ்வு நடக்கும் போதே நான் யோசித்தேன். உலகின் பெரும் பல்கலைகழகங்கள் அனைத்திலும் தமிழுக்கு இருக்கை அமைக்க வேண்டும். நாம் கண்டுபிடிக்கத்தவறிய தொல்சிறப்புகளை அவர்களாவது வெளிக்கொண்டு வரட்டும்

http://harvardtamilchair.com/

1 கருத்து:

oshylu சொன்னது…

ரெளத்திரம் பழகிவிட்டீர்கள் போல... ? ஆனால் நியாயமான கோபம் தான் .. இங்கில்லை இங்கில்லை என எங்கும் இல்லாது செய்வார்கள் .. பாரதி கூறியது போல .. மெல்லத் தமிழ் இனி சாகும் தான் போல ...

""தமிழில் பிழைப்பு நடத்தும் பிரபலஸ்தர்கள் யாரும் இல்லை. வழக்கமான இலக்கிய கூட்டங்களில் காணக்கிடைக்கும் அரைவேக்காடுகளும் கண்ணில் படவில்லை""" மேற்கண்ட வரிகள் மனதை அள்ளிக்கொண்டதை மறுக்கமுடியாது