சனி, 19 அக்டோபர், 2019

வெறுப்பை விதைத்தல்

வாட்சாப்பில் ஒரு வீடியோ உலவுகிறது. நடிகர் மாதவன் ஒரு காமெடியை ஆங்கிலத்தில் சொல்கிறார். ஒரு மருத்துவருக்கு போன் செய்து தன் மனைவிக்கு வயிற்று வலி என்கிறார் ஒருவர். மருத்துவர் நேரில் வரச்சொல்லி பரிசோதிக்கிறார். அப்பண்டிசைடிஸ் (குடல்வாலில் தொற்று) என்று சொல்லி அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்கிறார். கணவனும் சரி பண்ணுங்க என்கிறார். சிகிச்சை வெற்றிகரமாக முடிகிறது. ஒரு வருடம் கழித்து அதே ஆள் மருத்துவருக்கு போன் செய்கிறார். மனைவிக்கு வயிற்றுவலி அதிகமாக இருப்பதாகவும் அப்பண்டிசைடிஸ் அறுவை சிகிச்சைக்கு தயார் செய்து வைக்கும் படியும் சொல்கிறார். மருத்துவர் இரண்டுமுறை தெளிவாகச் சொல்கிறார். தான் நேரில் பார்த்துதான் சிகிச்சை செய்ய முடியும் என்று. கணவன் விடாப்பிடியாக சொன்னதையே சொல்கிறார். பொறுமை இழந்த மருத்துவர் "அய்யா மனிதர்களுக்கு ஒரே ஒரு அப்பெண்டிக்ஸ் (குடல்வால்) தான் இருக்கும். உங்கள் மனைவிக்கு கடந்த ஆண்டே அதை நீக்கி விட்டேன்” என்கிறார். அதற்கு அந்தக் கணவர் சொல்கிறார் “ இருக்கலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு ஒரே ஒரு மனைவிதான் இருக்க முடியும் என்று உங்களுக்கு யார் சொன்னது? இது என் இரண்டாவது மனைவி “ என்கிறார். கூட்டம் கைத்தட்டுகிறது.
நல்ல நகைச்சுவைதான். ஆனால், மாதவன் சொல்லும் இந்த நகைச்சுவையில் அந்த மருத்துவரின் பெயர் ”மனு”. இரண்டு மனைவி உள்ளவரின் பெயர் அப்துல். இது வெறும் தற்செயலானது அல்ல. இதைச் சொன்னவரின் பின்புலமும் தற்செயலானது அல்ல. இப்படியாகத்தான் வாழைப்பழத்தில் ஊசி போல கதை பரப்புகிறார்கள்.
எனக்குத்தெரிந்த இஸ்லாமியர்கள் யாருக்கும் ஒன்றுக்கு மேல் மனைவியர் இல்லை. ஆனால் நமக்கு நன்றாகத் தெரிந்த இஸ்லாமியர் அல்லாத தலைவர்கள் (எம் ஜி ஆர் கலைஞர் போல) பலருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உண்டு. நமது சொந்தத்திலும், சுற்றுவட்டாரங்களிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் உள்ள ஆட்கள் நிறைய இருந்தார்கள். இருக்கிறார்கள். இன்னும் சிலர் அதிகாரப்பூர்வமாக அல்லாமல் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் துணையுடனும் உள்ளனர். இதையெல்லாம் கடந்துதான் இஸ்லாமியர்கள் நிறைய கல்யாணம் செய்து கொள்வார்கள் என்ற தவறான செய்தி பரவுகிறது.
எ வென்னெஸ்டே என்ற படத்தைத் தழுவிய உன்னைப் போல் ஒருவன் என்ற படத்தில் நமது நீதிமான் கமல்ஹாசன் நடித்து இருப்பார். அப்படத்தில் ஒரு காட்சியில் ஒரு தீவிரவாதி கதாபாத்திரம் சொல்வதாக ஒரு காட்சி வரும். “ என் கர்ப்பிணி மனைவி....16 வயது...வயிற்றில் இருந்து குழந்தையை எடுத்து வாளால் வெட்டிக் கொன்று விட்டார்கள்” என்று.... அட கமல்ஹாசன் படத்தில் இப்படி ஒரு காட்சியா என்று பார்த்தால் அந்தக் காட்சியில் அந்த தீவிரவாதி 16 வயது என்று சொல்லுமிடத்தில் அவர் முகபாவத்தை மீண்டும் கவனியுங்கள். உங்களுக்கும் வெறுப்பு வரும். அதைத்தான் அப்படத்தினை உருவாக்குபவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இந்த வசனம் குறிப்பாக 16 வயசு என்கிற வசனம் மூலப்படமான எ வென்னெஸ்டே படத்தில் இல்லை.

மேலே சொன்ன நகைச்சுவையை ”மக்களின் மகிழ்ச்சிக்காக மட்டும்” சொன்ன நடிகர் மாதவன் தனது மகனுக்கு பூணூல் கல்யாணம் செய்ததை பொது வெளியில் பகிர்ந்தவர். தமிழகத்தின் பிரபலமான மரபியல் ஆய்வறிஞரான சீமான் அவர்கள் இயக்கிய தம்பி என்ற படத்தில் கன்னடத்தந்தை- சிங்களத்தாய் கொண்ட நடிகை பூஜாவுடன் நடித்தவரும் இவரே....

மேற்குத்தொடர்ச்சி மலை: நிலமற்றவர்களின் பாடல்

மணி ஜெயப்பிரகாஷ்வேல்
(படச்சுருள் அக்டோபர் 2018-மேற்குத்தொடர்ச்சி மலை சிறப்பிதழில் வெளியான கட்டுரை)
இங்கே நிலவுடைமைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்தியச் சூழலில், நிலவுடைமையானது சமுதாயக் கட்டமைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப சில பத்தாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலணிய அடிமைப்படுத்துதல் மூலமாக சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின. ஏனைய நாடுகளில் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அழுத்திக்கொண்டிருந்த ஆண்டுகளில், அப்போதைய இந்தியா எனும் பிற்போக்கான நிலப்பரப்பில் நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும், சாதியக்கொடுமையும், வர்க்க முரண்பாடுகளும் என பன்முனைத்தாக்குல்களால் இந்தியச் சமூகம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியா இருபதாம் நூற்றாண்டைக் கடந்து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தாலும் இந்த அத்தனை தாக்குதல்களும் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நேரடியாகவோ மறைமுகமாகவோ அத்தனைக் காரணிகளும் சமூகச் சீர்கேட்டுக்கு அடிகோலி வருகின்றன.
இந்த எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக நிலவுடைமை உள்ளது. ஜமீந்தாரி முறை ஒழிப்பு, மன்னராட்சி ஒழிப்பு, பூதான இயக்கம், பஞ்சமி நிலங்கள், நிலச்சீர்திருத்த சட்டங்கள் என்று எத்தனையோ முன்னெடுப்புகள் இருந்த போதிலும் இன்னும் நிலமற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. நிலமற்றவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தெளிவாக இல்லை. ஆனாலும், மத்திய அரசின் புள்ளியியல்  துறையின் கீழ் வரும் மத்திய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2013 ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 110 லட்சம் குடும்பங்கள் இந்தியாவில் நிலமற்றவர்களாக உள்ளனர். தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். விவசாயம் செய்வதற்கென்று கூட அல்ல, மேற்சொன்ன எண்ணிக்கையிலுள்ள குடும்பங்களுக்கு போதுமான அளவு வீட்டு நிலம் கூட இல்லை.
தாழ்த்தப்பட்டவர்கள் நிலம் வைத்திருக்கக் கூடாது என்ற வர்ணாசிரம-நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகள் காலணிய ஆட்சியில் தளர்த்தப்பட்டாலும், பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு நிலம் என்பது இன்னமும் இல்லாத ஒன்றாகவே உள்ளது. நிலம் என்பது வெறும் சொத்து மட்டுமல்ல. அது சுய மரியாதை; அடிப்படை உரிமை; வாழ்வதற்கான நம்பிக்கை; உயிராதாரம். நிலமற்ற விவசாயக் கூலிகள் தான் கீழ் வெண்மணியில் எரிக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் சாணிப்பால் குடிக்க வைக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் மலம் திண்ண வைக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும், கோயிலில் நுழைந்ததற்காகவும், ஊர்த்தெரு வழியே பிணம் சுமந்து போனதற்காகவும் ஒடுக்கப்பட்டார்கள். இப்படியானவர்களின் எளியதொரு பாடலாக மேற்குத்தொடர்ச்சி மலை என்ற சினிமா வந்துள்ளது.
தமிழ் ஊடகங்களில் சினிமாவை விமர்சிக்கிறேன் என்று எழுதவும் பேசவும் செய்பவர்கள் பொதுவாக கதை சொல்லியே பழக்கப்பட்டவர்கள். சூர்யாவை பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார் என்ற ரீதியில் விமர்சனம் எழுதுவதாக சொல்லிக்கொள்பவர்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கதை என்று எதுவும் பிடிபடாதாதால் படத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நிலைதான் ஃபேஸ்புக் விமர்சகர்களுக்கும். எல்லா படங்களுக்கும், ஆரம்பம்-தொடர்ச்சி-முடிவு என்று இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. மொழிகளுக்கு அப்பாற்பட்ட காட்சியனுபவத்தைக் கொடுக்கிற படங்களே உலகப்படங்கள் என்ற வரிசையில் வைக்கப்படுகின்றன. அப்படியான வரிசையில் வைக்கத்தக்க அற்புதமான் சினிமாதான் மேற்குத்தொடர்ச்சி மலை.
நான் அறிந்த வரையில் தோழர் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக்கொடுத்து வருகிறது. சென்னையில் நான் பார்த்த அந்த மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் படம் முடிந்து வெளிவரும் யாவரும் ஒரு வித யோசனையுடனே வெளி வந்ததைப் பார்த்தேன். பொதுவாக வணிகமயமான தமிழ்சினிமாவில் மலைகள் அல்லது வனங்களை கதைக்களனாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களில் பெரும்பாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகையும், சில நல்ல பாடல்களையும் தருவதாக சொல்லப்படுகின்றன. மக்களும் இதை எதிர்பார்த்துதான் சினிமாவுக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்திலும் மலையும் மலைவனமும் காட்டப்படுகிறது. ஆனால் அது அந்த மக்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு பாத்திரமாகவே காட்டப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரை படத்தை பார்த்து முடிக்கும் வரை, இது ஒரு அழகான இடம் என்ற எண்னம் வரவில்லை. படத்தின் ஒட்டமே ஆக்கிரமித்துக்கொண்டது. ரசனை அனுபவத்தில் பார்க்கும் போது ஒன்றிரண்டு பரபரப்பான காட்சிகளைத்தவிர படம் மிகவும் மெதுவாக எளியவர்களின் வாழ்க்கையைப்போல நகர்கிறது. இசை ஒன்று இப்படத்தில் உள்ளது என்று நான்கைந்து இடங்களில் மட்டுமே உணர்ந்தேன். இளையராஜா ஒப்பீட்டளவில் நல்ல இசையை வழங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரை படத்துக்கு இசை பெரிதும் உதவியிருக்கிறது என்பதைக்காட்டிலும் இசை வலிந்து திணிக்கப்படவில்லை என்பதே ஆறுதலாக உள்ளது. அதே போலவே ஒளிப்பதிவு எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கலும், மேதமையைக்காட்டுகிறேன் என்று சோதிக்கவில்லை. இயல்பாக படத்தோடு ஒட்டி வருகின்றன. முற்றுமுழுதாக ஒரு இயக்குநரின் படம் இது. கரகாட்டம் முதல் கம்யூனிசம் வரை சினிமாவில் எல்லாமும் வியாபார ரீதியிலேயே பாவிக்கப்படும் தமிழ்சினிமாவில் லெனின் பாரதியின் இப்படம் குறிஞ்சிப்பூ.
படம் இருட்டில் ஆரம்பிக்கிறது. ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல, படத்தின் துவக்கத்தில் ரெங்கசாமி உறக்கத்தில் இருந்து எழுவதில் ஆரம்பித்து மலை ஏறுவது வரை காட்டப்படுகிறது. டைட்டில் மொத்தமும் இதிலேயே காட்டுகிறார்கள். உண்மையான வாழ்க்கையின் இயல்பு மாறாத காட்சியமைப்புகள் படத்தை நமக்கு அணுக்கமாக வைக்கின்றன. படத்தில் சிற்சில இடங்களில் பாத்திரங்களின் உடல்மொழிக்கும், வாயசைவுக்கும் ஒத்திசைவு இல்லாமல் இருக்கிறது. ஆனால், தொழில்முறையில் அல்லாத மக்களை நடிகர்களாக வைத்து எடுக்கும் போது இது எதிர்பார்க்கக்கூடியதே. நடிப்பு என்பதற்கு இலக்கணங்கள் வேறுபடலாம். ஆனால் இப்படத்தில் அந்தப் பகுதி மக்களே பாத்திரங்களாக அவர்களாகவே வந்து போகிறார்கள்.
நிலமற்றவர்களுக்கு சமர்ப்பணம் என்று கடைசியில் சொல்லப்பட்டாலும் படம் ஒரு முழுமையான வாழ்வின் சாத்தியப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் காட்டி விட்டுச் செல்கிறது. படம் எதையும் இதுதான் பிரச்சனை என்றும் சொல்லவில்லை. அதற்கு இதுதான் தீர்வு என்று எதையும் முன்வைப்பதில்லை. பிரச்சனைகளையும், ஓரளவுக்கு காரணங்களையும் சொல்லும் படம் தீர்வை நாம் எடுக்கட்டும் என்று விட்டு விடுகிறது. அதுதான் ஒரு படைப்பின் வேலையாகவும் இருக்க முடியும்.
ரெங்கசாமியின் தகப்பன் காலத்தில் இருந்தே மலையடிவாரத்தில் விவசாய நிலம் வாங்க வேண்டும் என்பது தீராத தாகமாக இருக்கிறது. ரெங்கசாமி ஒரு முறை நிலத்தை வாங்கும் தருவாயில் அது அவன் கைவிட்டுப் போகிறது. முடங்கிப் படுக்கிறான். ஆனால் அவன் அம்மா சொன்னதும் எந்தப் புகாரும் இன்றி மலையின் மீது ஏற ஆரம்பிக்கிறான். பிறகு மீண்டும் நிலம்வாங்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. அப்போதும் அது தவறிப்போகிறது. உடைந்து போகிறான். மலைமேலிருக்கும் ஒருவரின் உதவியால் அவனுக்கு நிலம் வாங்கும் கனவு வசப்படுகிறது. பெரும் நம்பிக்கையுடன் விவசாயம் செய்கிறான். இடையில் ஏற்படும் ஒரு எதிர்பாராத நிகழ்வில் சிறைக்குச் செல்ல நேர்கிறது. அவன் மனைவி விவசாயத்தைக் கவனிக்கிறாள். மகனை பள்ளிக்கு அனுப்புகிறாள். ஆண்டுகள் உருண்டோட ஊர்மாறுகிறது. நிறுவனமயமாக்கப்பட்ட நிர்பந்ததுக்கு ஆளாகி கடனாகிறார்கள். சிறையில் இருந்து திரும்பும் ரெங்கசாமி கடனுக்காக தன் நிலத்தை விற்க நிர்பந்திக்கப்படுகிறான். யோசனையோ தயக்கமோ இன்று தன் நிலத்தை கடனுக்கு ஈடாக எழுதிக்கொடுத்து விடுகிறான். அதே நிலத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அலகுகளுக்கு பாதுகாவலனாக வேலைக்குச் சேர்நகிறான். அவனுக்கு எந்தப் புகார்களும் இல்லை. ரெங்கசாமியை லோகு கூட்டி வரச் சொன்னார் என்பதைக் கேட்டதில் இருந்து ரெங்கசாமி எந்த வார்த்தையும் பேசுவதில்லை. ஏன் கூப்பிடுகிறார் என்று கேட்கவில்லை. ஏன் நான் நிலத்தைக்கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை; எப்படி இவ்வளவு கடன் ஆனதென்று கேட்கவில்லை. எளிய மனிதர்களின் வாழ்க்கை இப்படியாகத்தான் எந்தப் புகார்களும் இன்றி கடக்கிறது. அவர்களிடம் புகார்கள் இருந்தாலென்ன..? யார் கவனிப்பது? யார் பொருட்படுத்துவது? ஆனால் இப்படியான எளியவர்களுக்கு அவர்களைச் சார்ந்தோரே துணை நிற்கிறார்கள். இரண்டாம் முறை நிலம் வாங்கிவதற்கு பணம் குறையும் போது கணக்குப்பிள்ளை யோசனையும் உதவியும் அளிக்கிறார். கங்காணியும் நல்ல ஏலக்காய் மூட்டையை எடுத்துப் போகச் சொல்லுகிறார். அது வீணாகி இடிந்து போய்க்கிடப்பவனுக்கு கேட்காமலேயே மீரான் அத்தானிடம் இருந்து உதவி கிடைக்கிறது. இப்படியாக எங்கெங்கும் எளியவர்களுக்கு எளியவர்களே உதவுகிறார்கள். நமது அரசு அமைப்புகளோ,அரசாங்கங்களோ அவர்களின் அன்றாட வாழ்வில் தள்ளியே உள்ளார்கள். இந்த உலகில் எளியமனிதர்களின் நேசமும் ஆதரவும் இல்லையென்றால் எத்தனையோ காலத்துக்கு முன்பே இந்த உலகம் அழிந்து போயிருக்கும்.
இந்த படச்சுருள் இதழ் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலை பற்றிய சிறப்பிதழ் என்பதால் படத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அலசப்பட்டு விடும். ஆனால், நான் எனது தனிப்பட்ட ரசனையின் அனுபத்தில் எனக்கு படத்தில் பிடித்தமான வெகு சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்ட விரும்புகிறேன். படம் முழுக்க காற்று ஒரு கதாபாத்திரமாக வருகிறது. காற்று கனிவாக வீசுகிறது; காற்று நம்பிக்கையாக வீசுகிறது; காற்று வறட்சியாக வீசுகிறது; காற்று கண்ணீராக வீசுகிறது; காற்று ஆறுதலாக வீசுகிறது; காற்று எல்லாமுமாக வீசுகிறது. படத்தின் உரையாடல் எழுதிவைக்கபட்டு வசனமாக படிக்கப்பட்டதாக தெரியவில்லை. படத்தில் பாத்திரங்களாக வரும் மக்களே வசனங்களைஎழுதி விட்டதைப் போலத் தெரிகிறது. வசனங்கள் நடிப்பு எல்லாம் கச்சாவாக இருக்கின்றன. ஆனால் அதுதான் படத்தின் ஆன்மா. அந்த கொச்சைத்தனம் அல்லது கச்சாத்தனம் தான் படத்தை உண்மைக்கு பக்கத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.
கங்காணி கதாபாத்திரம் தொழிலாளர் சங்க நடைமுறைகளை மதிப்பவராக உள்ள அதே வேலை, இயல்பாக இருப்பதைப் போல வாழ்வின் சமரசங்களுக்கு ஆட்பட்டு முதலாளிகளுக்காக தொழிலாளைச் சுரண்டும் செயல்களையும் செய்கிறது. குறைவான ஆட்களை அல்லது சங்கத்தில் அல்லாத ஆட்களை வேலைக்கு வைப்பது அல்லது கூலியைப்பிடித்து வைத்துக்கொள்வது போன்ற செயல்களையும் செய்கிற அதே பாத்திரம்தான் எஸ்டேட் கைமாறி தானும் நிராதரவாக்கப்படும் போது சக தொழிலாளர்களிடம் உரிமையுடன் தன்னை கேலி செய்யச் சொல்கிறது. அதே போல பெரிதும் பேசப்படும் சகாவு சாக்கோ பாத்திரமும்; அங்கங்கே சிறு முரண்கள் தட்டுப்படுகின்றன. பிரச்சனை வருவதை முன்னரே அறிந்து செய்லாற்றுபவனே கம்யூனிஸ்ட் என்று வாதிடுகிறார்; கட்சியில் தனக்கு மேலுள்ள தலைவரிடமும் விமர்சனம் வைக்கிறார். ஆனால் ஒரு நெருக்கடியான நிலையில் மக்களைத் திரட்டிக்கொண்டு தொழிலாளர் விரோதியை கொலை செய்கிறார். அதில் பிறகு என்ன பிரச்சனை வரும் அல்லது அதை எப்படி பிரச்சனை இல்லாமல் தீர்ப்பது என்ற யோசனை இன்றி சட்டென்று முடிவெடுத்து செயலாற்றுகின்றான். இதானால் இன்னும் சிலரும் சிறைக்குப் போகிறார்கல். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் (சசி சகாவு) ஒருவர் முதலாளிகளிடம் சமரசம் செய்துகொண்டு தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கிறார். இன்னொரு கம்யூனிஸ்ட் திருமணம் செய்வதைக்கூட கட்சி நடவடிக்கைகளுக்காக தள்ளிப்போடுபவர் நெருக்கடியான நிலையில் கடுமையான நிலைப்பாட்டைக் கையில் எடுக்கிறார்.
படம் மலை சார்ந்த மக்களின் தொன்மங்களை தொட்டுச்செல்கிறது. மக்கள் இயல்பான மொழியில் தங்களுக்குள் கிண்டலும் கேலியுமாக கொண்டாடிக்கொள்கிறார்கள். விரிவான விவரணைகளோ வசனங்களோ இன்றி அந்த மக்களின் வாழ்வியல் அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளேன். காலை 6.30 மணிக்கெல்லாம் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையை ஆரம்பித்து விடவேண்டும். மழை பனி எதுவும் அவர்களுக்கு கிடையாது. சம்பள நாட்களில் வரிசையாக நின்று சம்பளம் வாங்குவதையும், எஸ்டேட் வாசலில் நின்றபடி வட்டியை அல்லது கடனை வசூல் செய்யும் ஆட்களையும் பார்த்துள்ளேன். வால்பாறையில் நான்கு கடைக்கு ஒரு அடகுக்கடை இருக்கும். மலையில் வாடும் மக்கள் அவ்வளவு எளிதாகவெல்லாம் காசு சேர்த்து விடமுடியாது. வால்பாறைக்கு போய்வரும் ஒவ்வொரு முறையும் நினைத்துக்கொள்வதுண்டு. இந்த கொண்டைஊசி வளைவு மலைப்பாதை மட்டும் தூர்க்கப்பட்டு விட்டால் இந்த வனம் மீட்கப்பட்டு விடும்; இந்த மக்கள் காசுக்கு கஷ்டப்படவேண்டியதில்லை-என்று நினைத்துக்கொள்வதுண்டு. படத்தில் கழுதை மீது பொதி சுமத்தி மலைக்கும் தரைக்கும் பொருட்களை பரிமாற்றம் செய்யும் முதியவருக்கு உடலுபாதை ரீதியாகவும் தன் பொருளாதாரம் சார்ந்தும் தலைச்சுமையாக ஆட்கள் பொருட்களை சுமப்பது ஒவ்வாததாக இருக்கிறது. அதைப்போலவே, சகாவு சாக்கோவுக்கும் மலையில் சாலை அமைப்பதும் எதிர்கால நோக்கில் தவறாகப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தேயிலை, காப்பி ஏலக்காய் மிளகுத் தோட்டங்களை நிர்மாணித்ததற்குப் பிறகு மழையின் அளவு குறைகிறது. பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அதன் பின்னான நாட்களில் தான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நதிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு பிரச்ச்னை நடக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த பெருமுதலாளிகளின் வல்லாதிக்க நிறுவனங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பரப்பு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. வருடக்குத்தகையாக ஒரு ஹெக்டேருக்கு ஒரு ரூபாய் முதல் பத்துரூபாய் வரை மட்டுமே இவர்கள் கொடுக்கிறார்கள் என்றுஒரு மூணார் வாசி சொன்னார். அந்த பத்துரூபாயைக் கொடுத்து விட்டுத்தான் வனங்களை அழித்து, நீர்வழித்தடங்களை மறித்து, விலங்குகளின் வழித்தடங்களைத் தடுத்து பெரும் எஸ்டேட்டுகளும் தொழிற்சாலைகளும், ரிசார்ட்டுகளும் கட்டப்படுகின்றன. அரசும் தன்பங்குக்கு அணைகள், வனத்துறை மாளிகைகள், கல்விநிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றை கட்டுகிறது. இப்படியான முன்னேற்றங்களுக்கு அல்லது வளர்ச்சித்திட்டங்கள், சுலபமாக மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இப்படியான சூழலியல் சீர்கேடுகளை சமன்படுத்தும்  என்று நம்புவதற்கில்லை. இந்தப்படம் குறித்து ஒரு கட்டுரையில் அல்லது ஒரு சிறப்பிதழில் எழுதி முடித்துவிட முடியும் என்று எனக்குத்தோன்றவில்லை. வெகுகாலத்துக்கு இப்படம் பேசப்படும். சிற்சில குறைகள் இல்லாமலில்லை. ஆனாலும் மிகவும் தகுதி வாய்ந்த படம்.

நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு

           - மணி ஜெயப்பிரகாஷ்வேல்
(படச்சுருள் செப்டம்பர் 2018-
நாயக பிம்ப எதிர்ப்பு சிறப்பிதழ்)
வணிக மையமான தமிழ் சினிமாவுக்குள் பிம்பங்களை மறுதலித்த அல்லது பிம்பங்களின் மீது நம்பிக்கையற்ற சில கூறுகளை மட்டும் நான் எடுத்துக்கொண்டுள்ளேன். பிம்ப எதிர்ப்பு என்பதை பிம்பத்தைக் கட்டமைக்காமல் விடுவது என்று ரீதியில் இந்தக் கட்டுரை விசாரணை செய்கிறது. பிம்பம் என்பதை வெறும் நாயக பிம்பமாக மட்டும் நாம் பார்க்க வேண்டியதில்லை. இங்கே நாயகனுக்கு பிம்பம் உள்ளது; நாயகிக்கு பிம்பம் உள்ளது; இயக்குநருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, நடன இயக்குநருக்கு, குழந்தைகளுக்கு, துணை நடிகர்களுக்கு என எல்லோருக்கும் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் உள்ளன. நாயக பிம்பமானது எம்.கே.டி. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே உள்ளது. அது சிவாஜி கணேசன்-எம்.ஜி. ராமச்சந்திரன் காலங்களில் படங்களின் போக்கையே மாற்றியமைத்து இயக்குநர்களை கைவிலங்கோடு வேலை செய்யும் கொடுமையான நிலைக்குத் தள்ள ஆரம்பித்தது. நாயகியருக்கான பிம்பம் பின்னாட்களில் கண்ணாம்பாள் போன்ற நடிகைகளை அம்மா வேடங்களுக்கு என கட்டமைப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. நிறையப் படங்களில் குழந்தைகள் காதலுக்குத் தூது போவார்கள். 80-90 களில் வந்த படங்களில் குழந்தைகள் காதலர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் அதிமேதாவியாகக் காட்டுவதும் ஒரு வகையில் பிம்பக் கட்டமைப்புதான். கலைவாணர் காலத்தில் இருந்து காட்சிக்கு ஒவ்வாத உரையாடல்களோடும், சேஷ்டைகளோடும் நகைச்சுவை நடிகர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டது. தெருக்கூத்து காலங்களில் இருந்தே கோமாளிகள் மையக்கதையோடு ஒட்டாமல் தனித்து இயங்குவதாகத்தான் அவர்களின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. சில இயக்குநர்கள் படங்களுக்கு பெயர் சூட்டுவது முதல் டைட்டில் கார்டு போடுவது, இடைவேளை விடுவது என தமது தனிப்பட்ட பிம்பத்தை படங்களில் கொண்டு வந்துள்ளனர். திரைப்படம் என்பது இப்படியான தனிநபர்களைத் தவிர்த்த ஒரு கலாபூர்வமான செயல்பாடு. ஆனால் அது வணிகம் என்ற கட்டுக்குள் வந்த போது அதை பிம்பப்படுத்துவது கட்டாயமாகிறது. வியாபாரத்துக்கு பிராண்ட் அவசியம் என்று பேசப்படும் காலம் இது.  கேரள நண்பர் ஒருவர் ஒரு விநோதமான தகவலைச் சொன்னார். தமிழ் சினிமாவில் மட்டுமே ஒரு நடிகரின் ஒரு படத்தில் வந்த பாத்திரத்தின் பிம்பத்தை இன்னொரு படத்திலும் தொடர்கிறார்கள் என்று. ஒரு படத்தில் பெரும்பாலும் அது நகைச்சுவைக்கு உபயோகப்பட்டாலும் அதுவும் ஒருவகை பிம்பக் கட்டமைப்பே. ‘வரும்… ஆனா வராது’ என்று ஒரு படத்தில் பிரபலமான அந்தக் காட்சியில் ‘என்னத்த’ கண்ணையா சொல்வார். அவரே வேறொரு படத்தில் கதாநாயகனிடம் கேட்பார் ‘தம்பி அவங்களுக்குள்ள சண்டை வருமா…வராதா….???’ அதற்கு நாயகன்   ”ஓ! நீயா!…வரும்… ஆனா வராது” என்பார். இப்படியாக சகல மட்டத்திலும் பிம்பங்களைக் கட்டமைத்தல் தமிழ் சினிமாவுக்குள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த எல்லா பிம்பங்களிலும் மிகவும் முக்கியமானதும், ஒரு படத்தின் இயல்பையே மாற்றிப்போடுவதுமானது நாயக பிம்பம் தான். சினிமா வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டதால், இவர் படம்…அவர் படம்…என நாயகர்களை மையப்படுத்தி சினிமாவின் இயல்பான கதை சொல்லும் முறை பாதிப்புக்கு உள்ளாகிறது. நாமறிந்த வகையில் தயாரிப்பாளர்களும், நாயகர்களும் பெரும்பாலான எடுத்துக்காட்டுகளில் இப்படியான பிம்பச் சிக்கல்களுடன் கூடிய சினிமாக்களை உருவாக்கி விடுகிறார்கள். ஒரு நாயகனின் கால்ஷீட் கிடைத்த பிறகே கதையை யோசிக்கும் பரிதாபத்துக்கும் இயக்குநர்கள் ஆளாகிறார்கள். அநேகப் படங்களில் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி என்று கற்பிக்கப்படுகிறது. ஓரிரு இயக்குநர்களே இப்படியான பிம்பங்களை எதிர்க்கிற அல்லது மறுக்கிற சினிமாக்களை எடுத்துள்ளார்கள்; எடுத்தும் வருகிறார்கள். ‘மகதீரா’ என்ற படத்தை எடுத்த பிறகு அந்தப் படத்தில் சிறிய பாத்திரம் ஏற்ற சுனில் என்ற நடிகரை நாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற வணிக ரீதியான வெற்றிப் படத்தைக் கொடுத்தார் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘மகதீரா’ படத்தின் வணிக வெற்றிக்கு அதன் நாயகனே காரணம் என்ற பேச்சைப் பொய்யாக்கவே ராஜமவுலி இப்படியான படத்தை எடுத்தார் என்ற கருத்தும் பரவலாக உலவுகிறது. என்றாலும் பிம்பங்களை கட்டமைக்கும் இயக்குநர்களால் அந்த பிம்பங்களை உடைக்கவும் முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் நீரோட்டம் இதுவே. சேது என்ற கச்சாவான ரவுடி பாத்திரத்தை கோமாளி போலக் காட்டமுடியும் என்பதாக படத்தில் காட்சிகள் வருகின்றன. பாரதிராஜா தன்னுடைய ‘பதினாறு வயதினிலே’ படத்தில் நாயக பிம்பத்தை உடைத்தார் என்று பலரும் சிலாகிப்பதுண்டு. ஆனால் அந்தப் படத்தில் ‘சப்பாணி’ என்ற பாத்திரத்தில் நடிப்பது கமல்ஹாசன் என்ற பிரக்ஞை நமக்கு ஏற்படுத்தாமல் போனால் ஒழிய அப்படியான சிலாகிப்பை நாம் ஏற்க முடியாது. பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில், சிறைச்சாலைக்குள் நாயகன் ஒரு காவலரால் கடுமையாக தாக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும், மூன்று நிமிடங்கள் நீளும் அந்தக் காட்சியும் ஒரு வகையில் நாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிப்பதாகவே பார்க்க முடிகிறது.
பிரபல்யம் அடைந்து விடுகிற நடிகர்கள் நடிக்கிற படங்களில் பிம்பத்தை எப்பாடு பட்டும் எதிர்க்கவோ உடைக்கவோ முடிவதில்லை. ஆகவேதான் பிம்பங்களை நம்பாமல் சினிமாவைத்தர விரும்பும், விரும்பிய இயக்குநர்கள் பிரபலமான நடிகர்களை தவிர்த்து நல்ல படம் கொடுக்க முயல்கிறார்கள். 70 களின் இறுதி மற்றும் 80 களின் ஆரம்பங்களில் தமிழ் சினிமா சில அற்புதமான இயக்குநர்களின் படங்கள் மூலமாக மெல்ல மெல்ல உயர்தரத்துக்குப் போகின்ற வேளையில், ஏ.வி.எம் நிறுவனம் சீரான இடைவெளியில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எஜமான் போன்ற நாயக துதிப் படங்களைக் கொடுத்து வந்தது. இப்படியான படங்களின் வணிக வெற்றி இந்த வகை மாதிரியில் மேலும் சில நூறு படங்களைக் கொடுக்கும் ஆபத்தை  உருவாக்கின. 2002 இல் ‘ஜெமினி’ என்னும் படத்தையும் இதே போல இந்த நிறுவனம் உருவாக்கியது. இப்படியான நிறுவன மயமான படத் தயாரிப்புகள் லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொள்ளும் போது, வெற்றிகரமான பிம்பக் கட்டமைப்பு உள்ள படங்களே உருவாக முடியும். இந்த அசாதரணமாக சூழலிலும், சில இயக்குநர்கள் பிம்பங்களை உடைத்தெறியும் பரிசோதனைகளும் செய்துள்ளார்கள்.
நாயகர்கள் என்றால் அழகானவர்கள் வசீகரமானவர்கள் என்ற பிம்பங்களை ஆரம்பத்தில் சில தமிழ் இயக்குநர்கள் உடைத்தார்கள். அதில் பாலச்சந்தர் முக்கியமானவர். நாகேஷ் என்ற நடிகரை நாயகனாக ஆக்கி (தன் நாடகீய பாணியிலான கதை சொல்லலை முன்னிறுத்திய போதும்) நாயகர்களுக்கான சிறப்பு கவனிப்பை கேள்விக்கு உள்ளாக்கினார். பின்னாட்களில் இப்படியான நாயகர்களுக்கான சிறப்பு பிம்பத்தை உடைத்தவர்களில் இயக்குநர் பாலாவும் ஒருவர்.  தனது முதல் படம் தொடங்கி எல்லாப் படங்களிலும் நாயகர்களுக்கு அவர்களின் சொந்த முகமே மறந்து போகுமளவுக்கு மாறுபட்ட தோற்றங்களைக் கொடுத்தார். ‘சேது’ படத்தில் முதல் பாதியில் இயல்பான தோற்றத்தோடு வரும் நாயகன் பிற்பாதியில் பரிதாபத்துக்குரிய தோற்றத்துக்கு மாறி விடுவார். ‘இரத்தக் கண்ணீர்’ போன்ற நிறைய படங்களில் இப்படி நாயகர்களின் தோற்றம் மாறியிருந்த போதும் ஒரு வித தீவிரத்தன்மையோடு அப்படியான மாற்றங்களை தனக்கான பிம்பமாக கட்டமைத்தவர்களில் பாலா முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வழக்கமான சில நாயக பிம்பங்களை உடைத்த இயக்குநர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர். பெரும்பாலான படங்களில் போராட்டங்களை சந்திக்கும் நாயகர்களுக்கு இறுதியில் வெற்றியே கிடைக்கும். ஆனால் டி.ராஜேந்தரின் அநேக நாயகர்கள் தோற்றுப்போவார்கள் அல்லது இறந்து போவார்கள். ஆனால் இப்படியான பிம்ப உடைப்புகள் காட்சி அனுபவத்துக்காகவோ கலைக்காவோ என்று சொல்ல முடியாத நிலை தமிழ் சினிமாவில் தான் உண்டு. மேற்சொன்ன மற்றும் அவர்களை ஒத்த நாயக பிம்பங்களை அசைத்த இயக்குநர்கள் அதை நாயக பிம்பங்களை உடைப்பதற்கான உந்துதலில் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்ப வசமாக நாயக பிம்பங்களை உடைத்த சில சினிமாக்கள்-இயக்குநர்கள் உண்டு. பாலுமகேந்திரா, பாரதிராஜா மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் படங்களில் நாயகர்களுக்கு அவர்களின் சொந்த பிரபல்யத்தை இவர்களின் படங்களில் பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அப்படியான பிம்ப உடைப்புகள் இப்படியான இயக்குநர்களின் பிம்பங்களை கட்டமைத்துக்கொள்ளவே உதவியது.
வணிகசினிமாவின் பரப்பில் நாயக பிம்பங்களை உடைத்த இயக்குநர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரன் மற்றும் தேவராஜ்-மோகன். இதில் இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்த் மாதிரியான பிரபலமான நடிகர் பில்லா போன்ற நாயகத்துதி படத்தில் நடிக்கிற காலக்கட்டத்தில் ஜானி போன்றதொரு படத்தைக் கொடுத்தார். ஜானி நாயக பிம்பங்களை உடைத்த படம் அல்ல என்ற போதும் நாய பிம்பங்களை மறுதலித்த படங்களில் முக்கியமான படம். மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்திலும் நாயகனின் பாத்திரம் வழமையான பிம்பங்களை உதறியதாகவே இருக்கும். 1970-80 களில் சுமார் 17 படங்கள் இயக்கிய தேவராஜ்-மோகன் இயக்குநர் இணை நாயக பிம்பங்களை மறுதலித்த அல்லது ஒதுக்கிய ஒன்றாகும். இவர்களது பத்துக்கும் மேற்பட்ட படங்களின் நாயகன் சிவக்குமார். இந்த இரட்டையர்களின் மிக முக்கியமான படம் 1979 இல் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்ட கதையாக கட்டமைக்கப்பட்ட இந்தச் சினிமாவில் ‘செம்பட்டை’ எனும் கதையின் நாயகப் பாத்திரம் முக்கியமானது. வணிக மையமான தமிழ் சினிமா இலக்கணப்படி நாயகியர் அனைவரும் ஒழுக்கத்தில் சுத்தமானவர்கள். அவர்கள் கற்பு நெறி வழுவுவதில்லை. இந்த இலக்கணமும் நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவே. பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களின் இணையர் பாத்திரங்கள் கையில் மதுவோடும் அரைகுறை ஆடையோடும் இருப்பர். நாயகி நாயகனைத்தவிர மற்றெல்லாரிடமும் மிக ஒழுக்கமாக இருப்பதாகவே அநேகப் படங்கள் இருக்கும். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் நாயகிக்கு வேறொரு ஆணின் உறவு முக்கியமாகப் படும். அதைக் கேட்டும் அல்லது கண்டும் நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி வெட்டாமல், தன்னுயிரை மாய்த்துக் கொள்வான். இப்படியான காட்சியமைப்புகள் உள்ள படங்கள் அந்தக் காலக்கட்டங்களில் அவ்வப்போது வந்த போதும் அப்படியான படங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் பிரபல்ய விசையில் சிக்காத நாயகர்களே.
தமிழ் சினிமாவின் எல்லா காலக்கட்டங்களிலும், பிரபல வெளிச்சம் படாத சில நடிகர்கள் நாயகர்களாக சில படங்களில் நடித்து வந்துள்ளனர். நிதி நெருக்கடி போன்ற ஏதேதோ காரணங்களுக்காக அவர்களை இயக்குநர்கள் உபயோகப்படுத்தி வந்த போதும் அப்படியான நடிகர்கள் நடித்த அநேக திரைப்படங்கள் நாயக பிம்பங்களை மறுதலித்த அல்லது நாயக பிம்பங்களை பெரிதாக தூக்கிப்பிடிக்காத படங்களே. நாகேஷ் நாயகனாக நடித்திருந்த போதும் அவருக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டது. அதுவும் ஒரு பிம்பமாக நின்று விட்டது. அப்படியான முத்திரைகள் பிம்பங்கள் ஏதுமன்றி படங்களில் நடித்த நாயகர்களின் குறிப்பிடத்தக்கவர்கள் சிவக்குமார், ராஜேஷ், சுதாகர், ராஜா போன்றோர்.  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘செம்பட்டை’ என்ற பாத்திரத்தை ஏற்று நடித்த சிவக்குமாரால் எந்த யோசனையும் இன்றி அதற்கு நேர் மாறான ‘ஜே.கே.பி’ என்ற மிடுக்கான கர்நாடக சங்கீத வித்வான் வேடத்தில் சிந்து பைரவியில் நடிக்க முடிந்தது. ‘கிழக்கே போகும் ரயில்’ துவங்கி பல படங்களில் நடித்துள்ள சுதாகர் அந்தக் காலக்கட்டங்களில் சிறிய பட்ஜெட் படங்களின் விருப்பமான நாயகனாக எந்த பிம்பமும் இன்றி நடித்துள்ளார். எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் எனத்தொடங்கி நடிகர்களின் பிரபல்யத்துக்கு ஏற்ப தமிழின் வணிகத்திரைப்படங்கள் நாயக பிம்பம் என்ற மாய வலைக்குள் விழுந்தன. இயக்குநர்களே நினைத்தாலும் நாயக பிம்பத்தை உடைக்க முடியாத அளவுக்கு நடிகர்களின் பிரபல்யம் ஆட்டிப்படைத்தது. ஆட்டிப்படைக்கிறது. ஒளிவிளக்கு என்ற படத்தைத் தவிர எம்.ஜி ராமச்சந்திரன் வேறு படங்களில் குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தது கூட இல்லை; டி.ராஜேந்தரின் நாயகிகள் எவ்வளவு சிறிய உடைகளோடு ஆடினாலும் அவர்களின் மேல் சுண்டு விரல் கூட பட்டு விடாமால் தொடாமல் நடிப்பார்; இது போன்ற சினிமாக்களுக்கு அப்பாற்பட்ட ஒழுக்கசீல பிம்பங்களும் நாயக பிம்பங்களை உயர்த்திப் பிடித்தன.
ஏ.பி. நாகராஜன் போன்ற இயக்குநர்கள் புராண இதிகாசப் பாத்திரங்களை நாயகப் பாத்திரங்களாக்கி படங்களைக் கொடுத்து வந்தனர். அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்களின் தாக்கமாக அல்லது திராவிட இயக்கங்களின் பிரச்சார சாதனங்களாக வந்த சினிமாக்கள் பெரும்பாலும் கதையை முன்னிறுத்தின. நாயகர்களின் தனிப்பட்ட பிம்பம் அதில் முன்னிறுத்தப் படவில்லை. இப்படியான சிறிய மாற்றங்களைக்கூட ஏ.பி. நாகராஜனின் புராணப்படங்கள், தேவர் பிலிம்ஸின் பக்தி மற்றும் விலங்குகளை முன்னிறுத்திய படங்கள் சிதறடித்தன. பின்னாட்களில் திராவிட இயக்க பிரச்சாரங்களுக்காக முன்னிறுத்தப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பிரபல நடிகர்கள் நாயக பிம்பங்களை தமக்காக வளர்த்துக்கொண்டனர். சினிமாக்களில் இவர்களுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து உடைந்து நொறுங்கின. ‘காலா’ படத்தில் நாயகன் அறிமுகக் காட்சியில், கரிகாலன் ஒரு சிறுவனின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகும் காட்சியில் ரஜினிகாந்த்தை பொருத்திப் பார்க்க அவர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் முதிர்ச்சி இல்லாமல் போகலாம். ஆனால் ஊடகங்கள் கூட அந்தக் காட்சியைப் போதாத காட்சியென்றே வர்ணித்தன. ரஞ்சித் அந்தக் காட்சியைக்கூட ஒரு வகையான பிம்பக் கட்டமைப்புக்கு வைத்திருக்க வாய்ப்புண்டு. பாலா தனக்கென ஒரு பிம்பத்தை நிறுவ நாயகர்களை தோற்றப்பொலிவின்றி காட்டுவது போல.
காவிய புராண காலங்களில் இருந்தே இந்தியாவிலும் தமிழகத்திலும் கலை இலக்கியங்களில் பிம்பமாக கட்டமைக்கபடும் நாயகப் பாத்திரங்கள் எப்போதும் உண்டு.  இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நாயகர்களுக்கும் கட்டமைப்பட்ட பிம்பம் உண்டு. பழந்தமிழ் இலக்கியங்களிலும் விதந்தோதப்படும் நாயகப் பாத்திரங்கள் உண்டு. இராஜபார்ட் என்ற பெயரில் கடந்த நூற்றாண்டின் நாடகங்களில் நாயக பிம்பம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. வசீகரமான குரல்வளம் மிக்க நடிகர்களே அந்தப் பிம்பங்களுக்குள் பொருந்தி நாடக நடிகர்களாக வலம் வந்தனர். புராண நாடகங்களின் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி பெற்ற தமிழ் சினிமா அதே போலவே தோற்றப்பொலிவும் குரல்வளமும் மிக்க நாயகர்களைக் கொண்டே வளர்ந்தது. ஆனால் ஆரம்ப கட்ட படங்களில் நாயகனின் பிரபல்யம் படங்களின் போக்கை நிர்ணயித்ததாக தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ராமச்சந்திரன்-சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் வந்த பின் நாயகர்களின் தனிப்பட்ட பிரபல்யம் நாயக பிம்பத்தை கட்டமைத்து சினிமாக்களின் இருப்பையே மாற்றின. ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் உச்ச நட்சத்திரம் என்ற மிகை பிரபல்யத்தை அடைந்ததும், சினிமாவில் நடித்தவர்கள் அரசியல் தலைமை ஏற்றதும், நாயக பிம்பங்களை இன்னும் தீவிரமாக கட்டமைக்கக் காரணமாக அமைந்தன. ஆரம்பக் கட்டங்களில் இருந்தே சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதையும், காட்சி மொழியே சினிமாவின் ஆன்மா என்பதையும் நாயக பிம்பங்கள் மறைத்து விட்டன. அவ்வப்போது சில சிறிய சலனங்கள் ஏற்பட்ட போதும் நாயக பிம்பங்களை உடைத்துப் போட்டு சினிமாவின் ஆன்மாவைத் தூக்கி ப்பிடிக்கும் படங்கள் தமிழில் இனிமேல் தான் வரவேண்டும்.
jayaprakashvel@gmail.com

