செவ்வாய், 4 டிசம்பர், 2018







அக்டோபர் 2018 படச்சுருள் இதழில் வெளியான கட்டுரை
மேற்குத்தொடர்ச்சி மலை: நிலமற்றவர்களின் பாடல்
மணி ஜெயப்பிரகாஷ்வேல்
இங்கே நிலவுடைமைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இந்தியச் சூழலில், நிலவுடைமையானது சமுதாயக் கட்டமைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப சில பத்தாண்டுகளில் ஐரோப்பிய நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க நாடுகளில் காலணிய அடிமைப்படுத்துதல் மூலமாக சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கின. ஏனைய நாடுகளில் ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் அழுத்திக்கொண்டிருந்த ஆண்டுகளில், அப்போதைய இந்தியா எனும் பிற்போக்கான நிலப்பரப்பில் நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும், சாதியக்கொடுமையும், வர்க்க முரண்பாடுகளும் என பன்முனைத்தாக்குல்களால் இந்தியச் சமூகம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்தியா இருபதாம் நூற்றாண்டைக் கடந்து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தாலும் இந்த அத்தனை தாக்குதல்களும் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. நேரடியாகவோ மறைமுகமாகவோ அத்தனைக் காரணிகளும் சமூகச் சீர்கேட்டுக்கு அடிகோலி வருகின்றன.

இந்த எல்லாவற்றிலும் மிக முக்கியமானதாக நிலவுடைமை உள்ளது. ஜமீந்தாரி முறை ஒழிப்பு, மன்னராட்சி ஒழிப்பு, பூதான இயக்கம், பஞ்சமி நிலங்கள், நிலச்சீர்திருத்த சட்டங்கள் என்று எத்தனையோ முன்னெடுப்புகள் இருந்த போதிலும் இன்னும் நிலமற்றவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகவே உள்ளது. நிலமற்றவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தெளிவாக இல்லை. ஆனாலும், மத்திய அரசின் புள்ளியியல்  துறையின் கீழ் வரும் மத்திய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தின் 2013 ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 110 லட்சம் குடும்பங்கள் இந்தியாவில் நிலமற்றவர்களாக உள்ளனர். தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். விவசாயம் செய்வதற்கென்று கூட அல்ல, மேற்சொன்ன எண்ணிக்கையிலுள்ள குடும்பங்களுக்கு போதுமான அளவு வீட்டு நிலம் கூட இல்லை.

தாழ்த்தப்பட்டவர்கள் நிலம் வைத்திருக்கக் கூடாது என்ற வர்ணாசிரம-நிலப்பிரபுத்துவ கட்டுப்பாடுகள் காலணிய ஆட்சியில் தளர்த்தப்பட்டாலும், பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டாலும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு நிலம் என்பது இன்னமும் இல்லாத ஒன்றாகவே உள்ளது. நிலம் என்பது வெறும் சொத்து மட்டுமல்ல. அது சுய மரியாதை; அடிப்படை உரிமை; வாழ்வதற்கான நம்பிக்கை; உயிராதாரம். நிலமற்ற விவசாயக் கூலிகள் தான் கீழ் வெண்மணியில் எரிக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் சாணிப்பால் குடிக்க வைக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் மலம் திண்ண வைக்கப்பட்டார்கள்; அவர்கள் தான் தேர்தலில் போட்டியிடுவதற்காகவும், கோயிலில் நுழைந்ததற்காகவும், ஊர்த்தெரு வழியே பிணம் சுமந்து போனதற்காகவும் ஒடுக்கப்பட்டார்கள். இப்படியானவர்களின் எளியதொரு பாடலாக மேற்குத்தொடர்ச்சி மலை என்ற சினிமா வந்துள்ளது.

தமிழ் ஊடகங்களில் சினிமாவை விமர்சிக்கிறேன் என்று எழுதவும் பேசவும் செய்பவர்கள் பொதுவாக கதை சொல்லியே பழக்கப்பட்டவர்கள். சூர்யாவை பிரகாஷ்ராஜ் மிரட்டுகிறார் என்ற ரீதியில் விமர்சனம் எழுதுவதாக சொல்லிக்கொள்பவர்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் கதை என்று எதுவும் பிடிபடாதாதால் படத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே நிலைதான் ஃபேஸ்புக் விமர்சகர்களுக்கும். எல்லா படங்களுக்கும், ஆரம்பம்-தொடர்ச்சி-முடிவு என்று இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. மொழிகளுக்கு அப்பாற்பட்ட காட்சியனுபவத்தைக் கொடுக்கிற படங்களே உலகப்படங்கள் என்ற வரிசையில் வைக்கப்படுகின்றன. அப்படியான வரிசையில் வைக்கத்தக்க அற்புதமான் சினிமாதான் மேற்குத்தொடர்ச்சி மலை.

நான் அறிந்த வரையில் தோழர் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைக்கொடுத்து வருகிறது. சென்னையில் நான் பார்த்த அந்த மல்டிப்ளெக்ஸ் திரையரங்கில் படம் முடிந்து வெளிவரும் யாவரும் ஒரு வித யோசனையுடனே வெளி வந்ததைப் பார்த்தேன். பொதுவாக வணிகமயமான தமிழ்சினிமாவில் மலைகள் அல்லது வனங்களை கதைக்களனாகக் கொண்டு உருவாக்கப்படும் படங்களில் பெரும்பாலும் கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகையும், சில நல்ல பாடல்களையும் தருவதாக சொல்லப்படுகின்றன. மக்களும் இதை எதிர்பார்த்துதான் சினிமாவுக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்திலும் மலையும் மலைவனமும் காட்டப்படுகிறது. ஆனால் அது அந்த மக்களின் வாழ்வியலோடு இணைந்த ஒரு பாத்திரமாகவே காட்டப்பட்டுள்ளது. என்னைப்பொறுத்தவரை படத்தை பார்த்து முடிக்கும் வரை, இது ஒரு அழகான இடம் என்ற எண்னம் வரவில்லை. படத்தின் ஒட்டமே ஆக்கிரமித்துக்கொண்டது. ரசனை அனுபவத்தில் பார்க்கும் போது ஒன்றிரண்டு பரபரப்பான காட்சிகளைத்தவிர படம் மிகவும் மெதுவாக எளியவர்களின் வாழ்க்கையைப்போல நகர்கிறது. இசை ஒன்று இப்படத்தில் உள்ளது என்று நான்கைந்து இடங்களில் மட்டுமே உணர்ந்தேன். இளையராஜா ஒப்பீட்டளவில் நல்ல இசையை வழங்கியுள்ளார். என்னைப் பொறுத்தவரை படத்துக்கு இசை பெரிதும் உதவியிருக்கிறது என்பதைக்காட்டிலும் இசை வலிந்து திணிக்கப்படவில்லை என்பதே ஆறுதலாக உள்ளது. அதே போலவே ஒளிப்பதிவு எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கலும், மேதமையைக்காட்டுகிறேன் என்று சோதிக்கவில்லை. இயல்பாக படத்தோடு ஒட்டி வருகின்றன. முற்றுமுழுதாக ஒரு இயக்குநரின் படம் இது. கரகாட்டம் முதல் கம்யூனிசம் வரை சினிமாவில் எல்லாமும் வியாபார ரீதியிலேயே பாவிக்கப்படும் தமிழ்சினிமாவில் லெனின் பாரதியின் இப்படம் குறிஞ்சிப்பூ.

படம் இருட்டில் ஆரம்பிக்கிறது. ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட காட்சி போல, படத்தின் துவக்கத்தில் ரெங்கசாமி உறக்கத்தில் இருந்து எழுவதில் ஆரம்பித்து மலை ஏறுவது வரை காட்டப்படுகிறது. டைட்டில் மொத்தமும் இதிலேயே காட்டுகிறார்கள். உண்மையான வாழ்க்கையின் இயல்பு மாறாத காட்சியமைப்புகள் படத்தை நமக்கு அணுக்கமாக வைக்கின்றன. படத்தில் சிற்சில இடங்களில் பாத்திரங்களின் உடல்மொழிக்கும், வாயசைவுக்கும் ஒத்திசைவு இல்லாமல் இருக்கிறது. ஆனால், தொழில்முறையில் அல்லாத மக்களை நடிகர்களாக வைத்து எடுக்கும் போது இது எதிர்பார்க்கக்கூடியதே. நடிப்பு என்பதற்கு இலக்கணங்கள் வேறுபடலாம். ஆனால் இப்படத்தில் அந்தப் பகுதி மக்களே பாத்திரங்களாக அவர்களாகவே வந்து போகிறார்கள்.
நிலமற்றவர்களுக்கு சமர்ப்பணம் என்று கடைசியில் சொல்லப்பட்டாலும் படம் ஒரு முழுமையான வாழ்வின் சாத்தியப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் காட்டி விட்டுச் செல்கிறது. படம் எதையும் இதுதான் பிரச்சனை என்றும் சொல்லவில்லை. அதற்கு இதுதான் தீர்வு என்று எதையும் முன்வைப்பதில்லை. பிரச்சனைகளையும், ஓரளவுக்கு காரணங்களையும் சொல்லும் படம் தீர்வை நாம் எடுக்கட்டும் என்று விட்டு விடுகிறது. அதுதான் ஒரு படைப்பின் வேலையாகவும் இருக்க முடியும்.

ரெங்கசாமியின் தகப்பன் காலத்தில் இருந்தே மலையடிவாரத்தில் விவசாய நிலம் வாங்க வேண்டும் என்பது தீராத தாகமாக இருக்கிறது. ரெங்கசாமி ஒரு முறை நிலத்தை வாங்கும் தருவாயில் அது அவன் கைவிட்டுப் போகிறது. முடங்கிப் படுக்கிறான். ஆனால் அவன் அம்மா சொன்னதும் எந்தப் புகாரும் இன்றி மலையின் மீது ஏற ஆரம்பிக்கிறான். பிறகு மீண்டும் நிலம்வாங்கும் ஒரு வாய்ப்பு வருகிறது. அப்போதும் அது தவறிப்போகிறது. உடைந்து போகிறான். மலைமேலிருக்கும் ஒருவரின் உதவியால் அவனுக்கு நிலம் வாங்கும் கனவு வசப்படுகிறது. பெரும் நம்பிக்கையுடன் விவசாயம் செய்கிறான். இடையில் ஏற்படும் ஒரு எதிர்பாராத நிகழ்வில் சிறைக்குச் செல்ல நேர்கிறது. அவன் மனைவி விவசாயத்தைக் கவனிக்கிறாள். மகனை பள்ளிக்கு அனுப்புகிறாள். ஆண்டுகள் உருண்டோட ஊர்மாறுகிறது. நிறுவனமயமாக்கப்பட்ட நிர்பந்ததுக்கு ஆளாகி கடனாகிறார்கள். சிறையில் இருந்து திரும்பும் ரெங்கசாமி கடனுக்காக தன் நிலத்தை விற்க நிர்பந்திக்கப்படுகிறான். யோசனையோ தயக்கமோ இன்று தன் நிலத்தை கடனுக்கு ஈடாக எழுதிக்கொடுத்து விடுகிறான். அதே நிலத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி அலகுகளுக்கு பாதுகாவலனாக வேலைக்குச் சேர்நகிறான். அவனுக்கு எந்தப் புகார்களும் இல்லை. ரெங்கசாமியை லோகு கூட்டி வரச் சொன்னார் என்பதைக் கேட்டதில் இருந்து ரெங்கசாமி எந்த வார்த்தையும் பேசுவதில்லை. ஏன் கூப்பிடுகிறார் என்று கேட்கவில்லை. ஏன் நான் நிலத்தைக்கொடுக்க வேண்டும் என்று கேட்கவில்லை; எப்படி இவ்வளவு கடன் ஆனதென்று கேட்கவில்லை. எளிய மனிதர்களின் வாழ்க்கை இப்படியாகத்தான் எந்தப் புகார்களும் இன்றி கடக்கிறது. அவர்களிடம் புகார்கள் இருந்தாலென்ன..? யார் கவனிப்பது? யார் பொருட்படுத்துவது? ஆனால் இப்படியான எளியவர்களுக்கு அவர்களைச் சார்ந்தோரே துணை நிற்கிறார்கள். இரண்டாம் முறை நிலம் வாங்கிவதற்கு பணம் குறையும் போது கணக்குப்பிள்ளை யோசனையும் உதவியும் அளிக்கிறார். கங்காணியும் நல்ல ஏலக்காய் மூட்டையை எடுத்துப் போகச் சொல்லுகிறார். அது வீணாகி இடிந்து போய்க்கிடப்பவனுக்கு கேட்காமலேயே மீரான் அத்தானிடம் இருந்து உதவி கிடைக்கிறது. இப்படியாக எங்கெங்கும் எளியவர்களுக்கு எளியவர்களே உதவுகிறார்கள். நமது அரசு அமைப்புகளோ,அரசாங்கங்களோ அவர்களின் அன்றாட வாழ்வில் தள்ளியே உள்ளார்கள். இந்த உலகில் எளியமனிதர்களின் நேசமும் ஆதரவும் இல்லையென்றால் எத்தனையோ காலத்துக்கு முன்பே இந்த உலகம் அழிந்து போயிருக்கும்.
இந்த படச்சுருள் இதழ் முழுவதும் மேற்குத்தொடர்ச்சி மலை பற்றிய சிறப்பிதழ் என்பதால் படத்தின் அனைத்து அம்சங்கள் குறித்தும் அலசப்பட்டு விடும். ஆனால், நான் எனது தனிப்பட்ட ரசனையின் அனுபத்தில் எனக்கு படத்தில் பிடித்தமான வெகு சில அம்சங்களை மட்டும் தொட்டுக்காட்ட விரும்புகிறேன். படம் முழுக்க காற்று ஒரு கதாபாத்திரமாக வருகிறது. காற்று கனிவாக வீசுகிறது; காற்று நம்பிக்கையாக வீசுகிறது; காற்று வறட்சியாக வீசுகிறது; காற்று கண்ணீராக வீசுகிறது; காற்று ஆறுதலாக வீசுகிறது; காற்று எல்லாமுமாக வீசுகிறது. படத்தின் உரையாடல் எழுதிவைக்கபட்டு வசனமாக படிக்கப்பட்டதாக தெரியவில்லை. படத்தில் பாத்திரங்களாக வரும் மக்களே வசனங்களைஎழுதி விட்டதைப் போலத் தெரிகிறது. வசனங்கள் நடிப்பு எல்லாம் கச்சாவாக இருக்கின்றன. ஆனால் அதுதான் படத்தின் ஆன்மா. அந்த கொச்சைத்தனம் அல்லது கச்சாத்தனம் தான் படத்தை உண்மைக்கு பக்கத்தில் கொண்டு போய் நிறுத்துகிறது.

கங்காணி கதாபாத்திரம் தொழிலாளர் சங்க நடைமுறைகளை மதிப்பவராக உள்ள அதே வேலை, இயல்பாக இருப்பதைப் போல வாழ்வின் சமரசங்களுக்கு ஆட்பட்டு முதலாளிகளுக்காக தொழிலாளைச் சுரண்டும் செயல்களையும் செய்கிறது. குறைவான ஆட்களை அல்லது சங்கத்தில் அல்லாத ஆட்களை வேலைக்கு வைப்பது அல்லது கூலியைப்பிடித்து வைத்துக்கொள்வது போன்ற செயல்களையும் செய்கிற அதே பாத்திரம்தான் எஸ்டேட் கைமாறி தானும் நிராதரவாக்கப்படும் போது சக தொழிலாளர்களிடம் உரிமையுடன் தன்னை கேலி செய்யச் சொல்கிறது. அதே போல பெரிதும் பேசப்படும் சகாவு சாக்கோ பாத்திரமும்; அங்கங்கே சிறு முரண்கள் தட்டுப்படுகின்றன. பிரச்சனை வருவதை முன்னரே அறிந்து செய்லாற்றுபவனே கம்யூனிஸ்ட் என்று வாதிடுகிறார்; கட்சியில் தனக்கு மேலுள்ள தலைவரிடமும் விமர்சனம் வைக்கிறார். ஆனால் ஒரு நெருக்கடியான நிலையில் மக்களைத் திரட்டிக்கொண்டு தொழிலாளர் விரோதியை கொலை செய்கிறார். அதில் பிறகு என்ன பிரச்சனை வரும் அல்லது அதை எப்படி பிரச்சனை இல்லாமல் தீர்ப்பது என்ற யோசனை இன்றி சட்டென்று முடிவெடுத்து செயலாற்றுகின்றான். இதானால் இன்னும் சிலரும் சிறைக்குப் போகிறார்கல். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் (சசி சகாவு) ஒருவர் முதலாளிகளிடம் சமரசம் செய்துகொண்டு தொழிலாளர்களுக்கு துரோகமிழைக்கிறார். இன்னொரு கம்யூனிஸ்ட் திருமணம் செய்வதைக்கூட கட்சி நடவடிக்கைகளுக்காக தள்ளிப்போடுபவர் நெருக்கடியான நிலையில் கடுமையான நிலைப்பாட்டைக் கையில் எடுக்கிறார்.

படம் மலை சார்ந்த மக்களின் தொன்மங்களை தொட்டுச்செல்கிறது. மக்கள் இயல்பான மொழியில் தங்களுக்குள் கிண்டலும் கேலியுமாக கொண்டாடிக்கொள்கிறார்கள். விரிவான விவரணைகளோ வசனங்களோ இன்றி அந்த மக்களின் வாழ்வியல் அசலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வால்பாறையில் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளேன். காலை 6.30 மணிக்கெல்லாம் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலையை ஆரம்பித்து விடவேண்டும். மழை பனி எதுவும் அவர்களுக்கு கிடையாது. சம்பள நாட்களில் வரிசையாக நின்று சம்பளம் வாங்குவதையும், எஸ்டேட் வாசலில் நின்றபடி வட்டியை அல்லது கடனை வசூல் செய்யும் ஆட்களையும் பார்த்துள்ளேன். வால்பாறையில் நான்கு கடைக்கு ஒரு அடகுக்கடை இருக்கும். மலையில் வாடும் மக்கள் அவ்வளவு எளிதாகவெல்லாம் காசு சேர்த்து விடமுடியாது. வால்பாறைக்கு போய்வரும் ஒவ்வொரு முறையும் நினைத்துக்கொள்வதுண்டு. இந்த கொண்டைஊசி வளைவு மலைப்பாதை மட்டும் தூர்க்கப்பட்டு விட்டால் இந்த வனம் மீட்கப்பட்டு விடும்; இந்த மக்கள் காசுக்கு கஷ்டப்படவேண்டியதில்லை-என்று நினைத்துக்கொள்வதுண்டு. படத்தில் கழுதை மீது பொதி சுமத்தி மலைக்கும் தரைக்கும் பொருட்களை பரிமாற்றம் செய்யும் முதியவருக்கு உடலுபாதை ரீதியாகவும் தன் பொருளாதாரம் சார்ந்தும் தலைச்சுமையாக ஆட்கள் பொருட்களை சுமப்பது ஒவ்வாததாக இருக்கிறது. அதைப்போலவே, சகாவு சாக்கோவுக்கும் மலையில் சாலை அமைப்பதும் எதிர்கால நோக்கில் தவறாகப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் தேயிலை, காப்பி ஏலக்காய் மிளகுத் தோட்டங்களை நிர்மாணித்ததற்குப் பிறகு மழையின் அளவு குறைகிறது. பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அதன் பின்னான நாட்களில் தான் கேரளாவுக்கும் தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் நதிநீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு பிரச்ச்னை நடக்கிறது. இந்தியாவின் மரபார்ந்த பெருமுதலாளிகளின் வல்லாதிக்க நிறுவனங்களுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையின் பெரும்பாலான பரப்பு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. வருடக்குத்தகையாக ஒரு ஹெக்டேருக்கு ஒரு ரூபாய் முதல் பத்துரூபாய் வரை மட்டுமே இவர்கள் கொடுக்கிறார்கள் என்றுஒரு மூணார் வாசி சொன்னார். அந்த பத்துரூபாயைக் கொடுத்து விட்டுத்தான் வனங்களை அழித்து, நீர்வழித்தடங்களை மறித்து, விலங்குகளின் வழித்தடங்களைத் தடுத்து பெரும் எஸ்டேட்டுகளும் தொழிற்சாலைகளும், ரிசார்ட்டுகளும் கட்டப்படுகின்றன. அரசும் தன்பங்குக்கு அணைகள், வனத்துறை மாளிகைகள், கல்விநிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றை கட்டுகிறது. இப்படியான முன்னேற்றங்களுக்கு அல்லது வளர்ச்சித்திட்டங்கள், சுலபமாக மீட்டுருவாக்கம் செய்ய முடியாத இப்படியான சூழலியல் சீர்கேடுகளை சமன்படுத்தும்  என்று நம்புவதற்கில்லை. இந்தப்படம் குறித்து ஒரு கட்டுரையில் அல்லது ஒரு சிறப்பிதழில் எழுதி முடித்துவிட முடியும் என்று எனக்குத்தோன்றவில்லை. வெகுகாலத்துக்கு இப்படம் பேசப்படும். சிற்சில குறைகள் இல்லாமலில்லை. ஆனாலும் மிகவும் தகுதி வாய்ந்த படம்.


கருத்துகள் இல்லை: