வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கலைஞர் எனும் வசீகர வார்த்தை


கலைஞர் எனும் வசீகர வார்த்தை
செப்டம்பர் 2018 உயிர்மை இதழில் வெளியான சிறு பதிவு





எங்கள் குடும்பத்தின் மிகப்பெரும்பாலான உறுப்பினர்கள் திமுக ஆதரவாளர்கள். அதற்கு ஒரே காரணம் கலைஞர் எனும் வசீகரவார்த்தை என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தக் காரணமும் தோன்றவில்லை. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதல் முறையாக சத்துணவில் முட்டை சேர்த்து வழங்கினார்கள். கலைஞர் பிறந்தநாள் அன்று அது ஆரம்பிக்கப்பட்டது. எனக்குத்தெரிந்து என் நினைவில் நிற்கும் கலைஞர் பற்றிய முதல் நினைவு அது. பேருந்தில் இலவசப்பயணம் பெற கலைஞரின் படம் போட்ட பாஸ் ஒன்றும் அந்த நாட்களில் வழங்கினார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக கவிதை என்ற பெயரில் ஒன்றை எழுதினேன். தமிழில் வாசிப்புக்கு என்னை ஈர்த்த முதல் இலக்கியப்பிரதி குங்குமம் இதழில் கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர். கல்லூரிக் காலத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சி. அப்போது அனைவரும் தமிழில் கையெழுத்திட கலைஞர் கேட்டுக்கொண்டார். அதுநாள் முதல் தமிழில் தான் கையொப்பம் இடுகிறேன். இளநிலைப் படிப்பு முடித்த பிறகு மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் முடித்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலமாக என் இளநிலை கல்லூரி வகுப்புத்தோழர்களில் ஐந்து பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற உதவ முடிந்தது. இதையெல்லாம் சாத்தியப்படுத்தியது பலரும் இன்று ஒத்துக்கொள்ள மறுக்கும் கலைஞரின் சமூகநீதியின் பயணங்கள். 

கலைஞர் என்ற வார்த்தை எப்போதும் என்னை வசீகரித்துக்கொண்டு இருப்பதற்கான அடையாளங்களாக வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, சென்னை மாநகரப்பூங்காக்களில் இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் சிலைகள், செம்மொழிப்பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, பராசக்தி, பொன்னர் சங்கர் காவியம் என இன்னுமிருக்கின்றன. கலைஞர் எனும் தீவிர அரசியல்வாதியின் இந்த கலை-இலக்கிய முகமே என்னை வசீகரித்து கலை இலக்கியங்களில் நாட்டம் கொள்ள வைத்தது. தொலைக்காட்சி –அச்சிதழ்களில் அரசியல் செய்திகளைக் கேட்பது மற்றும் படிப்பது என்பதைக் கூட மிகவும் விருப்பமாக ஆக்கியது கலைஞரின் வசீகரத்தமிழே. 

கலைஞர் எனும் கலைஞரின் கலை மனம் தந்த ஒவ்வொரு கொடையையும் பார்க்கும் போதும் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் இவர் போன்றதொரு ஆளுமை முன்னும் பின்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல்வேறு அரசர்கள் கலை இலக்கியங்களில் விற்பன்னர்களாக இருந்தார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் கலை இலக்கிய உலகில் தனக்கென ஒரு அரசாட்சியை அமைத்துக்கொண்ட வகையில், நவீன தமிழகத்தின் வரலாற்றில் என்றும் அழியாப்பெயருடன் இருக்கும்  அரசனாகவே நான் கலைஞரைப் பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை: