வெள்ளி, 21 செப்டம்பர், 2018

கால்சட்டை இல்லாமல் நடந்து போனான்

ஒரு கைக்குழந்தையை எந்த சூதானமும் இன்றி அநாயசமாக கையிலேந்தியபடி அந்தப் பெண் விரைவாக நடந்து கொண்டிருந்தார். பின்னால் அவரது கணவர் இரண்டு வயதிருக்கும் மகனை கையில் பிடித்து நடத்திக்கூட்டியபடி நெரிசலான அந்தச் சாலையில் (ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில்) நடந்து போனார். உடனிருந்த நண்பர் என்ன இப்படி அசிரத்தையாக போகிறார்கள் என்றார். பத்து நிமிடத்தில் கைக்குழந்தையை கணவனும் மூத்த மகனை மனைவியும் கூட்டிக்கொண்டு திரும்பி அதே வழியில் வந்தனர். கணவர் விரைவாக கடந்து போனார். மனைவி எங்களிடம் கையேந்தினார். ஏனோ இரு முறையும் இல்லை எனச் சொல்லி அனுப்பி விட்டேன். அவர்கள் நடக்கும் போதுதான் தெளிவாகப் பார்த்தேன். அந்தச் சிறுவனுக்கு செந்தூரன் வயதிருக்கும். கால்சட்டை இல்லாமல் நடந்து போனான். மிகவும் வேதனையாகிப் போனது. நண்பரிடம் வருத்தப்பட்டேன். மீண்டும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பத்து ரூபாய் கொடுத்திருந்தால் நிம்மதியாக இருந்திருக்கும். இந்த இரவு வேதனை மிக்க இரவு.

செப்டம்பர் 17, 2018; ஃபேஸ்புக் பதிவு

கலைஞர் எனும் வசீகர வார்த்தை


கலைஞர் எனும் வசீகர வார்த்தை
செப்டம்பர் 2018 உயிர்மை இதழில் வெளியான சிறு பதிவு





எங்கள் குடும்பத்தின் மிகப்பெரும்பாலான உறுப்பினர்கள் திமுக ஆதரவாளர்கள். அதற்கு ஒரே காரணம் கலைஞர் எனும் வசீகரவார்த்தை என்பதைத் தவிர எனக்கு வேறு எந்தக் காரணமும் தோன்றவில்லை. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது முதல் முறையாக சத்துணவில் முட்டை சேர்த்து வழங்கினார்கள். கலைஞர் பிறந்தநாள் அன்று அது ஆரம்பிக்கப்பட்டது. எனக்குத்தெரிந்து என் நினைவில் நிற்கும் கலைஞர் பற்றிய முதல் நினைவு அது. பேருந்தில் இலவசப்பயணம் பெற கலைஞரின் படம் போட்ட பாஸ் ஒன்றும் அந்த நாட்களில் வழங்கினார்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக கவிதை என்ற பெயரில் ஒன்றை எழுதினேன். தமிழில் வாசிப்புக்கு என்னை ஈர்த்த முதல் இலக்கியப்பிரதி குங்குமம் இதழில் கலைஞர் எழுதிய பொன்னர் சங்கர். கல்லூரிக் காலத்தில் மீண்டும் கலைஞர் ஆட்சி. அப்போது அனைவரும் தமிழில் கையெழுத்திட கலைஞர் கேட்டுக்கொண்டார். அதுநாள் முதல் தமிழில் தான் கையொப்பம் இடுகிறேன். இளநிலைப் படிப்பு முடித்த பிறகு மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் முடித்தேன். எனக்கு கிடைத்த வாய்ப்பின் மூலமாக என் இளநிலை கல்லூரி வகுப்புத்தோழர்களில் ஐந்து பேர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற உதவ முடிந்தது. இதையெல்லாம் சாத்தியப்படுத்தியது பலரும் இன்று ஒத்துக்கொள்ள மறுக்கும் கலைஞரின் சமூகநீதியின் பயணங்கள். 

கலைஞர் என்ற வார்த்தை எப்போதும் என்னை வசீகரித்துக்கொண்டு இருப்பதற்கான அடையாளங்களாக வள்ளுவர் கோட்டம், வள்ளுவர் சிலை, சென்னை மாநகரப்பூங்காக்களில் இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் சிலைகள், செம்மொழிப்பூங்கா, அண்ணா நூற்றாண்டு நூலகம், குறளோவியம், நெஞ்சுக்கு நீதி, பராசக்தி, பொன்னர் சங்கர் காவியம் என இன்னுமிருக்கின்றன. கலைஞர் எனும் தீவிர அரசியல்வாதியின் இந்த கலை-இலக்கிய முகமே என்னை வசீகரித்து கலை இலக்கியங்களில் நாட்டம் கொள்ள வைத்தது. தொலைக்காட்சி –அச்சிதழ்களில் அரசியல் செய்திகளைக் கேட்பது மற்றும் படிப்பது என்பதைக் கூட மிகவும் விருப்பமாக ஆக்கியது கலைஞரின் வசீகரத்தமிழே. 

கலைஞர் எனும் கலைஞரின் கலை மனம் தந்த ஒவ்வொரு கொடையையும் பார்க்கும் போதும் ஒப்பீட்டளவில் தமிழகத்தில் இவர் போன்றதொரு ஆளுமை முன்னும் பின்னும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல்வேறு அரசர்கள் கலை இலக்கியங்களில் விற்பன்னர்களாக இருந்தார்கள் என்று படித்திருக்கிறோம். ஆனால் ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் கலை இலக்கிய உலகில் தனக்கென ஒரு அரசாட்சியை அமைத்துக்கொண்ட வகையில், நவீன தமிழகத்தின் வரலாற்றில் என்றும் அழியாப்பெயருடன் இருக்கும்  அரசனாகவே நான் கலைஞரைப் பார்க்கிறேன்.

நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு


நாயக பிரபல்யம்-நாயக பிம்ப எதிர்ப்பு-இயக்குநர்களின் தெரிவு
      - செப்டம்பர் 2018 படச்சுருள் இதழில்                 வெளியான கட்டுரை
வணிக மையமான தமிழ் சினிமாவுக்குள் பிம்பங்களை மறுதலித்த அல்லது பிம்பங்களின் மீது நம்பிக்கையற்ற சில கூறுகளை மட்டும் நான் எடுத்துக்கொண்டுள்ளேன். பிம்ப எதிர்ப்பு என்பதை பிம்பத்தைக் கட்டமைக்காமல் விடுவது என்று ரீதியில் இந்தக் கட்டுரை விசாரணை செய்கிறது. பிம்பம் என்பதை வெறும் நாயக பிம்பமாக மட்டும் நாம் பார்க்க வேண்டியதில்லை. இங்கே நாயகனுக்கு பிம்பம் உள்ளது; நாயகிக்கு பிம்பம் உள்ளது; இயக்குநருக்கு, ஒளிப்பதிவாளருக்கு, நடன இயக்குநருக்கு, குழந்தைகளுக்கு, துணை நடிகர்களுக்கு என எல்லோருக்கும் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் உள்ளன. நாயக பிம்பமானது எம்.கே.டி. தியாகராஜ பாகவதர் காலத்தில் இருந்தே உள்ளது. அது சிவாஜி கணேசன்-எம்.ஜி. ராமச்சந்திரன் காலங்களில் படங்களின் போக்கையே மாற்றியமைத்து இயக்குநர்களை கைவிலங்கோடு வேலை செய்யும் கொடுமையான நிலைக்குத் தள்ள ஆரம்பித்தது. நாயகியருக்கான பிம்பம் பின்னாட்களில் கண்ணாம்பாள் போன்ற நடிகைகளை அம்மா வேடங்களுக்கு என கட்டமைப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது. நிறையப் படங்களில் குழந்தைகள் காதலுக்குத் தூது போவார்கள். 80-90 களில் வந்த படங்களில் குழந்தைகள் காதலர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டன. குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் அதிமேதாவியாகக் காட்டுவதும் ஒரு வகையில் பிம்பக் கட்டமைப்புதான். கலைவாணர் காலத்தில் இருந்து காட்சிக்கு ஒவ்வாத உரையாடல்களோடும், சேஷ்டைகளோடும் நகைச்சுவை நடிகர்களின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டது. தெருக்கூத்து காலங்களில் இருந்தே கோமாளிகள் மையக்கதையோடு ஒட்டாமல் தனித்து இயங்குவதாகத்தான் அவர்களின் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. சில இயக்குநர்கள் படங்களுக்கு பெயர் சூட்டுவது முதல் டைட்டில் கார்டு போடுவது, இடைவேளை விடுவது என தமது தனிப்பட்ட பிம்பத்தை படங்களில் கொண்டு வந்துள்ளனர். திரைப்படம் என்பது இப்படியான தனிநபர்களைத் தவிர்த்த ஒரு கலாபூர்வமான செயல்பாடு. ஆனால் அது வணிகம் என்ற கட்டுக்குள் வந்த போது அதை பிம்பப்படுத்துவது கட்டாயமாகிறது. வியாபாரத்துக்கு பிராண்ட் அவசியம் என்று பேசப்படும் காலம் இது.  கேரள நண்பர் ஒருவர் ஒரு விநோதமான தகவலைச் சொன்னார். தமிழ் சினிமாவில் மட்டுமே ஒரு நடிகரின் ஒரு படத்தில் வந்த பாத்திரத்தின் பிம்பத்தை இன்னொரு படத்திலும் தொடர்கிறார்கள் என்று. ஒரு படத்தில் பெரும்பாலும் அது நகைச்சுவைக்கு உபயோகப்பட்டாலும் அதுவும் ஒருவகை பிம்பக் கட்டமைப்பே. ‘வரும்… ஆனா வராது’ என்று ஒரு படத்தில் பிரபலமான அந்தக் காட்சியில் ‘என்னத்த’ கண்ணையா சொல்வார். அவரே வேறொரு படத்தில் கதாநாயகனிடம் கேட்பார் ‘தம்பி அவங்களுக்குள்ள சண்டை வருமா…வராதா….???’ அதற்கு நாயகன்   ”ஓ! நீயா!…வரும்… ஆனா வராது” என்பார். இப்படியாக சகல மட்டத்திலும் பிம்பங்களைக் கட்டமைத்தல் தமிழ் சினிமாவுக்குள் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த எல்லா பிம்பங்களிலும் மிகவும் முக்கியமானதும், ஒரு படத்தின் இயல்பையே மாற்றிப்போடுவதுமானது நாயக பிம்பம் தான். சினிமா வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டதால், இவர் படம்…அவர் படம்…என நாயகர்களை மையப்படுத்தி சினிமாவின் இயல்பான கதை சொல்லும் முறை பாதிப்புக்கு உள்ளாகிறது. நாமறிந்த வகையில் தயாரிப்பாளர்களும், நாயகர்களும் பெரும்பாலான எடுத்துக்காட்டுகளில் இப்படியான பிம்பச் சிக்கல்களுடன் கூடிய சினிமாக்களை உருவாக்கி விடுகிறார்கள். ஒரு நாயகனின் கால்ஷீட் கிடைத்த பிறகே கதையை யோசிக்கும் பரிதாபத்துக்கும் இயக்குநர்கள் ஆளாகிறார்கள். அநேகப் படங்களில் அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி என்று கற்பிக்கப்படுகிறது. ஓரிரு இயக்குநர்களே இப்படியான பிம்பங்களை எதிர்க்கிற அல்லது மறுக்கிற சினிமாக்களை எடுத்துள்ளார்கள்; எடுத்தும் வருகிறார்கள். ‘மகதீரா’ என்ற படத்தை எடுத்த பிறகு அந்தப் படத்தில் சிறிய பாத்திரம் ஏற்ற சுனில் என்ற நடிகரை நாயகனாக வைத்து ‘மரியாதை ராமண்ணா’ என்ற வணிக ரீதியான வெற்றிப் படத்தைக் கொடுத்தார் தெலுங்கு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. ‘மகதீரா’ படத்தின் வணிக வெற்றிக்கு அதன் நாயகனே காரணம் என்ற பேச்சைப் பொய்யாக்கவே ராஜமவுலி இப்படியான படத்தை எடுத்தார் என்ற கருத்தும் பரவலாக உலவுகிறது. என்றாலும் பிம்பங்களை கட்டமைக்கும் இயக்குநர்களால் அந்த பிம்பங்களை உடைக்கவும் முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தின் நீரோட்டம் இதுவே. சேது என்ற கச்சாவான ரவுடி பாத்திரத்தை கோமாளி போலக் காட்டமுடியும் என்பதாக படத்தில் காட்சிகள் வருகின்றன. பாரதிராஜா தன்னுடைய ‘பதினாறு வயதினிலே’ படத்தில் நாயக பிம்பத்தை உடைத்தார் என்று பலரும் சிலாகிப்பதுண்டு. ஆனால் அந்தப் படத்தில் ‘சப்பாணி’ என்ற பாத்திரத்தில் நடிப்பது கமல்ஹாசன் என்ற பிரக்ஞை நமக்கு ஏற்படுத்தாமல் போனால் ஒழிய அப்படியான சிலாகிப்பை நாம் ஏற்க முடியாது. பாலு மகேந்திராவின் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில், சிறைச்சாலைக்குள் நாயகன் ஒரு காவலரால் கடுமையாக தாக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும், மூன்று நிமிடங்கள் நீளும் அந்தக் காட்சியும் ஒரு வகையில் நாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிப்பதாகவே பார்க்க முடிகிறது.
பிரபல்யம் அடைந்து விடுகிற நடிகர்கள் நடிக்கிற படங்களில் பிம்பத்தை எப்பாடு பட்டும் எதிர்க்கவோ உடைக்கவோ முடிவதில்லை. ஆகவேதான் பிம்பங்களை நம்பாமல் சினிமாவைத்தர விரும்பும், விரும்பிய இயக்குநர்கள் பிரபலமான நடிகர்களை தவிர்த்து நல்ல படம் கொடுக்க முயல்கிறார்கள். 70 களின் இறுதி மற்றும் 80 களின் ஆரம்பங்களில் தமிழ் சினிமா சில அற்புதமான இயக்குநர்களின் படங்கள் மூலமாக மெல்ல மெல்ல உயர்தரத்துக்குப் போகின்ற வேளையில், ஏ.வி.எம் நிறுவனம் சீரான இடைவெளியில் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எஜமான் போன்ற நாயக துதிப் படங்களைக் கொடுத்து வந்தது. இப்படியான படங்களின் வணிக வெற்றி இந்த வகை மாதிரியில் மேலும் சில நூறு படங்களைக் கொடுக்கும் ஆபத்தை  உருவாக்கின. 2002 இல் ‘ஜெமினி’ என்னும் படத்தையும் இதே போல இந்த நிறுவனம் உருவாக்கியது. இப்படியான நிறுவன மயமான படத் தயாரிப்புகள் லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொள்ளும் போது, வெற்றிகரமான பிம்பக் கட்டமைப்பு உள்ள படங்களே உருவாக முடியும். இந்த அசாதரணமாக சூழலிலும், சில இயக்குநர்கள் பிம்பங்களை உடைத்தெறியும் பரிசோதனைகளும் செய்துள்ளார்கள்.
நாயகர்கள் என்றால் அழகானவர்கள் வசீகரமானவர்கள் என்ற பிம்பங்களை ஆரம்பத்தில் சில தமிழ் இயக்குநர்கள் உடைத்தார்கள். அதில் பாலச்சந்தர் முக்கியமானவர். நாகேஷ் என்ற நடிகரை நாயகனாக ஆக்கி (தன் நாடகீய பாணியிலான கதை சொல்லலை முன்னிறுத்திய போதும்) நாயகர்களுக்கான சிறப்பு கவனிப்பை கேள்விக்கு உள்ளாக்கினார். பின்னாட்களில் இப்படியான நாயகர்களுக்கான சிறப்பு பிம்பத்தை உடைத்தவர்களில் இயக்குநர் பாலாவும் ஒருவர்.  தனது முதல் படம் தொடங்கி எல்லாப் படங்களிலும் நாயகர்களுக்கு அவர்களின் சொந்த முகமே மறந்து போகுமளவுக்கு மாறுபட்ட தோற்றங்களைக் கொடுத்தார். ‘சேது’ படத்தில் முதல் பாதியில் இயல்பான தோற்றத்தோடு வரும் நாயகன் பிற்பாதியில் பரிதாபத்துக்குரிய தோற்றத்துக்கு மாறி விடுவார். ‘இரத்தக் கண்ணீர்’ போன்ற நிறைய படங்களில் இப்படி நாயகர்களின் தோற்றம் மாறியிருந்த போதும் ஒரு வித தீவிரத்தன்மையோடு அப்படியான மாற்றங்களை தனக்கான பிம்பமாக கட்டமைத்தவர்களில் பாலா முக்கியமானவர். தமிழ் சினிமாவில் வழக்கமான சில நாயக பிம்பங்களை உடைத்த இயக்குநர்களில் டி.ராஜேந்தரும் ஒருவர். பெரும்பாலான படங்களில் போராட்டங்களை சந்திக்கும் நாயகர்களுக்கு இறுதியில் வெற்றியே கிடைக்கும். ஆனால் டி.ராஜேந்தரின் அநேக நாயகர்கள் தோற்றுப்போவார்கள் அல்லது இறந்து போவார்கள். ஆனால் இப்படியான பிம்ப உடைப்புகள் காட்சி அனுபவத்துக்காகவோ கலைக்காவோ என்று சொல்ல முடியாத நிலை தமிழ் சினிமாவில் தான் உண்டு. மேற்சொன்ன மற்றும் அவர்களை ஒத்த நாயக பிம்பங்களை அசைத்த இயக்குநர்கள் அதை நாயக பிம்பங்களை உடைப்பதற்கான உந்துதலில் செய்தார்கள் என்று சொல்ல முடியாது. சந்தர்ப்ப வசமாக நாயக பிம்பங்களை உடைத்த சில சினிமாக்கள்-இயக்குநர்கள் உண்டு. பாலுமகேந்திரா, பாரதிராஜா மணிரத்னம் போன்ற இயக்குநர்களின் படங்களில் நாயகர்களுக்கு அவர்களின் சொந்த பிரபல்யத்தை இவர்களின் படங்களில் பிரதிபலிக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அப்படியான பிம்ப உடைப்புகள் இப்படியான இயக்குநர்களின் பிம்பங்களை கட்டமைத்துக்கொள்ளவே உதவியது.
வணிகசினிமாவின் பரப்பில் நாயக பிம்பங்களை உடைத்த இயக்குநர்களில் முக்கியமானவர்கள் மகேந்திரன் மற்றும் தேவராஜ்-மோகன். இதில் இயக்குநர் மகேந்திரன் ரஜினிகாந்த் மாதிரியான பிரபலமான நடிகர் பில்லா போன்ற நாயகத்துதி படத்தில் நடிக்கிற காலக்கட்டத்தில் ஜானி போன்றதொரு படத்தைக் கொடுத்தார். ஜானி நாயக பிம்பங்களை உடைத்த படம் அல்ல என்ற போதும் நாய பிம்பங்களை மறுதலித்த படங்களில் முக்கியமான படம். மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்திலும் நாயகனின் பாத்திரம் வழமையான பிம்பங்களை உதறியதாகவே இருக்கும். 1970-80 களில் சுமார் 17 படங்கள் இயக்கிய தேவராஜ்-மோகன் இயக்குநர் இணை நாயக பிம்பங்களை மறுதலித்த அல்லது ஒதுக்கிய ஒன்றாகும். இவர்களது பத்துக்கும் மேற்பட்ட படங்களின் நாயகன் சிவக்குமார். இந்த இரட்டையர்களின் மிக முக்கியமான படம் 1979 இல் வெளிவந்த ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்ட கதையாக கட்டமைக்கப்பட்ட இந்தச் சினிமாவில் ‘செம்பட்டை’ எனும் கதையின் நாயகப் பாத்திரம் முக்கியமானது. வணிக மையமான தமிழ் சினிமா இலக்கணப்படி நாயகியர் அனைவரும் ஒழுக்கத்தில் சுத்தமானவர்கள். அவர்கள் கற்பு நெறி வழுவுவதில்லை. இந்த இலக்கணமும் நாயக பிம்பத்தைக் கட்டமைக்கவே. பெரும்பாலான படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களின் இணையர் பாத்திரங்கள் கையில் மதுவோடும் அரைகுறை ஆடையோடும் இருப்பர். நாயகி நாயகனைத்தவிர மற்றெல்லாரிடமும் மிக ஒழுக்கமாக இருப்பதாகவே அநேகப் படங்கள் இருக்கும். ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் நாயகிக்கு வேறொரு ஆணின் உறவு முக்கியமாகப் படும். அதைக் கேட்டும் அல்லது கண்டும் நாயகன் தமிழ் சினிமா வழக்கப்படி வெட்டாமல், தன்னுயிரை மாய்த்துக் கொள்வான். இப்படியான காட்சியமைப்புகள் உள்ள படங்கள் அந்தக் காலக்கட்டங்களில் அவ்வப்போது வந்த போதும் அப்படியான படங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் பிரபல்ய விசையில் சிக்காத நாயகர்களே.
தமிழ் சினிமாவின் எல்லா காலக்கட்டங்களிலும், பிரபல வெளிச்சம் படாத சில நடிகர்கள் நாயகர்களாக சில படங்களில் நடித்து வந்துள்ளனர். நிதி நெருக்கடி போன்ற ஏதேதோ காரணங்களுக்காக அவர்களை இயக்குநர்கள் உபயோகப்படுத்தி வந்த போதும் அப்படியான நடிகர்கள் நடித்த அநேக திரைப்படங்கள் நாயக பிம்பங்களை மறுதலித்த அல்லது நாயக பிம்பங்களை பெரிதாக தூக்கிப்பிடிக்காத படங்களே. நாகேஷ் நாயகனாக நடித்திருந்த போதும் அவருக்கு ஒரு முத்திரை குத்தப்பட்டது. அதுவும் ஒரு பிம்பமாக நின்று விட்டது. அப்படியான முத்திரைகள் பிம்பங்கள் ஏதுமன்றி படங்களில் நடித்த நாயகர்களின் குறிப்பிடத்தக்கவர்கள் சிவக்குமார், ராஜேஷ், சுதாகர், ராஜா போன்றோர்.  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் ‘செம்பட்டை’ என்ற பாத்திரத்தை ஏற்று நடித்த சிவக்குமாரால் எந்த யோசனையும் இன்றி அதற்கு நேர் மாறான ‘ஜே.கே.பி’ என்ற மிடுக்கான கர்நாடக சங்கீத வித்வான் வேடத்தில் சிந்து பைரவியில் நடிக்க முடிந்தது. ‘கிழக்கே போகும் ரயில்’ துவங்கி பல படங்களில் நடித்துள்ள சுதாகர் அந்தக் காலக்கட்டங்களில் சிறிய பட்ஜெட் படங்களின் விருப்பமான நாயகனாக எந்த பிம்பமும் இன்றி நடித்துள்ளார். எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சிம்பு, தனுஷ் எனத்தொடங்கி நடிகர்களின் பிரபல்யத்துக்கு ஏற்ப தமிழின் வணிகத்திரைப்படங்கள் நாயக பிம்பம் என்ற மாய வலைக்குள் விழுந்தன. இயக்குநர்களே நினைத்தாலும் நாயக பிம்பத்தை உடைக்க முடியாத அளவுக்கு நடிகர்களின் பிரபல்யம் ஆட்டிப்படைத்தது. ஆட்டிப்படைக்கிறது. ஒளிவிளக்கு என்ற படத்தைத் தவிர எம்.ஜி ராமச்சந்திரன் வேறு படங்களில் குடிப்பது போன்ற காட்சிகளில் நடித்தது கூட இல்லை; டி.ராஜேந்தரின் நாயகிகள் எவ்வளவு சிறிய உடைகளோடு ஆடினாலும் அவர்களின் மேல் சுண்டு விரல் கூட பட்டு விடாமால் தொடாமல் நடிப்பார்; இது போன்ற சினிமாக்களுக்கு அப்பாற்பட்ட ஒழுக்கசீல பிம்பங்களும் நாயக பிம்பங்களை உயர்த்திப் பிடித்தன.
ஏ.பி. நாகராஜன் போன்ற இயக்குநர்கள் புராண இதிகாசப் பாத்திரங்களை நாயகப் பாத்திரங்களாக்கி படங்களைக் கொடுத்து வந்தனர். அதே காலகட்டத்தில் திராவிட இயக்கங்களின் தாக்கமாக அல்லது திராவிட இயக்கங்களின் பிரச்சார சாதனங்களாக வந்த சினிமாக்கள் பெரும்பாலும் கதையை முன்னிறுத்தின. நாயகர்களின் தனிப்பட்ட பிம்பம் அதில் முன்னிறுத்தப் படவில்லை. இப்படியான சிறிய மாற்றங்களைக்கூட ஏ.பி. நாகராஜனின் புராணப்படங்கள், தேவர் பிலிம்ஸின் பக்தி மற்றும் விலங்குகளை முன்னிறுத்திய படங்கள் சிதறடித்தன. பின்னாட்களில் திராவிட இயக்க பிரச்சாரங்களுக்காக முன்னிறுத்தப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பிரபல நடிகர்கள் நாயக பிம்பங்களை தமக்காக வளர்த்துக்கொண்டனர். சினிமாக்களில் இவர்களுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து உடைந்து நொறுங்கின. ‘காலா’ படத்தில் நாயகன் அறிமுகக் காட்சியில், கரிகாலன் ஒரு சிறுவனின் பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகும் காட்சியில் ரஜினிகாந்த்தை பொருத்திப் பார்க்க அவர்களின் ரசிகர்களுக்கு வேண்டுமானால் முதிர்ச்சி இல்லாமல் போகலாம். ஆனால் ஊடகங்கள் கூட அந்தக் காட்சியைப் போதாத காட்சியென்றே வர்ணித்தன. ரஞ்சித் அந்தக் காட்சியைக்கூட ஒரு வகையான பிம்பக் கட்டமைப்புக்கு வைத்திருக்க வாய்ப்புண்டு. பாலா தனக்கென ஒரு பிம்பத்தை நிறுவ நாயகர்களை தோற்றப்பொலிவின்றி காட்டுவது போல.
காவிய புராண காலங்களில் இருந்தே இந்தியாவிலும் தமிழகத்திலும் கலை இலக்கியங்களில் பிம்பமாக கட்டமைக்கபடும் நாயகப் பாத்திரங்கள் எப்போதும் உண்டு.  இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நாயகர்களுக்கும் கட்டமைப்பட்ட பிம்பம் உண்டு. பழந்தமிழ் இலக்கியங்களிலும் விதந்தோதப்படும் நாயகப் பாத்திரங்கள் உண்டு. இராஜபார்ட் என்ற பெயரில் கடந்த நூற்றாண்டின் நாடகங்களில் நாயக பிம்பம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. வசீகரமான குரல்வளம் மிக்க நடிகர்களே அந்தப் பிம்பங்களுக்குள் பொருந்தி நாடக நடிகர்களாக வலம் வந்தனர். புராண நாடகங்களின் தொடர்ச்சியாக பரிணாம வளர்ச்சி பெற்ற தமிழ் சினிமா அதே போலவே தோற்றப்பொலிவும் குரல்வளமும் மிக்க நாயகர்களைக் கொண்டே வளர்ந்தது. ஆனால் ஆரம்ப கட்ட படங்களில் நாயகனின் பிரபல்யம் படங்களின் போக்கை நிர்ணயித்ததாக தெரியவில்லை. ஆனால், எம்.ஜி.ராமச்சந்திரன்-சிவாஜி கணேசன் போன்ற நடிகர்கள் வந்த பின் நாயகர்களின் தனிப்பட்ட பிரபல்யம் நாயக பிம்பத்தை கட்டமைத்து சினிமாக்களின் இருப்பையே மாற்றின. ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் உச்ச நட்சத்திரம் என்ற மிகை பிரபல்யத்தை அடைந்ததும், சினிமாவில் நடித்தவர்கள் அரசியல் தலைமை ஏற்றதும், நாயக பிம்பங்களை இன்னும் தீவிரமாக கட்டமைக்கக் காரணமாக அமைந்தன. ஆரம்பக் கட்டங்களில் இருந்தே சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதையும், காட்சி மொழியே சினிமாவின் ஆன்மா என்பதையும் நாயக பிம்பங்கள் மறைத்து விட்டன. அவ்வப்போது சில சிறிய சலனங்கள் ஏற்பட்ட போதும் நாயக பிம்பங்களை உடைத்துப் போட்டு சினிமாவின் ஆன்மாவைத் தூக்கி ப்பிடிக்கும் படங்கள் தமிழில் இனிமேல் தான் வரவேண்டும்.



ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

ஒரு குழந்தை இறக்கிறது


ஒரு குழந்தை இறக்கிறது
குறி இதழ் 21 இல் வெளியானது

முன்னொரு காலத்தில் ஒரு குழந்தை இருந்தது.
ஆலை விபத்தில்
விழிகள் திறந்திருந்தபடி
இறந்து போனது அது…

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
பிறக்கும் முன்பாகவே
தாயின் வயிற்றில் இருந்து
வாளால் அறுத்து எடுக்கப்பட்டு
தீயிலிடப்பட்டு
இறந்து போனது.

அதே குழந்தை
பின்னொரு நாளில்
கடல்சூழ் நாட்டில்
வேதிக்குண்டுகள் வீசப்பட்டு
இறந்து போனது.

அதே குழந்தை 
இன்னொருமுறை இறந்துபோகும் முன்
கரியாகிக் கிடக்கும் தன் தமயனை
எரிந்தபடியே நின்றுபார்த்தது.

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
கடற்கரை மணலில் முகம் புதைந்தபடி
இறந்து போனது

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
சகோதரியின் வன்கலவியின் போது
கழுத்தறுபட்டு இறந்து போனது.

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
நெஞ்சில் துப்பாக்கி குண்டு வாங்கி
கால்மடிந்தபடிக்கு
இறந்து போனது

அதே குழந்தை
பிறிதொரு நாளில்
சகோதரிக்கு தன் மூச்சை வழங்கி விட்டு
நச்சுக்குண்டுக்கு
இறந்து போனது

அதே குழந்தை-
யாரோ ஒருவருடைய யுத்தத்தால்…
யாரோ ஒருவருடைய சாதி வெறியால்…
யாரோ ஒருவருடைய மதவெறியால்…
யாரோ ஒருவருடைய வல்லரசுக் கனவால்..
இன்னும்-
என்னென்னவோ வழிகளிலெல்லாம்
இறந்து கொண்டிருக்கிறது.

யாராவது தேவதூதர்கள் வந்து
இந்த உலகை
குழந்தைகள் வாழத்தகுந்த உலகாக
ஆசிர்வதிக்கும் வரை
அந்தக் குழந்தை
இறந்து கொண்டிருக்கும்.

உயிராலானது இவ்வுலகு-சூழலியல் தொடர் கட்டுரைகள்


குறி இதழ் 22 இல் வெளியான கட்டுரை
உயிராலானது இவ்வுலகு-சூழலியல் தொடர் கட்டுரைகள்
மணி ஜெயப்பிரகாஷ்வேல்
நமது புவி இருக்கக்கூடிய சூரியக் குடும்பத்தில் புவியோடு சேர்த்து 8 பெரிய கோள்கள் உள்ளன. 500க்கும் மெற்பட்ட துணைக்கோள்களும், 70 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட சிறுகோள்களும் உடைய நமது சூரியக்குடும்பம் சூரியனைப் போன்ற 400 பில்லியன் (1 பில்லியன் = 100 கோடி) நட்சந்த்திரங்களையும் 100 பில்லியன் கோள்களையும் உள்ளடக்கிய பால்வீதி (Milky Way) நட்சத்திர மண்டலத்தின் (Galaxy) ஒரு அங்கம் ஆகும். பால்வீதியைப் போல சுமார் 100 பில்லியன்  நட்சத்திர மண்டலங்கள் (Galaxy) விரவிக்கிடக்கின்ற பெருவெளிதான் நமது பிரபஞ்சம். ஆனால், நமது மானுடகுலத்தின் தற்கால அறிவுக்கு எட்டியவகையில், உயிரினங்கள் வாழத்தகுந்ததாக நீர்வளம், நிலவளம், வளிவளம் உடைய ஒரே ஒரு அமைப்பு இப்புவி மட்டுமே. அதாவது நம்மை உயிரோடு வைத்திருக்கவும், நாம் உயிரோடு வைத்திருப்பதற்கும் ஒரே ஒரு புவிதான் உள்ளது.

கடையில் போய்க் காசு கொடுத்தால் பொருள் கிடைப்பதைப் போல அவ்வளவு எளிதாக நமக்கு இந்தப் புவி கிடைத்துவிடவில்லை. பெருவெடிப்பு (Big Bang) எனும் வானியல் நிகழ்வின் மூலமாக  சுமார் 1500 கோடி ஆண்டுகள் முன்பாக நமது பால்வீதி நட்சத்திர மண்டலம் தோன்றியது என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 460 கோடு ஆண்டுகள் முன்னதாக சூரியக்குடும்பம் மற்றும் அதில் காணப்படும் கோள்களும் பால்வீதியில் உருவாகின என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தின் முன்வரிசைக் கோள்களான புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் போன்றவற்றின் உட்புறம் தோன்றிய காலத்தில் இருந்தே திரவநிலையில் உள்ள உலோகங்களாலும் மேற்பரப்பில் கடின பாறைகளாலும் ஆகியுள்ளன. பின்னாலுள்ள வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை வாயுக்கள் நிரம்பியனவாகவும் குளிர் நிரம்பியனவாகவும் உள்ளன. சூரியக்குடும்பம் தோன்றிய முதல் 100 கோடி ஆண்டுகள் வரை புவியின் மேற்பரப்பு மிகவும் அசாத்தியமானதாக இருந்திருக்கிறது. விண்வீழ்கற்களால் (Meteors) தொடர்ச்சியாக தாக்குண்டு வந்தது. ஆரம்பகட்ட புவியில் மழை இல்லை. நீர் இல்லை. ஆக்சிஜன் இல்லை. போகப்போக புவியானது குளிர ஆரம்பித்தது. மேலோடு கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பித்த காரணத்தால் ஹைட்ரஜன் ஹீலியம் போன்ற வாயுக்கள் ஆதார மூலகங்களோடு (elements) இணைந்து பல்வேறு வேதிப்பொருட்களையும் சேர்மங்களையும் உருவாக்கின. புவியின் நடுப்பகுதி (core) இரும்பு மற்றும் நிக்கல் போன்ற மூலகங்களால் (elements) ஆனது.  உள்ளோடு (mantle) கடின உலோகங்களாலும், வெளியோடு (crust) ஏனைய மென்மூலகங்களாலும் ஆனது.
புவியீர்ப்பு விசையின் காரணமாக இப்புவியான இதுநாள் வரை தனது வளிமண்டலத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஆரம்பகட்ட புவியில் ஆக்சிஜன் இல்லையென்பதால் ஆக்சிஜன் மூலம் உண்டாகும் ஓஸோன் வாயுவும் ஒஸோன் படலமும் புவியில் இல்லை. அதனால் சூரியனின் புற-ஊதாக்கதிர்கள் உள்ளிட்ட வலுவான கதிர்கள் நேரடியாக புவியில் பாய்ந்து கணக்கிலடங்கா வேதியியல் வினைகளை ஏற்படுத்தி கலவையான சேர்மங்களையும், உப்புக்களையும் உண்டாக்கின. முதல் 100 கோடி ஆண்டுகளின் இறுதியில் புவியில் மழையின் மூலமாக நீர் தேங்க ஆரம்பித்தது. மழை என்றால் சாதாரணமாக அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்மழையால் புவியில் கடல்கள் உருவாகின. நாமறிந்த வகையில் புவியில் மட்டுமே திரவ நிலையில் நீர் உள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய நீர்தான் புவியை ஒரு உயிர்க்கோளமாக மாற்றியது. சுமார் 350 கோடி ஆண்டுகள் முன்னதாக, புவியின் பெருங்கடல்களில் முதல் உயிரினங்கள் தோன்றின. மின்னல் மற்றும் நீரில் ஏற்பட்ட வேதிவினைகளால் கரிமச்சேர்மங்கள் முதலில் உருவானதாகவும், அதன்மூலமாக நியூக்லிக் அமிலங்கள் எனப்படும் மரபியல்கூறுகள் உருவானதாகவும் நமது ஆய்வுகள் சொல்கின்றன. நியூக்ளிக் அமிலங்கள் மற்றும் புரத மூலக்கூறுகள் இணைந்து முதன் முதலாக ஒரு செல் உயிரினங்கள் கடலில் தோன்றின. புவியில் இந்த ஒருசெல் உயிரிகள் தனித்தே பண்ணெடுங்காலம் நிலைத்து வாழ்ந்தன. இன்னமும் வாழ்கின்றன. சுமார் 200 கோடி ஆண்டுகள் முன்பாக இப்புவியில் ஆக்சிஜன் உருவானது. ஒளிச்சேர்க்கை செய்யும் நீலப்பச்சைப்பாசி போன்ற ஒரு செல் உயிரிகளால் ஆக்சிஜன் உருவானது. ஆக்சிஜன், நீர் மற்றும் கரிமச் சேர்மங்கள், உயிர்களின் பரிணாம வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றன. சுமார் 150 கோடி ஆண்டுகள் முன்னதாக பலசெல் உயிர்கள் தோன்றின. நாம் இன்று பார்க்கக்கூடிய அமைப்பிலான தாவரங்களும் விலங்குகளும் சுமார் 50 கோடி ஆண்டுகள் முன்பாக பரிணாமவளர்ச்சியில் உண்டாகின. மனிதன் என்ற உயிர் சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக உண்டாகி இருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 460 கோடி ஆண்டுகள் வரலாறு உடைய புவி எனும் உயிர்க்கோளத்தை வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகள் முன்பு தோன்றிய மனிதன் அதிவிரைவாக அழிக்க ஆரம்பித்துள்ளான்.
நமது வளியடுக்குகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இப்படியான வளியடுக்குகள் நமக்கு நேர்வதற்கு சுமார் 450 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. காற்றில் 21 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. இது அதிகமானால் வளியடுக்குகளில் தீப்பற்றி வாயுக்கள் சூடாகி பூமியை விட்டு வெளியேறிவிடும். குறைந்தால் புவியில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. அதே போல நைட்ரஜன் வாயுவானது சுமார் 78% உள்ளது. இந்த மந்தவாயு அதிகமாக இருப்பதால்தான் ஆக்சிஜன் எனும் கடுமையான எரியும்தன்மையுள்ள வாயு வளிமண்டலத்தில் எரியாமல் நிலை பெற்றுள்ளது. இதுதான் ஒருசெல் பலசெல் என எல்லாவிதமான உயிரினங்களிலும் காணப்படும் அணைத்து உயிர்மமூலக்கூறுகளுக்கு ஆதாரப் பொருள். உடலில் அத்தனை உயிர்ச்செயல்களையும் செய்யக்கூடிய நொதிகள், புரதங்கள், வைட்டமின்கள் என எல்லாவற்றிலும் நைட்ரஜனின் மூலக்கூறுகள் உள்ளன. நமது டி.என்.ஏ வில் மரபுத்தகவல்கள் சேகரிக்கும் தன்மையும் நைட்ரஜன் அடங்கிய மூலக்கூறுகளால் தான் சாத்தியமாகிறது.
கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் இவை இல்லாத உயிர்க்கோளம் சாத்தியமில்லை. அனைத்து உயிர்களிலும் உள்ள அனைத்து உயிர்மமூலக்கூறுகளிலும் இந்த மூலகங்கள் பகுதிப்பொருட்களாக உள்ளன. நமது உடலை அல்லது எதோ ஒரு ஒரு செல் உயிரியின் உடலை ஒரு வீட்டுடன் ஒப்பிட்டால், அந்த வீட்டின் செங்கற்களாக இருப்பவை கார்பன் அடங்கிய மூலக்கூறுகள் தான். நமது உயிர்ச்செயல்களுக்குத் தேவையான கார்பன் வளிமண்டலத்தில் இருந்தே ஆதாரமாக பெறப்படுகிறது. கார்பன் அதிகளவில் கார்பன் டை ஆக்ஸைடு வடிவில் சுமார் 0.004% வளிமண்டலத்தில் உள்ளது. வழக்கமாக மாசு என்று சொல்லப்படும் இந்த வாயுவின் புவியியல் மற்றும் உயிரியல் முக்கியத்துவம் இன்றியமையாதது. வளிமண்டலத்திற்குள் நுழையும்  கதிர்வீச்சுடன் கூடிய சூரியனின் வெப்ப ஆற்றலானது புவியின் மேற்பரப்பில் பட்டுத் திரும்பும் போது அதை தக்கவைத்துக் கொள்வது இந்த வாயுதான். அப்படி நடக்காவிட்டால் புவி முழுவதும் துருவப்பகுதிகளைப்போல பனியால் மூடப்பட்டு விடும். புவியின் மேற்பரப்பில் கதகதப்பான தட்பவெப்பம் நிலவுவதற்கு குறைந்த அளவு கார்பன் டை ஆக்ஸைடு வாயு தேவை. உலகின் உணவை உற்பத்தி செய்யும் ஒளிச்சேர்க்கை, அந்த உணவைச் சிதைத்து உயிர்களுக்குத் தேவையான சக்தியை (ATP) உருவாக்கும் வளர்சிதை மாற்றம் ஆகிய இரண்டு இன்றியமையாத உயிர்ச்செயல்களிலும் கார்பன் டை ஆக்ஸைடு தவிர்க்கமுடியாத பங்கு வகிக்கிறது. இந்த கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும் போது, வளிமண்டலம் சூடாகிறது. துருவப்பகுதிகளின் பனி உருகி கடல்நீர் மட்டம் உயர்கிறது. வளியடுக்குகளில் வெப்பம் கூடுவதால் பருவகால மாற்றங்கள் நிலைபிறழ்ந்து வெள்ளம், புயல், வறட்சி போன்ற பேரழிவுகள் நிகழ்கின்றன.
இப்படியாக கடந்த 460 கோடி ஆண்டுகளில் நமது புவியில் ஒவ்வொரு மூலங்களும், ஒவ்வொரு அமைப்பும் மிகக் கச்சிதமான அளவில் உருவாக்கப்பட்டு பேணப்பட்டு, ஒரு செல் உயிரினங்கள் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும்  வாழத்தகுந்த உயிர்க்கோளமாக இப்புவி மாறி உள்ளது. இது யாராலும் திடீரென்று உருவாக்கப்படவில்லை. கோடிக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான இயற்கை நிகழ்வுகளால் இப்புவி உருவாக்கப்பட்டுள்ளது. வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகள் வரலாறு உடைய மனிதகுலத்தின் 300 ஆண்டுகளுக்கு முன்னதான தொழிற்பெருக்கமும், மக்கள்தொகைப்பெருக்கமும், ஆதிக்கவெறியும் புவியின் இருப்பையும் வாழ்வதற்கான சூழலியல் சமநிலையையும் குலைக்க ஆரம்பித்துள்ளன. புவியில் இருக்கும் எந்தவொரு மூலகமும், புவியில் நடக்கும் எந்தவொரு செயலும் தனித்து இல்லை. ஒன்றுக்கொன்று செயலால் பிண்ணிப்பினைந்தவை. அப்துல்ரகுமான் ஒரு கவிதையில் சொல்வார்-சிறு பூவை அசைத்தால் ஒரு நட்சந்திரம் உதிர்ந்து போகும்; தெய்வமே- இனி பூக்களை எப்படித் தொடுவது? என்று. இங்கே எல்லா நிகழ்வுகளும்  தொடர்புடையன. ஒன்றின் சமநிலைக் குறைவு இன்னொன்றைப் பாதிக்கும்.
நிலத்தை இயற்கையாக அமைந்த நிலவியல் தன்மைகளைப் பொறுத்து ஐந்து திணைகளாகப் பகுத்து இலக்கணம் சொன்ன ஒரே நாகரீகம் அநேகமாக தமிழர் நாகரீகமாகத்தான் இருக்க வேண்டும்.இயற்கையோடு இயைந்த தமிழர் வாழ்வின் அத்தனைச் சுவைகளையும் நம் பழந்தமிழ் இலக்கியங்கள் பாடுகின்றன. சமீபத்திய சூழலியல் சீர்கேடுகளையும் அதனால் உயிர்க்கோளத்தில் நிகழும் சூழலியல் சமனிலை திரிபையும் காரணகாரியங்களையும் விளக்கும் பதிவுகள் தமிழில் தற்போது அங்கொன்றும் இங்கொன்றும் வர ஆரம்பித்து உள்ளன. உலகம் முழுமையும் சூழலியல் அறிவானது முன்னெப்போதையும் விட இப்போது அதிகம் தேவைப்படுகிறது. இந்தத் தருணத்தை தவறவிட்டால், இதே ரீதியில் சூழலியல் சீர்கேடுகளைத் தொடர்ந்தால் புவியில் மனிதகுல இருப்பே கேள்விக்குறியாகிவிடும். உயிரினங்களின் தோற்றம், வளர்சிதை மாற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகிய அனைத்தையும் புவியின் சூழலியல் அமைப்புகளுடனான அவற்றின் தொடர்புகளுடன் அறிந்து கொள்வது மிக அவசியம். நாம் தற்போது அனைத்து வசதிகளுடன் வாழ்வது முக்கியம் என்றாலும், மனித குலம் புவியில் நீடித்திருப்பது அதி முக்கியமானது. தொடர்ந்து உரையாடுவோம்.
https://issuu.com/kurimagazine/docs/kuri_22_inner

அவர்கள் பயப்படுகிறார்கள்

அவர்கள் ஒரு கவிதைக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு ஓவியத்துக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு இசைப்பாடலுக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு திரைக்காட்சிக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு சிறுகதையின் ஒற்றைப்பத்திக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு கேலிச்சித்திரத்துக்குப் பயப்படுகிறார்கள்;
அவர்கள் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளிக்கு பயப்படுகிறார்கள்;
அவர்கள் மனிதர்கள் நடந்தால் பயப்படுகிறார்கள்;
அவர்கள் மனிதர்கள் கைகோர்த்து நின்றால் பயபப்டுகிறார்கள்;
அவர்கள் ஒரு குழந்தையின் குரலுக்கும் பயப்படுகிறார்கள்;

அவர்கள் பயப்படுகிறார்கள்

வியாழன், 27 ஏப்ரல், 2017

சினிமா ஒரு மிகப்பெரும் ராட்சச மிருகம்



சினிமாவை காட்சி இலக்கியம் என்பதையோ அது பல கலைகளின் கூடாரம் என்பதையோ நானும் மறுக்கவில்லை. பலகாலமாக நம்பிக்கொண்டும் இருக்கிறேன். இங்கே நான் சொல்வது அது அல்ல. சாரு ஒழிவு திவசத்தே களி பற்றி எழுதும்போது அது ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இலக்கிய தொடர்பு இருப்பதாலேயே அது நல்ல படமாகிறது என்றார். மிஷ்கின் பாலு மஹேந்திரா இவர்கள் தன் உதவியாளர்களை அவர்களின் வாசிப்பு இலக்கிய அறிவு சார்ந்தே எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இங்கே இலக்கியம் என்று சொல்லப்படுகிற எழுதப்பட்ட வகைகளுக்கு அப்படி ஒரு புனித அளவீடு தேவை இல்லை. அற்புதமான பல படங்கள் உள்ளன. இலக்கியப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்படாத பல படங்கள் உள்ளன. சினிமா எடுப்பவர்கள் மட்டுமல்ல. எல்லா மனிதர்களுக்கும் இலக்கிய பரிச்சயம் அவசியம் தேவை. ஆனால் படத்தின் தகுதியை அதன் இலக்கியத்தொடர்போடு முடிச்சு போடுவது சரியல்ல. இங்கே பல இலக்கியவாதிகள் பிற கலை அனுபவங்களோடு , அரசியல் போக்கோடு தொடர்பே இல்லாமல் இருக்கின்றனர். இலக்கீயவாதிகளுக்கு பொறுப்பு ஒரு பரந்த தளத்தில் உள்ளது. அதே பொறுப்பு சினிமாக்காரர்களுக்கும் உண்டு. நான் சொல்ல வருவது ஒரு நுண்ணிய வேறுபாடு. இலக்கியத்தின் தேவை குறித்தல்ல. அதை மட்டுமே ஒரு அளவீட்டுத்தகுதியாக வைக்கக் கூடாது.

மாற்று சினிமா லோ பட்ஜெட் சினிமா டெக்னிகலாக மட்டமாக இருக்கும் என்றும் இலக்கியத்தொடர்பு உள்ள ஒழிவு திவசத்தே களி இலக்கியத்தொடர்பாலேயே தொழில்நுட்ப பூர்வமாகவும் கலாபூர்வமாகவும் சிறந்த படமாகிறது என்கிறார் சாரு. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சினிமாவில் நுழைந்து தோற்றுப்போன அல்லது தடம் பதிக்காத (சினிமாவில்) இலக்கியப்புலிகள் ஏராளம். ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்ரா இப்படி. எல்லாரும் எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகிவிட முடியாது. பாபாவுக்கும் சண்டைக்கோழிக்கும் வசனம் எழுத எஸ்ரா எதுக்கு? எஸ் ரா எழுதியதால் அந்தப் படங்கள் கலையுச்சம் பெற்று விட்டனவா? மதுபானக் கடை என்ற எளிமையான படம் கொடுக்கும் அனுபவம் கூட இவர்களால் தர முடிவதில்லை

சினிமா ஒரு மிகப்ப்பெரும் ராட்சச மிருகம். அதனோடு சவாரி செய்ய இலக்கியம் மட்டுமே போதுமானதல்ல.

குளிர்காலப் பதிவு

2002 நவம்பர் மாத இறுதியில் பரத் மற்றும் கார்த்திக் அண்ணாவுடன் ஆய்வுப்பணி நிமித்தமாக பல வடமாநிலங்களுக்கும் போகும் வாய்ப்பு கிடைத்தது. இமாச்சல் பிரதேஷ் பலம்பூரில் இருந்து கடுமையான பனிப்பொழிவு மிக்க ரொதாங்பாஸ் வழியாக திரும்பினோம். பெரும்பாலான இடங்களில் கடும் பனி. இருந்தாலும் சமாளித்தோம். பலம்பூர் போகும் போது எதோ ஒரு இடத்தில் இரவு பேருந்து நின்று விட உள்ளூர் மக்களுடன் குளிர் காய்ந்தெல்லாம் பயணித்தோம். அப்போது குளிர் பெரிதாக வாட்டிவிடவில்லை
2003 இறுதியில் வால்பாறையில் வேலைக்குச் சேர்ந்தேன். சராசரியாக காலை நேர வெப்பநிலை 3-5 டிகிரிக்குள் இருக்கும் இடம் அது. ஆய்வகம் இன்னும் தாழ இருந்தது. காலை எட்டரை மணிக்கெல்லாம் உள்ளே இருக்க வேண்டும். ஆறு ஐம்பதுக்கு நீரார் அணைப் பேருந்து வரும். அப்போது கரும்பாலம் அருகில் தங்கியிருந்தோம். பாலாதான் முதலில் எழுந்து கிணற்றில் நீரிறைத்து சுட வைத்து குளித்து விட்டு பிறகு   மற்றவர்களை எழுப்புவார். ஆனால் நானும் சவுமிக்கும் பெரும்பாலும் பேருந்தை பிடிக்க முடியாத படிக்கு தாமதமாகத்தான் சேருவோம். அடுத்த வண்டி ஈட்டியார் வரைதான் போகும். அதைத்தான் பெரும்பாலான நாட்கள் பிடிப்போம். ஈட்டியார் பேருந்து நிறுத்த மலை முகட்டின் மேலிருக்கும் தேநீர்க்கடையில் கடுந்தேநீர் அருந்திவிட்டு இருவரும் நடப்போம். குறைந்தது நான்கு கிலோமீட்டர்கள். அப்போது குளிர் பெரிதாக தெரியவில்லை.
நெருஞ்சி இலக்கிய முற்றம் அப்போது கோவை சிபி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாதக்கூட்டம் போடுவார்கள். அங்கேதான் பீ முதலான சில முக்கிய ஆவணப்படங்களைப் பார்க்க வாய்த்தது. ஒரு நாளில் நான் கூட ஒரு கவிதை வாசித்தேன். அந்தக் கூட்டத்தை பெரும்பாலும் தவற விட்டதில்லை. ஆனால் முடித்து விட்டு திரும்பும் போது உக்கடத்தில் இருந்து கடைசிப்பேருந்து தான் இருக்கும். போய்சேர இரவு பனிரெண்டுக்கு சமீபம் ஆகும். அந்தக் குளிரும் பெரிதாக தெரியவில்லை.
ஊருக்குப் போய் திரும்பும் வாரங்களில் ஊமாண்டி முடக்கு அருகே காலை நாலுமணிக்கு தேநீர் குடிக்க பேருந்தை நிறுத்துவார்கள். குளிரையும் சேர்த்தே அனுபவித்து அருந்திய நேரங்கள் அவை.

நேற்று மீண்டெழும் சென்னைக்கான பொங்கல் விழாவினைப் (கண்ணம்மா பேட்டை) பார்த்து விட்டு தோழர் கிருஷ்ணராஜ் அவர்களுடம் திரும்பும் போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. கோட்டூர்புரம் அண்ணன் துரைமுருகன் வீட்டுக்கு அருகே உள்ள தேநீர்கடையில் கடைசித் தேநீரை அருந்தி பேச்க்கொண்டிருந்து விட்டு கிளம்பும் போது பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது. கடுமையான குளிர். கர்சீப் ஹெல்மெட் எல்லாம் தாண்டி குளிர் ஊடுருவ வண்டியை உருட்ட வேண்டியதாயிற்று. உண்மையில் சமாளிக்க முடியாத அளவு குளிர்.ஒருவேளை எல் நினோ / லா நினா காரணமா? அல்லது வயதாகிவிட்டதா................?

சென்னை வெள்ளம் டிசம்பர் 2015 பகுதி 1

டிசம்பர் 2ம் தேதி தெருவை விட்டுக்கூட வெளியே வரமுடியாத நிலை. சற்றேரக்குறைய அனைத்து விஞ்ஞான சாதனங்களும் உபயோகமில்லாமல் இருந்தன. முதல் நாளில் சேமித்திருந்த நீரனைத்தும் தீர்ந்து போனது. அந்த நாட்களில் எல்லாம் செவிவழிச் செய்திகளே தொடர்பு சாதனம். அப்படி ஒரு செய்தியாக சில தெருக்கள் தள்ளி ஒரு அடிபம்பு இருப்பதாகவும் தண்ணீர் வருவதாகவும் தகவல். எல்லோரும் அங்கே போய் வெகு ஒழுக்கமான வரிசையில் நின்று யாருடனும் எந்த சண்டையும் இல்லாமல் தண்ணீர் பிடித்து வந்தோம். வீட்டில் நல்லெண்ணெய் அகல் விளக்கு வெளிச்சத்தில் சமையலும் சாப்பாடும். மொத்தத்தில் உயிர் வாழ்வதற்கான அடிப்படைக் கடமைகள் மட்டுமே அப்போது  மனதை ஆக்ரமித்திருந்தது. ஒரு உயிரின் கடமை அதுதானே. மனிதன் இன்னமும் அடிப்படையில் உயிர் பிழைத்திருக்கப் போராடும் உணர்வுள்ள ஒரு விலங்குதான் என்பது உறுதியானது. அந்த நாட்களில் கேளிப்பட்ட எந்த தகவல்களும் ஆரோக்யமானதாக இல்லை. வீட்டில் இருப்பதே உத்தமம் என்றானது அடுத்த தெருவுக்கு கூட  போக முடியாத அளவு அனைத்து புறங்களிலும் தண்ணீர். அந்த ஏரி உடைந்தது இந்த ஏரி உடைந்தது என்று வதந்திகள் வேறு. சில தெருக்கள் தள்ளித்தான் தங்கையின் வீடு. இரண்டு நாட்களாக எந்த தொடர்பும் இல்லை. எந்த தெருக்களில் எவ்வளவு தண்ணீர் என்பதும் தெரியவில்லை. என்றாலும் வெள்ளத்தின் இரண்டாம் நாள் தங்கையின் வீட்டுக்குப் போய்ப் பார்த்து விடுவது என்று கிளம்பினேன். 1977 வருட அமராவதி நதியின் வெள்ளத்தில் சிக்கித்தவித்த அம்மாவின் கதைகள் எங்களது குடும்பத்தின் எல்லா கதை நேரங்களிலும் இருக்கும். அதெல்லாம் மனதில் ஓட ஒவ்வொரு தெருவாக கிழக்கு நோஒக்கி நடந்தேன் (கிழக்கே தான் பள்ளிக்கரணை சதுப்பு நிலம். அங்கே வழிந்த நீர்தான் இங்கே வெள்ளம்). முதல் தெருவில் முழங்கால் அளவு…. இரண்டாம் தெருவில் தொடை அளவு…. அதற்குப் பின் இடுப்பளவு…. தங்கை இருக்கும் தெருவுக்கு போகும் போது நெஞ்சளவு வந்து விட்டது நீச்சலடிக்கவும் ஆயத்தாகத்தான் போனேன். ஆனால் தேவை ஏற்பட வில்லை. ஒவ்வொரு தெருவிலும் மாடியில் மட்டுமே ஆட்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தனியே நடந்தேன். அனைவரும் கேட்ட கேள்வி எங்கேயிருந்து வரீங்க... சிலர் கேட்டார்கள் மருந்து கடை திறந்திருக்கா... காய்கறி எங்கே கிடைக்குது...பால் கிடைக்குதா... போட் ஏதும் வருதா.......கடைகள் இருக்கா..... பதில்களும் புன்னகையுமாக ஒரு வழியாக தங்கையின் வீட்டுக்குப் போனேன். மாடியில் இருந்தார்கள். போட்டில் பாலும் சாப்பாடும் வந்ததாம். அடுக்ககத்தின் அனைத்து குழந்தைகளும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தார்கள்; வெள்ளத்தை முழுமையாக அனுபவித்தபடி.
. ஜெயப்பிரகாஷ்வேல்

மடிப்பாக்கம், சென்னை