செவ்வாய், 7 மே, 2019

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது

தமிழக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வட இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எல்லோரும் ஒன்று என்பவர்கள் உண்மையை அறியாதவர்கள் அல்லது அறிந்தே மறைப்பவர்கள். தமிழகத்தில் மூன்று தாழ்த்தப்பட்ட சாதிகள் பெரும்பான்மையாக அறியப்பட்டுள்ளன. பள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர். இவர்களில் சக்கிலியர் மேற்சொன்ன மற்ற இரு தாழ்த்தப்பட்ட சாதிமக்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படுபவர்கள். படி நிலையில் அரசியல் சமூக தளங்களில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள். இந்த மூன்று மக்களுமே ஒரே நிறையில் வராத போது வட நாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி ஒரே தட்டில் வருவார்கள்? என்கிற போது தலித் என்ற சொல்லின் பொருத்தப்பாடு கேள்விக்குள்ளாகிறது.

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்கள் மற்றும் எங்கள் பகுதியான திருச்சி கரூர் பகுதிகளில் எல்லாம் பள்ளர் இன மக்களிடம் நிலம் உள்ளது. வட பகுதி மாவட்டங்களான ஆற்காடு கடலூர் விழுப்புரம் பகுதிகளில் எல்லாம் பறையர் அல்லது ஆதிதிராவிடர் என குறிக்கப்படும் இன மக்களிடம் நிலம் உள்ளது. இதனாலேயே இவர்கள் இருவராலும் அரசியல் இயக்கங்களை முன்னெடுத்துச்செல்ல முடிகிறது. இந்தப்பகுதிகளில் உள்ள தம்மை ஆதிக்கசாதியினராக கருதிக்கொள்ளும் சாதியினரிடம் போராட்ட குணத்தோடு எதிர்த்து நிற்க முடிவதற்கு ஆதரவாக இருப்பது ஒரளவிலான அவ்ர்களின் பொருளாதார சுயசார்புதான். நிலமே இல்லாத கூலிகளாகவே அடிமைகளாகவே காலத்தை கழிக்கிற சக்கிலிய இன மக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களால் நிமிரவே முடிவதில்லை. இந்த நிலையில் இந்த மூன்று மக்களையும் இணைக்கிற விதமாக எந்த தாழ்தப்பட்டவர்களின் அரசியல் இயக்கமும் தம்து செயல் நோக்கை வைத்துக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்குள்ள சாதிய பற்றுதான்.
இந்த நிலையில் எந்தச் சாதியானாலும் ஒடுக்கப்படுகிற எல்லா மக்களையும் இணைக்கிற ஒரு குடை உன்டென்றால் அது வர்க்கம் சார்ந்த போராட்டம் தான். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான அரசியல் இயக்கங்கள் போராடி உரிமைகளைப்பெறுவதாக கருதினாலும் அது அவர்களின் ஒரு சாராருக்கே முன்னேற்றம் தரும். இட ஒதுக்கீட்டில் படித்து அதிலேயே வேலை வாங்கி நகர்ப்புறங்களில் வசதியான வாழ்வோடு தமது சாதிய அடையாளங்களை வசதியாக மறந்து விடுகிற ஒரு வர்க்கம் உருவாகி விட்டது. இந்த விபத்து தான் சாதிய ஒழிப்புப் போராட்டங்களின் முதல் சறுக்கல். சாதிய ஒழிப்பு என்பது ஒரு சாதியினருக்கு உரிமைகள் பெற்றுத்தருவதோ சமூகத்தில் அவர்களின் மதிப்பைக் கூட்டுவதோ அல்ல. சாதியை மறைப்பதாலேயோ ம்றுப்பதாலேயொ சாதி ஒழிந்து விடப்போவதில்லை. வர்க்கங்கள் ஒழிகின்ற போதுதான் சாதி ஒழியும். வர்க்கங்கள் ஒன்று என்றாகிற போது சாதியே அங்கே இருக்காது. மதமும் தேவை இல்லை. தோழர் லெனின் சோவியத்தை நிர்மாணித்த பின்னர் சர்ச்சுகளையா கொளுத்தினார்? எல்லம் சமம் என்கிற ஒரு பொன்னுலகை படைத்து முன்னால் காட்டும் போது அவர்கள் அதுகாறும் நம்பி வந்த கடவுள் சாதி மதம் என்ற அடையாளங்கள் தேவையற்றுப்போகும்.

திராவிடத்தால் வாழ்கிறோம்

திராவிடத்தால் வாழ்கிறோம்
-மணி ஜெயப்பிரகாஷ்வேல்
கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு மிக கடுமையான நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. ஆளும் பாஜக அரசு ’தேவ’பலத்தில் உள்ளது. அது தனது பக்கச்சார்பான நிலைப்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்திக்கொண்டே வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்துத்துவா என்ற கருத்தியலும் முன்னெப்போதை விடவும் கடுமுனைப்பாக தளம் அமைத்து வருகிறது. இந்தச் சூழலில் கடந்த சில ஆண்டுகளாக திராவிடக் கருத்தியல் மீண்டும் மறுதேவைக்கு வந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கும் முன்னதாக, எந்த நோக்கங்களுக்காக திராவிட இயக்கம் தோன்றியதே அதே நோக்கங்களுக்காக இப்போதும், திராவிட இயக்கம் வலுப்பெற்று வருகிறது. 1967 என்ற வரலாற்று ஆண்டுக்குப் பிறகு திராவிட இயக்கத்தின் அங்கமான திமுக அரசதிகாரத்திலும் பங்கேற்று வந்துள்ளது. இன்றைக்கு மத அடிப்படைவாதமும், மத அடிப்படையிலான போலித்தேசியவாதமும் நாட்டின் ஒற்றுமைக்கு சவால் விடுகிற வகையிலான அபாயகரமான சூழலில் மாற்று அரசியல் சக்திகள் வலுப்பெறவும் ஒன்றினையவும் காலம் கனிந்துள்ளது.இன்றைய சூழலில் எல்லா கருத்தியல்களையும் இந்துதுவா உள்வாங்கி தனக்குள் செரித்து வருகிறது. பவுத்தம், சமணம், தமிழ்த்தேசியம், தலித்தியம், அம்பேத்கர், பகத்சிங் என எல்லாவற்றையும் தனதாக்கிக்கொள்ளும் முனைப்பில் அது ஈடுபட்டிருக்கும் போது ஒரு ஒருக்காலும் இணக்கம் காணமுடியாத, சொந்தம் கொண்டாட முடியாத கருத்தியல் திராவிடம் ஆகும். ஒருக்காலும் இந்துத்துவ பெரியார் என்று உரிமை கொண்டாடிவிட முடியாது. ஆகவே திராவிடம் என்ற கருத்தியல் தற்போதைய சூழலில் இந்துத்துவத்தை எதிர்க்க மக்களுக்கு இருக்கும் தெரிவு என்பதை சுபகுணராஜன் கோடி காட்டிவிட்டுத்தான் திராவிட அரசியல் வரலாற்றுச்சுவடுகள் என்ற கருத்தரங்கை (செப்டம்பர் 29-30, 2018) சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் துவக்கி வைத்தார். சென்னையில் சுமார் 18 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன். சில திரையிடல்களைத்தவிர அனைத்து நிகழ்ச்சிகளும் கட்டணம் ஏதுமின்றித்தான் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுக்கு பங்கேற்பு கட்டணம் கட்டி கலந்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. துறைசார்ந்த கருத்தரங்குகளில் பங்கேற்பு கட்டணம் கட்டுவது வழக்கமான நடைமுறை. அதே நடைமுறை பின்பற்றப்பட்டது. கருத்தரங்கு சரியான நேரத்துக்கு தொடங்கப்பட்டது. நேரவரையறை சற்றேரக்குறைய மிகச்சரியாக பின்பற்றப்பட்டது. கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறப்புரையாளர்கள் பலரும் கல்விப்புலம் சார்ந்தவர்கள் என்பதால் நிகழ்வில் அதிகம் எதிர்பார்த்துதான் போனேன். ஒரே ஒரு உரையைத்தவிர மற்ற அத்தனை உரைகளையும் முழுதாகக் கேட்டேன். தமிழில் இப்படி ஆய்வியல் நோக்கிலான கருத்தரங்கில் முதன் முதலாக பங்கேற்றேன். ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருந்தது.
சமீபகாலத்தில் திராவிடம் 2.0, திராவிடச்சிறகுகள், திராவிடச்சுவடுகள் என்று தொடர்ச்சியாக புதியவர்கள் முன்னெடுக்கும், பங்கெடுக்கும் வெகுஜனதளத்திலான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல திராவிடக்கருத்தாளர்களும் திராவிடத்தின் கூறுகளை, திராவிட அரசியலின் தேவையை, திராவிட அரசுகளின் பொருத்தப்பாட்டை வெகுமக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அவை பெரும்பாலும் பெரியார்-அண்ணா-கலைஞர் போன்ற ஆளுமைகளை ஒட்டியும் திராவிடம் எதிர் தமிழ்த்தேசியம் போன்ற சமகால இழுத்தடிப்புகளுக்கு பதில் சொல்வதாயும் அமைந்து வருகின்றன. அந்த எல்லைகளைத்தாண்டி இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு கருத்தியல் ரீதியிலான தரவுகளை அளிக்கக்கூடிய மிக முக்கியமான நிகழ்வாக திராவிட அரசியல் வரலாற்றுச்சுவடுகள் என்ற கருத்தரங்கை நான் அவதானிக்கிறேன். டெல்லியைத்தொடர்ந்து இங்கேயும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கள் திராவிட அரசியலின் மறுமலர்ச்சிக்கு கருத்தியல் அடித்தளம் என்ற முறையிலும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். சமூகவியல், மானுடவியல் மற்றும் வரலாற்றுக்கோட்பாடுகளின் அடிப்படையில்
முதல்நாளின் முதலாம் அமர்வு தமிழ்ச்சமூகத்தில் திராவிட இயக்கங்கள் உருவாக்கிய சமூக மறுகட்டமைப்பை விவாதித்தது. இரண்டாவது அமர்வு சமூகநீதியினை முன்வைத்து கல்வித்தளத்தில் திராவிட இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விவாதித்தது. முதல்நாளின் மூன்றாம் அமர்வு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் திராவிட இயக்கச் செயல்பாடுகளை முன்வைத்தது. திராவிட இயக்கங்கள் இடைநிலைச்சாதிகளிடம் அதிகாரத்தைக்கொடுத்து விட்டன என்பதை மாற்றும் விதமாக இந்த அமர்வு இருந்தது.  இரண்டாம் நாளில் நிகழ்ந்த நான்காம் அமர்வு திராவிட இயக்கத்தின் அடிப்படைக்கொள்கைகளையும் குறிப்பாக சமதர்ம சமூகநீதி மற்றும் பெண்களுக்கான தளங்களில் திராவிட இயக்கத்தின் தடங்களையும் எடுத்துக்காட்டியது. ஐந்தாம் அமர்வு மிக முக்கியமானது. வெறும் மேலெழுந்தவாரியாக அரசியல் உதாரணங்களாலும் சில ஆழமான கருத்தியல் கோட்பாடுகளாலும் விளக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் சமூக-பொருளாதரக் கட்டமைப்பில் திட்டமிட்டு நிகழ்த்திய பாய்ச்சலை பொருளாதாரா அளவீடுகள் மூலமாகவும் சமூகக்கட்டமைப்பில் நிகழ்ந்துள்ள நேரடியான முன்னேற்றங்களைக் எடுத்துக்காட்டியும், திராவிட இயக்கங்களால் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள சமூக பொருளாதார முன்னேற்றங்கள் காக்கை உட்கார விழுந்த பனம்பழம் அல்ல என்று விளக்கியது. ஆறாம் மற்றும் இறுதி அமர்வாக திராவிட இயக்கங்களின் பன்மை அடையாளம் மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களை முன்வைத்தது.
ஒவ்வொரு அமர்விலும் வழங்கப்பட்ட உரைகளை தனித்தனியாகவே எழுத வேண்டும். ஆனால் இந்தக் கருத்தரங்கு மொத்தமாக எனக்குக்கொடுத்த அனுமானத்தை மட்டும் மிகச்சுருக்கமாக பதிவு செய்கிறேன். திராவிட இயக்கம் என்பது ஒரு அடிப்படைப்பிடிப்பற்ற சந்தர்ப்பவாத இயக்கம்; திராவிடம் என்ற கருத்தியலே சான்றுகள் இல்லாத வசதிக்காக கட்டமைக்கப்பட்ட கருத்தியல் போன்ற மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளையும், திராவிட இயக்கங்களை, ஊழல், தேர்தல் கணக்குகள் போன்ற நடைமுறைக்காரணங்களை சொல்லி ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதையும் இந்தக் கருத்தரங்கு அடித்து நொறுக்கியுள்ளது. திராவிடம் என்றக் கருத்தியல் வெறும் பெயர்களுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் அடிப்படைப் பெருமிதங்களுல் ஒன்றாக நிலைபெற்று விட்டது. நாட்டின் மற்றெல்லா பகுதிகளிலும் சமீபகாலங்களாக உணர்ந்து வரும் சில அடிப்படை உரிமைகளையும் திராவிட இயங்கங்களும், குறிப்பாக அதன் அரசியல் அலகுகளான திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பாகவே அறிந்து தமது அரசியல் வியூகங்களை வகுத்துக்கொண்டுள்ளனர். அதற்கும் மேலாக ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பதைத்தாண்டி தமிழகம் என்ற தனிப்பெரும் கலாச்சாரப்பரப்பின் தொன்மை அடையாளங்களைக் காத்தும், தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதர முன்னேற்றத்துக்கு அடித்தளமிட்டும், சமூகநீதியையும் சமதர்மத்தையும் பெண்விடுதலையையும் முன்னெடுத்தும் தடம் பதிக்கும் திராவிட இயக்க அமைப்புகள் தாங்கிப்பிடிக்க வேண்டியன. திமுக போன்ற திராவிட இயக்க அரசியல் அலகுகள் இந்தக் கருத்தரங்கை தமது வெகுஜன அரசியல்லுக்கான கருத்தியல் அடித்தளமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். என்னளவில் திராவிடம் என்பது சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு கருத்தியல் அடிப்படையும், அரசியல் தெளிவும், நடைமுறை பயன்களும் மிக்கதொரு வெற்றிகரமான கருத்தியல் என்றே நான் பார்க்கிறேன்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அக்டோபர் 2018 படச்சுருள் இதழில் வெளியான கட்டுரை
மேற்குத்தொடர்ச்சி மலை: நிலமற்றவர்களின் பாடல்
மணி ஜெயப்பிரகாஷ்வேல்
இங்கே நிலவுடைமைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்தியச் சூழலில், நிலவுடைமையானது சமுதாயக் கட்டமைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப சில பத்தாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலணிய அடிமைப்படுத்துதல் மூலமாக சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின. ஏனைய நாடுகளில் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அழுத்திக்கொண்டிருந்த ஆண்டுகளில், அப்போதைய இந்தியா எனும் பிற்போக்கான நிலப்பரப்பில் நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும், சாதியக்கொடுமையும், வர்க்க முரண்பாடுகளும் என பன்முனைத்தாக்குல்களால் இந்தியச் சமூகம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியா இருபதாம் நூற்றாண்டைக் கடந்து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தாலும் இந்த அத்தனை தாக்குதல்களும் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நேரடியாகவோ மறைமுகமாகவோ அத்தனைக் காரணிகளும் சமூகச் சீர்கேட்டுக்கு அடிகோலி வருகின்றன.

இந்த எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக நிலவுடைமை உள்ளது. ஜமீந்தாரி முறை ஒழிப்பு, மன்னராட்சி ஒழிப்பு, பூதான இயக்கம், பஞ்சமி நிலங்கள், நிலச்சீர்திருத்த சட்டங்கள் என்று எத்தனையோ முன்னெடுப்புகள் இருந்த போதிலும் இன்னும் நிலமற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. நிலமற்றவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தெளிவாக இல்லை. ஆனாலும், மத்திய அரசின் புள்ளியியல்  துறையின் கீழ் வரும் மத்திய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2013 ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 110 லட்சம் குடும்பங்கள் இந்தியாவில் நிலமற்றவர்களாக உள்ளனர். தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். விவசாயம் செய்வதற்கென்று கூட அல்ல, மேற்சொன்ன எண்ணிக்கையிலுள்ள குடும்பங்களுக்கு போதுமான அளவு வீட்டு நிலம் கூட இல்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் நிலம் வைத்திருக்கக் கூடாது என்ற வர்ணாசிரம-நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகள் காலணிய ஆட்சியில் தளர்த்தப்பட்டாலும், பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு நிலம் என்பது இன்னமும் இல்லாத ஒன்றாகவே உள்ளது. நிலம் என்பது வெறும் சொத்து மட்டுமல்ல. அது சுய மரியாதை; அடிப்படை உரிமை; வாழ்வதற்கான நம்பிக்கை; உயிராதாரம். நிலமற்ற விவசாயக் கூலிகள் தான் கீழ் வெண்மணியில் எரிக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் சாணிப்பால் குடிக்க வைக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் மலம் திண்ண வைக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும், கோயிலில் நுழைந்ததற்காகவும், ஊர்த்தெரு வழியே பிணம் சுமந்து போனதற்காகவும் ஒடுக்கப்பட்டார்கள். இப்படியானவர்களின் எளியதொரு பாடலாக மேற்குத்தொடர்ச்சி மலை என்ற சினிமா வந்துள்ளது.

தமிழ் ஊடகங்களில் சினிமாவை விமர்சிக்கிறேன் என்று எழுதவும் பேசவும் செய்பவர்கள் பொதுவாக கதை சொல்லியே பழக்கப்பட்டவர்கள். சூர்யாவை பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார் என்ற ரீதியில் விமர்சனம் எழுதுவதாக சொல்லிக்கொள்பவர்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கதை என்று எதுவும் பிடிபடாதாதால் படத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நிலைதான் ஃபேஸ்புக் விமர்சகர்களுக்கும். எல்லா படங்களுக்கும், ஆரம்பம்-தொடர்ச்சி-முடிவு என்று இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. மொழிகளுக்கு அப்பாற்பட்ட காட்சியனுபவத்தைக் கொடுக்கிற படங்களே உலகப்படங்கள் என்ற வரிசையில் வைக்கப்படுகின்றன. அப்படியான வரிசையில் வைக்கத்தக்க அற்புதமான் சினிமாதான் மேற்குத்தொடர்ச்சி மலை.

நான் அறிந்த வரையில் தோழர் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக்கொடுத்து வருகிறது. சென்னையில் நான் பார்த்த அந்த மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் படம் முடிந்து வெளிவரும் யாவரும் ஒரு வித யோசனையுடனே வெளி வந்ததைப் பார்த்தேன். பொதுவாக வணிகமயமான தமிழ்சினிமாவில் மலைகள் அல்லது வனங்களை கதைக்களனாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களில் பெரும்பாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகையும், சில நல்ல பாடல்களையும் தருவதாக சொல்லப்படுகின்றன. மக்களும் இதை எதிர்பார்த்துதான் சினிமாவுக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்திலும் மலையும் மலைவனமும் காட்டப்படுகிறது. ஆனால் அது அந்த மக்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு பாத்திரமாகவே காட்டப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரை படத்தை பார்த்து முடிக்கும் வரை, இது ஒரு அழகான இடம் என்ற எண்னம் வரவில்லை. படத்தின் ஒட்டமே ஆக்கிரமித்துக்கொண்டது. ரசனை அனுபவத்தில் பார்க்கும் போது ஒன்றிரண்டு பரபரப்பான காட்சிகளைத்தவிர படம் மிகவும் மெதுவாக எளியவர்களின் வாழ்க்கையைப்போல நகர்கிறது. இசை ஒன்று இப்படத்தில் உள்ளது என்று நான்கைந்து இடங்களில் மட்டுமே உணர்ந்தேன். இளையராஜா ஒப்பீட்டளவில் நல்ல இசையை வழங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரை படத்துக்கு இசை பெரிதும் உதவியிருக்கிறது என்பதைக்காட்டிலும் இசை வலிந்து திணிக்கப்படவில்லை என்பதே ஆறுதலாக உள்ளது. அதே போலவே ஒளிப்பதிவு எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கலும், மேதமையைக்காட்டுகிறேன் என்று சோதிக்கவில்லை. இயல்பாக படத்தோடு ஒட்டி வருகின்றன. முற்றுமுழுதாக ஒரு இயக்குநரின் படம் இது. கரகாட்டம் முதல் கம்யூனிசம் வரை சினிமாவில் எல்லாமும் வியாபார ரீதியிலேயே பாவிக்கப்படும் தமிழ்சினிமாவில் லெனின் பாரதியின் இப்படம் குறிஞ்சிப்பூ.

படம் இருட்டில் ஆரம்பிக்கிறது. ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல, படத்தின் துவக்கத்தில் ரெங்கசாமி உறக்கத்தில் இருந்து எழுவதில் ஆரம்பித்து மலை ஏறுவது வரை காட்டப்படுகிறது. டைட்டில் மொத்தமும் இதிலேயே காட்டுகிறார்கள். உண்மையான வாழ்க்கையின் இயல்பு மாறாத காட்சியமைப்புகள் படத்தை நமக்கு அணுக்கமாக வைக்கின்றன. படத்தில் சிற்சில இடங்களில் பாத்திரங்களின் உடல்மொழிக்கும், வாயசைவுக்கும் ஒத்திசைவு இல்லாமல் இருக்கிறது. ஆனால், தொழில்முறையில் அல்லாத மக்களை நடிகர்களாக வைத்து எடுக்கும் போது இது எதிர்பார்க்கக்கூடியதே. நடிப்பு என்பதற்கு இலக்கணங்கள் வேறுபடலாம். ஆனால் இப்படத்தில் அந்தப் பகுதி மக்களே பாத்திரங்களாக அவர்களாகவே வந்து போகிறார்கள்.
நிலமற்றவர்களுக்கு சமர்ப்பணம் என்று கடைசியில் சொல்லப்பட்டாலும் படம் ஒரு முழுமையான வாழ்வின் சாத்தியப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் காட்டி விட்டுச் செல்கிறது. படம் எதையும் இதுதான் பிரச்சனை என்றும் சொல்லவில்லை. அதற்கு இதுதான் தீர்வு என்று எதையும் முன்வைப்பதில்லை. பிரச்சனைகளையும், ஓரளவுக்கு காரணங்களையும் சொல்லும் படம் தீர்வை நாம் எடுக்கட்டும் என்று விட்டு விடுகிறது. அதுதான் ஒரு படைப்பின் வேலையாகவும் இருக்க முடியும்.

ரெங்கசாமியின் தகப்பன் காலத்தில் இருந்தே மலையடிவாரத்தில் விவசாய நிலம் வாங்க வேண்டும் என்பது தீராத தாகமாக இருக்கிறது. ரெங்கசாமி ஒரு முறை நிலத்தை வாங்கும் தருவாயில் அது அவன் கைவிட்டுப் போகிறது. முடங்கிப் படுக்கிறான். ஆனால் அவன் அம்மா சொன்னதும் எந்தப் புகாரும் இன்றி மலையின் மீது ஏற ஆரம்பிக்கிறான். பிறகு மீண்டும் நிலம்வாங்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. அப்போதும் அது தவறிப்போகிறது. உடைந்து போகிறான். மலைமேலிருக்கும் ஒருவரின் உதவியால் அவனுக்கு நிலம் வாங்கும் கனவு வசப்படுகிறது. பெரும் நம்பிக்கையுடன் விவசாயம் செய்கிறான். இடையில் ஏற்படும் ஒரு எதிர்பாராத நிகழ்வில் சிறைக்குச் செல்ல நேர்கிறது. அவன் மனைவி விவசாயத்தைக் கவனிக்கிறாள். மகனை பள்ளிக்கு அனுப்புகிறாள். ஆண்டுகள் உருண்டோட ஊர்மாறுகிறது. நிறுவனமயமாக்கப்பட்ட நிர்பந்ததுக்கு ஆளாகி கடனாகிறார்கள். சிறையில் இருந்து திரும்பும் ரெங்கசாமி கடனுக்காக தன் நிலத்தை விற்க நிர்பந்திக்கப்படுகிறான். யோசனையோ தயக்கமோ இன்று தன் நிலத்தை கடனுக்கு ஈடாக எழுதிக்கொடுத்து விடுகிறான். அதே நிலத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அலகுகளுக்கு பாதுகாவலனாக வேலைக்குச் சேர்நகிறான். அவனுக்கு எந்தப் புகார்களும் இல்லை. ரெங்கசாமியை லோகு கூட்டி வரச் சொன்னார் என்பதைக் கேட்டதில் இருந்து ரெங்கசாமி எந்த வார்த்தையும் பேசுவதில்லை. ஏன் கூப்பிடுகிறார் என்று கேட்கவில்லை. ஏன் நான் நிலத்தைக்கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை; எப்படி இவ்வளவு கடன் ஆனதென்று கேட்கவில்லை. எளிய மனிதர்களின் வாழ்க்கை இப்படியாகத்தான் எந்தப் புகார்களும் இன்றி கடக்கிறது. அவர்களிடம் புகார்கள் இருந்தாலென்ன..? யார் கவனிப்பது? யார் பொருட்படுத்துவது? ஆனால் இப்படியான எளியவர்களுக்கு அவர்களைச் சார்ந்தோரே துணை நிற்கிறார்கள். இரண்டாம் முறை நிலம் வாங்கிவதற்கு பணம் குறையும் போது கணக்குப்பிள்ளை யோசனையும் உதவியும் அளிக்கிறார். கங்காணியும் நல்ல ஏலக்காய் மூட்டையை எடுத்துப் போகச் சொல்லுகிறார். அது வீணாகி இடிந்து போய்க்கிடப்பவனுக்கு கேட்காமலேயே மீரான் அத்தானிடம் இருந்து உதவி கிடைக்கிறது. இப்படியாக எங்கெங்கும் எளியவர்களுக்கு எளியவர்களே உதவுகிறார்கள். நமது அரசு அமைப்புகளோ,அரசாங்கங்களோ அவர்களின் அன்றாட வாழ்வில் தள்ளியே உள்ளார்கள். இந்த உலகில் எளியமனிதர்களின் நேசமும் ஆதரவும் இல்லையென்றால் எத்தனையோ காலத்துக்கு முன்பே இந்த உலகம் அழிந்து போயிருக்கும்.
இந்த படச்சுருள் இதழ் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலை பற்றிய சிறப்பிதழ் என்பதால் படத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அலசப்பட்டு விடும். ஆனால், நான் எனது தனிப்பட்ட ரசனையின் அனுபத்தில் எனக்கு படத்தில் பிடித்தமான வெகு சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்ட விரும்புகிறேன். படம் முழுக்க காற்று ஒரு கதாபாத்திரமாக வருகிறது. காற்று கனிவாக வீசுகிறது; காற்று நம்பிக்கையாக வீசுகிறது; காற்று வறட்சியாக வீசுகிறது; காற்று கண்ணீராக வீசுகிறது; காற்று ஆறுதலாக வீசுகிறது; காற்று எல்லாமுமாக வீசுகிறது. படத்தின் உரையாடல் எழுதிவைக்கபட்டு வசனமாக படிக்கப்பட்டதாக தெரியவில்லை. படத்தில் பாத்திரங்களாக வரும் மக்களே வசனங்களைஎழுதி விட்டதைப் போலத் தெரிகிறது. வசனங்கள் நடிப்பு எல்லாம் கச்சாவாக இருக்கின்றன. ஆனால் அதுதான் படத்தின் ஆன்மா. அந்த கொச்சைத்தனம் அல்லது கச்சாத்தனம் தான் படத்தை உண்மைக்கு பக்கத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

கங்காணி கதாபாத்திரம் தொழிலாளர் சங்க நடைமுறைகளை மதிப்பவராக உள்ள அதே வேலை, இயல்பாக இருப்பதைப் போல வாழ்வின் சமரசங்களுக்கு ஆட்பட்டு முதலாளிகளுக்காக தொழிலாளைச் சுரண்டும் செயல்களையும் செய்கிறது. குறைவான ஆட்களை அல்லது சங்கத்தில் அல்லாத ஆட்களை வேலைக்கு வைப்பது அல்லது கூலியைப்பிடித்து வைத்துக்கொள்வது போன்ற செயல்களையும் செய்கிற அதே பாத்திரம்தான் எஸ்டேட் கைமாறி தானும் நிராதரவாக்கப்படும் போது சக தொழிலாளர்களிடம் உரிமையுடன் தன்னை கேலி செய்யச் சொல்கிறது. அதே போல பெரிதும் பேசப்படும் சகாவு சாக்கோ பாத்திரமும்; அங்கங்கே சிறு முரண்கள் தட்டுப்படுகின்றன. பிரச்சனை வருவதை முன்னரே அறிந்து செய்லாற்றுபவனே கம்யூனிஸ்ட் என்று வாதிடுகிறார்; கட்சியில் தனக்கு மேலுள்ள தலைவரிடமும் விமர்சனம் வைக்கிறார். ஆனால் ஒரு நெருக்கடியான நிலையில் மக்களைத் திரட்டிக்கொண்டு தொழிலாளர் விரோதியை கொலை செய்கிறார். அதில் பிறகு என்ன பிரச்சனை வரும் அல்லது அதை எப்படி பிரச்சனை இல்லாமல் தீர்ப்பது என்ற யோசனை இன்றி சட்டென்று முடிவெடுத்து செயலாற்றுகின்றான். இதானால் இன்னும் சிலரும் சிறைக்குப் போகிறார்கல். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் (சசி சகாவு) ஒருவர் முதலாளிகளிடம் சமரசம் செய்துகொண்டு தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கிறார். இன்னொரு கம்யூனிஸ்ட் திருமணம் செய்வதைக்கூட கட்சி நடவடிக்கைகளுக்காக தள்ளிப்போடுபவர் நெருக்கடியான நிலையில் கடுமையான நிலைப்பாட்டைக் கையில் எடுக்கிறார்.

படம் மலை சார்ந்த மக்களின் தொன்மங்களை தொட்டுச்செல்கிறது. மக்கள் இயல்பான மொழியில் தங்களுக்குள் கிண்டலும் கேலியுமாக கொண்டாடிக்கொள்கிறார்கள். விரிவான விவரணைகளோ வசனங்களோ இன்றி அந்த மக்களின் வாழ்வியல் அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளேன். காலை 6.30 மணிக்கெல்லாம் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையை ஆரம்பித்து விடவேண்டும். மழை பனி எதுவும் அவர்களுக்கு கிடையாது. சம்பள நாட்களில் வரிசையாக நின்று சம்பளம் வாங்குவதையும், எஸ்டேட் வாசலில் நின்றபடி வட்டியை அல்லது கடனை வசூல் செய்யும் ஆட்களையும் பார்த்துள்ளேன். வால்பாறையில் நான்கு கடைக்கு ஒரு அடகுக்கடை இருக்கும். மலையில் வாடும் மக்கள் அவ்வளவு எளிதாகவெல்லாம் காசு சேர்த்து விடமுடியாது. வால்பாறைக்கு போய்வரும் ஒவ்வொரு முறையும் நினைத்துக்கொள்வதுண்டு. இந்த கொண்டைஊசி வளைவு மலைப்பாதை மட்டும் தூர்க்கப்பட்டு விட்டால் இந்த வனம் மீட்கப்பட்டு விடும்; இந்த மக்கள் காசுக்கு கஷ்டப்படவேண்டியதில்லை-என்று நினைத்துக்கொள்வதுண்டு. படத்தில் கழுதை மீது பொதி சுமத்தி மலைக்கும் தரைக்கும் பொருட்களை பரிமாற்றம் செய்யும் முதியவருக்கு உடலுபாதை ரீதியாகவும் தன் பொருளாதாரம் சார்ந்தும் தலைச்சுமையாக ஆட்கள் பொருட்களை சுமப்பது ஒவ்வாததாக இருக்கிறது. அதைப்போலவே, சகாவு சாக்கோவுக்கும் மலையில் சாலை அமைப்பதும் எதிர்கால நோக்கில் தவறாகப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தேயிலை, காப்பி ஏலக்காய் மிளகுத் தோட்டங்களை நிர்மாணித்ததற்குப் பிறகு மழையின் அளவு குறைகிறது. பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அதன் பின்னான நாட்களில் தான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நதிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு பிரச்ச்னை நடக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த பெருமுதலாளிகளின் வல்லாதிக்க நிறுவனங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பரப்பு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. வருடக்குத்தகையாக ஒரு ஹெக்டேருக்கு ஒரு ரூபாய் முதல் பத்துரூபாய் வரை மட்டுமே இவர்கள் கொடுக்கிறார்கள் என்றுஒரு மூணார் வாசி சொன்னார். அந்த பத்துரூபாயைக் கொடுத்து விட்டுத்தான் வனங்களை அழித்து, நீர்வழித்தடங்களை மறித்து, விலங்குகளின் வழித்தடங்களைத் தடுத்து பெரும் எஸ்டேட்டுகளும் தொழிற்சாலைகளும், ரிசார்ட்டுகளும் கட்டப்படுகின்றன. அரசும் தன்பங்குக்கு அணைகள், வனத்துறை மாளிகைகள், கல்விநிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றை கட்டுகிறது. இப்படியான முன்னேற்றங்களுக்கு அல்லது வளர்ச்சித்திட்டங்கள், சுலபமாக மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இப்படியான சூழலியல் சீர்கேடுகளை சமன்படுத்தும்  என்று நம்புவதற்கில்லை. இந்தப்படம் குறித்து ஒரு கட்டுரையில் அல்லது ஒரு சிறப்பிதழில் எழுதி முடித்துவிட முடியும் என்று எனக்குத்தோன்றவில்லை. வெகுகாலத்துக்கு இப்படம் பேசப்படும். சிற்சில குறைகள் இல்லாமலில்லை. ஆனாலும் மிகவும் தகுதி வாய்ந்த படம்.

டெம்ப்ளேட்சினிமாக்கள்

படச்சுருள் டிசம்பர் 2018 இதழில் பிரசுரமான எனது கட்டுரை

டெம்ப்ளேட்சினிமாக்கள்

சமீப கால வணிக தமிழ்ச்சினிமா பரப்பில் ஒரு புதிய அலை உருவாகி விட்டதைப் போன்ற கருத்தாக்கம் அங்கங்கே தூவப்பட்டு வருகிறது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற ரீதியில் அதையும் சமூகம் ஏற்றுக்கொண்டும் சில நேரங்களில் கொண்டாடியும் வருகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 1960-80 களில் இந்திய அளவிலும் தமிழ் சினிமாவிலும் நாம் ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டிய சில படங்களும் மாற்றங்களும் கண்ணில் பட ஆரம்பித்தன.அந்த மாற்றங்களை ஒட்டி சினிமா ரசிகர்களும் மெல்ல மெல்ல நடை போட ஆரம்பித்த காலக்கட்டத்தில் 1980 இல் வந்த முரட்டுக்காளை மற்றும் 1982 இல் வந்த சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வெளிவந்து இன்னும் சில பத்தாண்டுகள் தமிழ்ச் சினிமாவுலகை பின்னுக்கு இழுத்துச் சென்றது.  நட்சத்திர அந்தஸ்து, பிரம்மாண்டம், பட்ஜெட், வியாபாரம், விநியோகம் போன்ற வார்த்தைகள் சினிமாவைத் தீர்மானித்தன. கதைக்காக அன்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அல்லது நாயக பிம்பம் போன்றவற்றைச் சொல்லி காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டன. கதையோடு ஒட்டாத நகைச்சுவைப் பகுதிகளும் நிறைய வர ஆரம்பித்தன. பாகவதர் காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் மேற்சொன்னவைகள் இருந்த போதிலும், 1970 களில் திரைத்துறையில் நிகழ்ந்த புதிய அலை எனப்பட்ட சினிமாக்களின் தாக்கம் மேலே எடுத்துச் செல்லப்படாமல் இருக்கும் வகையில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன் போன்ற படங்கள் வெளிவந்தன. எழுத்தாளர் புலியூர் முருகேசன் அவர்கள் நிறைய இடங்களில் நேர்ப்பேச்சில் மேற்சொன்ன பார்வையை வைத்துள்ளார். நாம் ஆறுதல் படக்கூடிய நல்ல படங்கள் வர ஆரம்பித்த நாட்களில் எல்லாம், சீரான இடைவெளியில் ஜெமினி ஏ.வி.எம் போன்ற தொழில்முறை பட நிறுவனங்கள் வணிக நோக்கிலான மசாலா சினிமாக்களை வெளியிட்டு ஒரு ஆரோக்யமான சூழல் உருவாகாமல் பார்த்துக்கொண்டன என அவர் உறுதியாக கருதுகிறார்.

1970 களில் இருந்ததைப் போல சமீபத்திலும் ஒரு புதிய அலை உருவாகி இருப்பதாக பரவலாக பேசியும் எழுதியும் வருகிறார்கள். அதுவும் மேற்குத்தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், 96, ராட்சசன் போன்ற படங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவுக்கு நல்ல காலம் என்பதைப் போல பேசிக்கொள்கிறார்கள். உண்மையில் நம்மை நாமே ஆறுதல் படுத்திக்கொள்வதன்றி வேறில்லை. ஒப்பீட்டளவில் சமீப காலத்தில் நாயக பிம்பம் பெரிதாக தேவைப்படுவதில்லை என்பதான தோற்றத்தை இம்மாதிரியான படங்கள் கொடுப்பதை மறுக்க முடியாது.  ஆனால் ஆரோக்கியமான சூழல் உருவாகி விட்டதாக நாம் கருதிக்கொள்ளும் நல்வாய்ப்பை எப்போதும் தமிழ் சினிமா வழங்கி விடுவதில்லை. 96 என்னும் படத்தையும் பாராட்டுமளவு நமது வறட்சி உள்ளது.

ஆனால் சமீப காலங்களில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது; நிகழ்ந்து வருகிறது. எந்த இயக்குநரிடமும் உதவியாளராகப் பணிபுரியாமல் கூட தயாரிப்பாளர் என்னும் தெய்வத்திடம் நேரம் வாங்கி படவாய்ப்பை புதிய இயக்குநர்கள் பெற்றுவிட முடிகிறது. நாளைய இயக்குநர் போன்ற சுயமரியாதையை அடகு வைக்கும் நிகழ்ச்சியிலோ அல்லது குறும்படம் எடுத்தோ விசிட்டிங் கார்டு போல அதன் மூலமாக படவாய்ப்பைப் பெறும் நம்பிக்கையை நிறைய இளைஞர்களுக்குத்தருகிறது. என்றாலும் இதில் ஒரு அபாயமும் இருக்கிறது. சினிமா என்பதைப் பற்றிய முறையான புரிதலும் பார்வையும் இல்லாமல், பார்ப்பவர்களை கவரக்கூடிய காட்சியமைப்புகள் மட்டும் இருந்தால் போதுமென்ற ரீதியில் படமெடுக்கும் இயக்குநர்களும் இப்படியான பாதைகளில் உள்நுழைந்து வருகிறார்கள். போக முன்பாவது சில ஆயிரம் பேர் சினிமா எடுக்கவென அல்லது சினிமாவில் நடிக்கவென படையெடுத்தார்கள். இப்போது லட்சக்கணக்கான குறும்பட இயக்குநர்கள் தமிழ்நாட்டில் உள்ளார்கள். அவர்களுக்கான சினிமா கல்வியும் பயிற்சியும் முறையாக இல்லாவிட்டாலும் ஒரு கணிசமான எண்ணிக்கையினருக்கு பட வாய்ப்பும் கிடைத்து விடுகிறது. இவை போக அசத்தப் போவது யாரு கலக்கப்போவது யாரு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜூனியர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் இப்படியான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகின்றன.
தற்கால வியாபாரச் சினிமா சூழலில் எதிர்முகமாக சிற்சில படங்களில் தொழில்முறையில் அல்லாத நடிகர்களை அல்லது நடிக்க வேண்டும் என்ற கனவில்லாதவர்களை படங்களில் நடிக்க வைப்ப்தும் நடக்கிறது. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற போர்வையில் எளிய கலைஞர்கள், கிராமத்து மனிதர்கள் ஏதுமறியாக் குழந்தைகள் திரைத்துறைக்குள் வருகிறார்கள். குறிப்பிட்ட படங்களின் தேவை கருதி ஒன்றிரண்டு முறை திரையில் தோன்றும் இது மாதிரியானவர்கள், பிறக்கான நாட்களில் கண்டுகொள்ளப்படாமல் போகும் யதார்த்தமும் உண்டு. அவர்களில் சிலர் தம் சுயத்தை இழந்து சினிமாவின் கரங்களுக்குள் தஞ்சம் அடைந்து நிற்பதுவும் உண்டு. தங்கமீன்கள் படத்தில் செல்லம்மாவாக வரும் குழந்தை தனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து மிகவும் ஏமாந்து போனதாக ஒரு தகவல் படித்தேன். அமைதியான கிராமத்தின் ஊடே ஒரு நெடுஞ்சாலை வந்த பிறகு அதுவும் மக்களும் தம் சுயத்தை இழப்பது போல தற்கால சினிமாவிலும் விபத்துகள் ஏற்படுவதுண்டு. ஒரு சிறிய குழந்தைக்கு விருது பற்றியதான எதிர்பார்ப்பை உண்டாக்கியதும், அதனை ஏமாற்றமாக்கியதும் இந்தச் சூழலின் சாபங்கள்.

வணிக சினிமாவுக்கென பிரத்யோகமான டெம்ப்ளேட்டை தற்சமயம் பெருமளவில் பின்பற்றி வருகிறார்கள். “ஒப்பன் பண்ணினா” என்கிற ரீதியில் பார்வையாளர்களை பட்டென கவரும் ஒரு அறிமுகக் காட்சி, சுமார் இருபது நிமிடங்களில் கதாபாத்திரங்கள், களம் போன்றவற்றை அறிமுகம் செய்வது, இண்டர்வெல் பிளாக் என்று எதிர்பார்ப்பைத்தூண்டும் ஒரு திருப்பம், பிறகு பிரச்சனையை சமாளிப்பது அல்லது மையக்கதையை நகர்த்துவது இறுதியாக யாரும் எதிர்பாராத ஒரு இறுதிக்காட்சி.. இப்படியான டெம்ப்ளேட்டில் அங்கங்கே பாட்டு, நகைச்சுவை சண்டைக்காட்சிகள் போன்ற மசாலாக்களைத் தூவினால் படம் தயார் என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. இந்த டெம்ப்ளேட் எல்லா சராசரி நாயகர்களுக்கும் பொருத்தமான ஒன்றாகிறது. இந்த டெம்ப்ளேட்டினை நல்லவிதமாக கையாளத்தெரிந்த இயக்குநர்கள் அல்லது நல்லவிதமாக அமைந்து விடும் படங்கள் வெற்றிப்படங்களாகின்றன. இப்படியான டெம்ப்ளேட்டை உடைக்கும் படங்கள் ஒன்றோ இரண்டோ எப்போதாவது வருகின்றன. இதில் மாபெரும் அவலமாக இந்த டெம்ப்ளேட்டுகள் மறுபடியும் இரண்டாம் பாகமாகவும் வந்து விடுவதே. முதல்முறை வெற்றிகரமாக ரசிகனை முட்டாளாக்கி விட்டால் இரண்டாவது முறையாகவும் ஆக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒரே டெம்ப்ளேட்டை மறுபடியும் திருப்பிப் போடும் படங்களும் வருகின்றன. காஞ்சனா 1 காஞ்சனா 2; கலகலப்பு 1; கலகப்பு 2; சிங்கம் 1 சிங்கம் 2; சிங்கம் 3; அரண்மனை 1; அரண்மனை 2 விஸ்வரூபம் 1-விஸ்வரூபம் 2 என்று போய்க்கொண்டு இருக்கிறது.  இவையெல்லாம் தமிழ் சினிமாவை எழுந்து நிற்க முடியாத படிக்கு அழுத்தும் காரணிகள்.

இது போக முற்போக்கு பேசுவதாக அல்லது அறிவுஜீவித்தனத்தை காட்டுவதாக, சமூகத்தின் அரசியல் திசைவழியை மாற்றக்கூடிய அல்லது மறக்க வைக்கவென டெம்ப்ளேட் படங்களைக் கொடுக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள்.ஐயாயிரம் கோடி பத்தாயிரம் கோடி திருடுபவனை விடு; முதலில் ஐந்து பைசா திருடுபவர்களை தண்டி; ஆயுதங்களைக் கடலில் கொட்டி விட்டால் போர்கள் நடக்காது; யாருக்கு எந்த அநீதி நடந்தாலும் ஒரு தலைவன் உருவாகி அவர்களைக் காப்பாற்றுவான் போன்ற தத்துபித்து முற்போக்கு இயக்குநர்கள் ஒரு மாதிரியான போலி முற்போக்கு படங்களை தனது டெம்ப்ளேட்டில் வழங்குகிறார்கள். நமது சூழலுக்கும் வாழ்க்கை முறைக்கும் சம்பந்தமே அற்ற காட்சியமைப்புகளோடு கூடிய படங்களை மேதாவித்தனத்தோடு கொடுக்கும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அடிப்படை வாத அரசியலை சரியெனச் சொல்லும் பிற்போக்குவாதிகளும் தற்போது சினிமாவைக் கைப்பற்றி வருகிறார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலை, முற்போக்கு கருத்துக்களை பேச வருவதாக அறியப்படும் படைப்பாளிகளும் இவர்களின் பின் சென்று இந்த கொடூர வணிகச் சூழலில் தம் சுயம் இழந்து அரசியலற்ற அரசியலைப் பேசும் போலிப் படைப்புகளை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். நாயகன் தளபது படங்களின் நீட்சியாகவே காலா போன்ற படங்கள் நின்று விடுவது இந்த ஆபத்தான போக்கினால் தான். சிங்கம் 2 கலகலப்பு 2 போன்ற மசாலாப் படங்களின் ஆபத்துகளை விட, நாயகன் தளபதிகளின் இரண்டாம் பாகமாக வேறு முகமூடியோடு வரும் காலா போன்ற படங்கள் ஆபத்தானவை.

இந்த டெம்ப்ளேட் யுகத்தில் கொரிய-ஜப்பானிய-இரானிய படங்களின் அலைகளுக்கு நடுவே முத்தையாக்களும் சசிக்குமார்களும் இன்னமும் சாதியப் பெருமை பேசும் படங்களை கொடுக்கும் டெம்ளேட்டுகளையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள். இனவரைவியல் பேசும் படங்களுக்கும் இந்த நிலப்பிரபுத்துவ பெருமிதங்களை முன்வைக்கும் சாதியப் படங்களுக்கும் வேறுபாடு உள்ளது. எஜமான் சின்னக் கவுண்டர். தேவர்மகன் போன்ற படங்களின் நீட்சியாகவே…. கிடாரி, கொடிவீரன், குட்டிப்புலி போன்ற படங்கள் வருகின்றன. இப்படங்கள் கொடுத்திருக்கும் ஒரு இயக்கம் காரணமாகவே தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க கமல்ஹாசனுக்கு துணிச்சல் வருகிறது. நாடகக் காதல், ஆணவக்கொலை போன்ற பிற்போக்குவாத செயல்கள் அதிகமாக நடப்பதற்கும் இம்மாதிரியான படங்கள் வருவதற்கும் தொடர்பு உண்டு. இப்படியான டெம்ப்ளேட்டுகள் அதீத ஆபத்தான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தக் கூடியன.
இது மாதிரியான டெம்ப்ளேட் திரைப்படங்கள் சிற்சில சமயங்களில் வணிக வெற்றியையும் அடைந்து விடுவதால் அவை முன்மாதிரியாக அமைந்து வேறுவிதமான விளைவுகளுக்கு இட்டுச் செல்கின்றன.உதாரணத்துக்கு பீட்ஸா என்றொரு திகில் படம் குறைந்த செலவில் சொல்லிக்கொள்ளும்படியான லாபமும் வெற்றியும் பெற்றதால் பிறகான சில ஆண்டுகளில் நிறைய திகில்படங்களாக வெளிவந்தன.சினிமா வெறும் வியாபாரம் மட்டும் அல்ல. அட்டகத்தி போன்ற சில எளிய படங்கள் அவ்வப்போது வந்த போதிலும் சினிமா வணிகம் எனும் பகாசுர எந்திரத்தில் நல்ல முயற்சிகள் கூட கரைத்து உண்ணப்பட்டன. இம்மாதிரியான டெம்ப்ளேட் படங்கள் என்ன விளைவை ஏற்படுத்துகின்றன?. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் சினிமா ரசனையையும் சினிமா ரசிகர்களையும் ஒரு வகையில் அவமானப்படுத்துகிறார்கள். இவர்களுக்கு இதுதான் என்று முன்முடிவோடு அணுகுகிறார்கள் என்பது அவமானமே. 

இந்த ஃபாஸ்ட்புட் இயக்குநர்களும் டெம்ப்ளேட் படங்களும் வந்த பிறகு சினிமா ஒரு கலை என்பதைக் கூட நாம் மறக்ககூடிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. வணிகச் சூழலின் அழுத்தம் நல்ல கலைஞர்களையும் சமரசத்துக்கு ஆட்படுத்து தனக்குள் கபளீகரம் செய்து கொள்கிறது. ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் பரம்பரை என்பது போன்ற ஒன்று தொடர்ந்தது. இமயங்களும் சிகரங்களும் இருந்த போதிலும், முறையான சினிமா ஒரு கல்வியாக இங்கே கற்பிக்கப்படவில்லை. பொதுவாக கல்விப்புலங்கள் கலையை போதித்தாலும், கலைக்கென்று தனிப்பட்ட மரபு இருக்கத்தான் செய்கிறது. எல்லா கலை வடிவங்களிலும் அது அமைந்து விடுகிறது. ஆனால் தீயூழாக தமிழ்சினிமாவில் அப்படியான கலை மரபு உருவாகுவதை இந்த டெம்ப்ளேட் திரைப்படங்களும் ஃபாஸ்ட்புட் இயக்குநர்களும் தள்ளிப்போட்டு வருகிறார்கள்.

சினிமாவை வெறும் பொழுதுபோக்கு ஊடகம் என்றோ, பிரச்சார சாதனம் என்றோ ஒடுக்கிவிடாத படிக்கு சில படங்கள் அவ்வப்போது வருகின்றன. தற்போதைய தொழில்நுட்ப உலகில் படம் எடுப்பது முன்னைக் காட்டிலும் சவால் குறைவான ஒன்றாகிறது. ஆனால் படத்தைக் காட்சிப்படுத்துவது என்பது பெரும் சவாலாக இருப்பதே சினிமா பெரும் வியாபாரமாகிவிட்டதால் தான். வழக்கமாக வணிக சினிமா இதழ்கள் கூடப் புலம்பும் ஒரு விஷயம் பெரிய பட நிறுவனங்கள் அல்லது வியாபாரப் பெறுமதி மிக்க நடிகர்களின் படங்களோடு ஒரு எளிய படம் போட்டி போடக்கூடிய ஆரோக்கியமான சூழல் இப்போது இல்லை என்பது. இன்றளவும் சுயாதீனமான படங்கள், குறும்படங்களுக்கு என்று முறையான காட்சிப்படுத்தும் வசதிகள் கிடைப்பதில்லை. இத்தகைய படங்களுக்கான இடத்தை பெரும் வணிகப்படங்கள் இல்லாமலே செய்து விடுகின்றன. பெரிய பட நிறுவனங்கள் அல்லது பெரிய கதாநாயகர்கள் இவர்களுக்கு என்றே படங்களை உருவாக்குகிறார்கள் புதியவர்களும். இப்படியான போக்கு என்றைக்கும் சுதந்திரமான கலைப்படைப்பை உருவாக்காது.

இந்த உலகம் இன்றைக்கு உயிர்த்திருப்பதற்குக் காரணம் பூமியில் இருக்கக்கூடிய உயிரிய பன்மைத்துவம் என்கிறது அறிவியல். அதாவது இந்தப் பூமியில் வெறும் மனிதர்கள் மட்டும் அல்லாமல், புல், செடி, கொடி, மரம், மாடு, தவளை, ஆமை, மீன், புறா, கோழி, கழுகு, பாம்பு, பூச்சி, பூஞ்சைகள், பாசிகள், பாக்டீரியாக்கள் என்ற பலதரப்பட்ட உயிரிகள் இருக்கும் பன்மைத்துவத்தாலேயே உலகம் அழியாது நிலைத்திருக்கிறது. மனிதன் என்ற ஒரே ஒரு உயிரினம் மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் புவியில் உயிர்களே இல்லாது போயிருக்கும். இந்த விதி எல்லா செயல்பாடுகளுக்கும் பொருந்தும். சினிமாவுக்கும் அப்படியே. ஆனால் சமீபத்திய வணிகச் சூழல் இதை ஆதரிப்பதாக இல்லை. படம் முடிந்தாலும் ஒரு எளிய படத்தை வெளியிட்டு விட முடியாது. அந்த நாளில் பெரிய படங்கள் ஏதும் வராமலிருக்க வேண்டும். அப்படியானால் தான் காட்சிப்படுத்தும் அரங்குகள் கிடைக்கும் என்பது வழக்கமாக ஆகிவிட்ட படியால், டெம்ப்ளேட் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மினிமம் கியாரண்டி போன்ற நிலைக்கு படங்களை எடுத்தாக வேண்டிய நிர்ப்பந்ததிற்கு படைப்பாளிகளைத்தள்ளுவது இந்தச் சூழலின் மிகப்பெரிய ஆபத்து. அட்ட கத்தி எடுத்து விட்டு கபாலியையும் காலாவையும் எடுக்க இறங்கும் ரஞ்சித்துகள் ரஜினிகளுக்கு அரசியல் சப்பைப்பட்டு கட்ட வேண்டிய நிர்ப்பத்தம் இங்கேதான் அமைகிறது. அதே அபாயம் தான் மாரி செல்வராஜுக்கும் நடக்கிறது. அவர்களின் அரசியல் பார்வை அல்லது அரசியல் நியாயம் எப்படிப்பட்டது என்ற  கேள்விக்கு அப்பாற்பட்டு அப்படியான நம்பிக்கை தரும் படைப்பாளிகளையும் தனக்குள் இழுத்துக்கொள்ளும் இந்த வணிகத்திரையுலகின் தற்காலப் போக்குதான் நமக்கு கவலை தருவதாக உள்ளது. பரியேறும் பெருமாளையோ அட்டகத்தியையோ யாரும் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு நேர்மையாக நகர்வதை இந்தச் சூழல் ஆதரிப்பதில்லை. இந்தப் பின்னடைவை அவர்களின் போதாமையாகக் கருதாமல், நமது சூழலின் போதாமையாகவே பார்க்க முடிகிறது.

தமிழ்சினிமா நூறு ஆண்டுகளைத் தொட்டிருக்கிறது. ஐரோப்பிய அமெரிக்க ஸ்டூடியோக்களுக்கு இணையான தொழில்நுட்பம் நமக்கு இங்கேயே கிடைக்கிறது. இந்திய அளவிலும் தமிழக அளவிலும் குறிப்பிடத்தக்க சினிமா ஆசான்களையும் நாம் பெற்றுள்ளோம். படம் எடுக்க பணம் ஒரு பொருட்டாகவும் இருப்பதில்லை. இப்படியான ஆரோக்கியமான சூழலில் அதற்குச் சான்றான படங்கள் நமக்கு மிக மிகக் குறைவாகவே அமைகின்றன. நூற்றாண்டு கண்ட ஒரு கலைவடிவத்தை இன்னமும் நாம் கோயில் வாசலில் சில்லறைகளுக்காக ஆசிர்வதிக்கும் யானையைப் போல பயண்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பான உண்மை. இன்னமும் பழைய படங்களை ரீ மேக் செய்கிறோம். கிராபிக்ஸ் போன்ற உத்திகளை கோமாளிக்காட்சிகள், நம்பமுடியாத சண்டைகள் எடுப்பதற்கு உபயோகித்து வருகிறோம். மேலாக படத்தின் தலைப்புகளைக்கூட பழைய தலைப்புகளில் இருந்து எடுத்து உபயோகிக்கிறோம். கொரிய இரானிய படங்களைத் தழுவியோ, உரிமம் பெற்றோ, காப்பியடித்தோ நமது படங்களை உருவாக்குகிறோம். தெலுங்கில் இருந்து தமிழுக்கு தமிழில் இருந்து தெலுங்குக்கு என்று பந்தாடுகிறோம். ஒரே இயக்குநர் ஒரே ஒரு படத்தை மாநிலம் வாரியாக மறு உற்பத்தி செய்து கொண்டு போகிறார்.

புதிய அலை என்று சொல்லத்தக்க மாற்றங்கள் இங்கே இன்னும் நிகழ்ந்து விடவில்லை என்ற போதிலும் சில நம்பிக்கையளிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. நாயக பிம்பத்தை நம்பாத சினிமாக்கள் அவ்வப்போது வருகின்றன. நம்பிக்கை தரும் திரைப்படைப்பாளிகள் இயக்குநர்கள் சிலர் புதிதாக வந்துள்ளனர்.சினிமா என்பது மிகப்பெரும் வணிகமாக உள்ள இன்றைய சூழலில் சினிமா எடுக்க வருபவர்கள் சினிமாவைப் பற்றிய புரிதலோடு சினிமா பற்றிய அறிவோடு வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. சினிமா வெறும் விற்பனைப் பண்டம் அல்ல. வணிக சினிமாக்கள் பெருவாரியான மக்களை நேரடியாகச் சந்திக்கின்றன. வணிகச் சினிமாக்களை சினிமா பற்றிய புரிதல் உள்ளவர்கள் எடுக்கும் போது மக்களின் திரை ரசனை மேம்படும். சமீப காலங்களில் சில படங்கள் அப்படியான உள்ளடக்கத்தோடும் வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் கூட்டிப் பெருக்கி துடைத்து விடக்கூடிய விளக்குமாறாக அவ்வப்போது வரும் முற்றிலும் வியாபார நோக்கிலான சினிமாக்கள் இருக்கின்றன. முற்போக்கு கருத்துக்களைப் பேசுவதான பாவனையில் சில வியாபார சினிமாக்கள் வருகின்றன. உண்மையில் அவர்களுக்கு முற்போக்கும் ஒரு வியாபார பண்டம். இன்னும் அதிக எண்ணிக்கையிலான நேர்மையான திரைப்படைப்பாளிகள் வர வேண்டும். ஒரு கலைஞனுக்கு நேர்மையும் அரசியல் புரிதலும் மிக அவசியமானது.

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கால்சட்டை இல்லாமல் நடந்து போனான்

ஒரு கைக்குழந்தையை எந்த சூதானமும் இன்றி அநாயசமாக கையிலேந்தியபடி அந்தப் பெண் விரைவாக நடந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது கணவர் இரண்டு வயதிருக்கும் மகனை கையில் பிடித்து நடத்திக்கூட்டியபடி நெரிசலான அந்தச் சாலையில் (ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில்) நடந்து போனார். உடனிருந்த நண்பர் என்ன இப்படி அசிரத்தையாக போகிறார்கள் என்றார். பத்து நிமிடத்தில் கைக்குழந்தையை கணவனும் மூத்த மகனை மனைவியும் கூட்டிக்கொண்டு திரும்பி அதே வழியில் வந்தனர். கணவர் விரைவாக கடந்து போனார். மனைவி எங்களிடம் கையேந்தினார். ஏனோ இரு முறையும் இல்லை எனச் சொல்லி அனுப்பி விட்டேன். அவர்கள் நடக்கும் போதுதான் தெளிவாகப் பார்த்தேன். அந்தச் சிறுவனுக்கு செந்தூரன் வயதிருக்கும். கால்சட்டை இல்லாமல் நடந்து போனான். மிகவும் வேதனையாகிப் போனது. நண்பரிடம் வருத்தப்பட்டேன். மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பத்து ரூபாய் கொடுத்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். இந்த இரவு வேதனை மிக்க இரவு.

செப்டம்பர் 17, 2018; ஃபேஸ்புக் பதிவு

கலைஞர் எனும் வசீகர வார்த்தை

கலைஞர் எனும் வசீகர வார்த்தை
செப்டம்பர் 2018 உயிர்மை இதழில் வெளியான சிறு பதிவு

எங்கள் குடும்பத்தின் மிகப்பெரும்பாலான உறுப்பினர்கள் திமுக ஆதரவாளர்கள். அதற்கு ஒரே காரணம் கலைஞர் எனும் வசீகரவார்த்தை என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தக் காரணமும் தோன்றவில்லை. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதல் முறையாக சத்துணவில் முட்டை சேர்த்து வழங்கினார்கள். கலைஞர் பிறந்தநாள் அன்று அது ஆரம்பிக்கப்பட்டது. எனக்குத்தெரிந்து என் நினைவில் நிற்கும் கலைஞர் பற்றிய முதல் நினைவு அது. பேருந்தில் இலவசப்பயணம் பெற கலைஞரின் படம் போட்ட பாஸ் ஒன்றும் அந்த நாட்களில் வழங்கினார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக கவிதை என்ற பெயரில் ஒன்றை எழுதினேன். தமிழில் வாசிப்புக்கு என்னை ஈர்த்த முதல் இலக்கியப்பிரதி குங்குமம் இதழில் கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர். கல்லூரிக் காலத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சி. அப்போது அனைவரும் தமிழில் கையெழுத்திட கலைஞர் கேட்டுக்கொண்டார். அதுநாள் முதல் தமிழில் தான் கையொப்பம் இடுகிறேன். இளநிலைப் படிப்பு முடித்த பிறகு மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் முடித்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலமாக என் இளநிலை கல்லூரி வகுப்புத்தோழர்களில் ஐந்து பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற உதவ முடிந்தது. இதையெல்லாம் சாத்தியப்படுத்தியது பலரும் இன்று ஒத்துக்கொள்ள மறுக்கும் கலைஞரின் சமூகநீதியின் பயணங்கள். 

கலைஞர் என்ற வார்த்தை எப்போதும் என்னை வசீகரித்துக்கொண்டு இருப்பதற்கான அடையாளங்களாக வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, சென்னை மாநகரப்பூங்காக்களில் இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் சிலைகள், செம்மொழிப்பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, பராசக்தி, பொன்னர் சங்கர் காவியம் என இன்னுமிருக்கின்றன. கலைஞர் எனும் தீவிர அரசியல்வாதியின் இந்த கலை-இலக்கிய முகமே என்னை வசீகரித்து கலை இலக்கியங்களில் நாட்டம் கொள்ள வைத்தது. தொலைக்காட்சி –அச்சிதழ்களில் அரசியல் செய்திகளைக் கேட்பது மற்றும் படிப்பது என்பதைக் கூட மிகவும் விருப்பமாக ஆக்கியது கலைஞரின் வசீகரத்தமிழே. 

கலைஞர் எனும் கலைஞரின் கலை மனம் தந்த ஒவ்வொரு கொடையையும் பார்க்கும் போதும் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் இவர் போன்றதொரு ஆளுமை முன்னும் பின்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல்வேறு அரசர்கள் கலை இலக்கியங்களில் விற்பன்னர்களாக இருந்தார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் கலை இலக்கிய உலகில் தனக்கென ஒரு அரசாட்சியை அமைத்துக்கொண்ட வகையில், நவீன தமிழகத்தின் வரலாற்றில் என்றும் அழியாப்பெயருடன் இருக்கும்  அரசனாகவே நான் கலைஞரைப் பார்க்கிறேன்.

நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு

நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு
      - செப்டம்பர் 2018 படச்சுருள் இதழில்                 வெளியான கட்டுரை