திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கொசஸ்தலை ஆறு-செத்த நாயின் பிணம்

ஞாயிறண்டு காஞ்சிபுரம்-நெமிலிக்கு ஒரு நண்பர் வீட்டுக்கும் அவரின் வேளாண்பண்ணைக்கும் நண்பர் Krishnaraj Mannangattiஉடன் போயிருந்தேன். அங்கே விருந்தெல்லாம் முடித்து விட்டு திரும்பும் வழி கேட்ட போது நண்பர் தக்கோலம் -திருவாலங்காடு வழியா திரும்புங்க; கொஞ்சம் தூரம் கம்மியாகும் என்றார். இரண்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்கள் ஆதலால் அப்படியே கிளம்பினோம். தக்கோலம் ராஷ்டிரகூடர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே நிகழ்ந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த போர் நடைபெற்ற இடம். தக்கோலம்-திருவாலங்காடு சாலையின் ஓரமாக ஒரு மிகப்பெரும் பரந்த காலி நிலப்பரப்பு V வடிவில் இருந்தது. அங்கேதான் சண்டை நடந்திருக்க வேண்டும். கூழாங்கற்கள் நிறைந்த வனாந்திர பரப்பு அது. இப்போது தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் முகாம்கள் அங்கே உள்ளன. திருவாலங்காடு காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற இடம் என்கிறார்கள். போக தொழுதாவூர் என்ற ஊரில் இருந்துதான் தலையால் நடந்து சென்றார் என்று சொல்லி ஒரு பழைய கோவிலை புதிய பக்திக்கு முன்னிறுத்துகிறார்கள். அதையும் பார்த்தோம். திருவாலங்காட்டில் ஒரு காளி கோயில் உள்ளது. அங்கே கூட்டம் அதிகம். அங்கிருக்கும் சிவன் கோயிலையே நாங்கள் பார்க்கப்போனது. அங்கேகூட்டமே இல்லை. முன்னதாக கங்கை கொண்ட சோழபுரத்தில் மட்டும் ஒரு முறை தனியாக சிவலிங்கத்தின் முன் நிற்கும் வாய்ப்பு அமைந்தது.இந்த முறை தோழர் ஒருவருடன். இந்தக் கோயிலின் வெளி மண்டபத்தின் ஒரு தூணில் மிக வித்யாசமான கலவி நுணுக்க சிற்பம் ஒன்று உள்ளது. அங்கே மணி 4 ஆகிவிட்டது. ஐந்து மணிக்குள்ளாக ஸ்ரீபெரும்புதூரில் ஒருவரைச் சந்திக்க வேண்டும். சிறந்த வழி எது என ஒரு அன்பரிடம் கேட்டோம். பேரம்பாக்கம் வழியாக போங்கள் என்றார். இந்தப்பயணுத்துக்குள்ளாக கொசஸ்தலை ஆற்றை மூன்று முறை கடந்து விட்டோம். அப்படி சுற்றிச் சுற்றி ஓடுகிறது ஆறு. திருவாலங்காடு-பேரம்பக்கம்-ஸ்ரீபெரும்புதூர் வழியெங்கும் காய்ந்த நிலங்கள். பெரும்பாலும் வீட்டு மனைகளாகி விட்டன. செம்மறி ஆடுகளையும் மாடுகளை மேய்ப்பவர்கள் தான் இருந்தார்கள். சுமார் 4-5 ஆண்டுகள் முன்பு வரை நெல் விளைந்த பூமியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சமீப காலத்திலே தான் வீட்டு மனையாகி இருக்க வேண்டும். எல்லா காலி வயல்களின் நடுவிலும் கண்ணாறு எனப்படும் சிறு கால்வாய்கள் ஓடின. வறண்டு போய்த்தான் இருந்தன. அந்தக் கால்வாய்களே அவை விவசாய நிலங்கள் என்பதற்கு சாட்சியம். விளை நிலங்களில் வீடு கட்டி விட்டால் கூடப் பரவாயில்லை. காசை காபந்து பண்ண அல்லது பெருக்க வீணில் வாங்கி சும்மா பொடுவது வளனை பதுக்கல் தான்.
அன்று பார்த்த அத்தனை வயல்களும் காய்ந்து போனதற்கு ஆறுகள் நீரின்றிப்போனது; வேளாண் வேலைகளுகு ஆட்கள் தட்டுப்பாடு; பொருட்களுக்கு கிடைக்கும் குறைந்த விலை இப்படி பலகாரணங்கள்.எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வருத்தமாகத்தான் இருக்கிறது. கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தக்கோலத்தில் இருக்கும் சிவன் கோயிலுக்கும் அக்கரையிலிருக்கும் ஒரு சிவன் கோயிலுக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக ஊரார் சொல்கின்றனர். அப்படி பாய்ந்த ஒரு நதி, இன்று காய்ந்து முழுவதுமாக மணல்களும் சுரண்டப்பட்டு ஒரு செத்த நாயின் காய்ந்த பிணம் போல கிடக்கிறது.
Top of Form

Like
Love



புதன், 17 ஆகஸ்ட், 2016

சினிமாவும் இலக்கியமும்


நிறைய கலை வடிவங்கள் இருக்கின்றன. அவற்றோடு பொதுவாக இலக்கியத்தை ஒப்பிடுவதோ அந்தக் கலைகளோடு இலக்கியம் இணைய வேண்டும் என்றோ பேசுவதில்லை. ஆனால் சினிமாவில் இலக்கியம் வேண்டும் என்றும் சினிமாக்காரர்கள் இலக்கியவாதிகளை பயண்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சினிமாக்காரர்கள் இலக்கியப்புலிகளாக இருக்க வேண்டும் என்றும் சகஜமாக பேசப்படுகிறது. மற்ற ஊர்களில் நாடுகளில் இது போல உண்டா? தமிழ்நாட்டில் தான் இப்படியா? தடம் இதழிலும் சாரு இதைத்தான் எழுதுகிறார். சினிமா ஒழுங்கா எடுக்கல என்று சொல்லலாம். இலக்கியம் இல்லாததால் சினிமா ஒழுங்கா இல்லை என்றா சொல்வது? சினிமாவுக்கு இலக்கியம் தேவை இல்லை. சினிமாக்காரன் இலக்கியம் படித்திருந்தால் நல்லது. மிஷ்கின் தன் உதவியாளர்களை புத்தகம் படிக்க்ச் சொல்வார் என்று சொல்கிறார்கள். அப்படிக்கட்டாயம் ஏதும் இல்லை. சினிமா என்ற கலையை வாழ்வைப்புரிந்து கொண்ட யாரும் சரியாகச் செய்து விட முடியும். தமிழ் சினிமா உருப்படாமல் இருப்பதற்கு நிறைய காரணங்களிருக்கலாம். கண்டிப்பாக இலக்கியம் அல்ல. இங்கே இலக்கியமே ததிங்கினத்தத்தம் போடுகிறது. நாம் வாழ்கிற சமூகச் சூழல் அப்படி. அதைப் பற்றியெல்லாம் இங்குள்ள இலக்கியவாதிகள் மருந்துக்கும் பேச மாட்டார்கள். சினிமாவில் இலக்கியம் இல்லை; பேஸ்ட்டில் உப்பு இல்லை என்று பேசுபவர்கள் இங்கே நடக்கிற ஆயிரமாயிரம் பிரச்சனைகள் குறித்து மூச்சு கூட விடாமல் எழுதிக்கொண்டிருப்பர். சிலர் இருக்கிறார்கள். செலக்டிவாக அரசியல் பேசுவார்கள். கொண்டாடக்கூடிய முழுமையான ஒரே ஒரு இலக்கியவாதி கூட இல்லாத மாநிலத்தில் சினிமாவில் இலக்கியம் இல்லாவிட்டால் என்ன கெடுவிடப்போகிறது?

சினிமாவை காட்சி இலக்கியம் என்பதையோ அது பல கலைகளின் கூடாரம் என்பதையோ நானும் மறுக்கவில்லை. பலகாலமாக நம்பிக்கொண்டும் இருக்கிறேன். இங்கே நான் சொல்வது அது அல்ல. சாரு ஒழிவு திவசத்தே களி பற்றி எழுதும்போது அது ஒரு சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. இலக்கிய தொடர்பு இருப்பதாலேயே அது நல்ல படமாகிறது என்றார். மிஷ்கின் பாலு மஹேந்திரா இவர்கள் தன் உதவியாளர்களை அவர்களின் வாசிப்பு இலக்கிய அறிவு சார்ந்தே எடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்த வரை இங்கே இலக்கியம் என்று சொல்லப்படுகிற எழுதப்பட்ட வகைகளுக்கு அப்படி ஒரு புனித அளவீடு தேவை இல்லை. அற்புதமான பல படங்கள் உள்ளன. இலக்கியப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்படாத பல படங்கள் உள்ளன. சினிமா எடுப்பவர்கள் மட்டுமல்ல. எல்லா மனிதர்களுக்கும் இலக்கிய பரிச்சயம் அவசியம் தேவை. ஆனால் படத்தின் தகுதியை அதன் இலக்கியத்தொடர்போடு முடிச்சு போடுவது சரியல்ல. இங்கே பல இலக்கியவாதிகள் பிற கலை அனுபவங்களோடு , அரசியல் போக்கோடு தொடர்பே இல்லாமல் இருக்கின்றனர். இலக்கீயவாதிகளுக்கு பொறுப்பு ஒரு பரந்த தளத்தில் உள்ளது. அதே பொறுப்பு சினிமாக்காரர்களுக்கும் உண்டு. நான் சொல்ல வருவது ஒரு நுண்ணிய வேறுபாடு. இலக்கியத்தின் தேவை குறித்தல்ல. அதை மட்டுமே ஒரு அளவீட்டுத்தகுதியாக வைக்கக் கூடாது. மாற்று சினிமா லோ பட்ஜெட் சினிமா டெக்னிகலாக மட்டமாக இருக்கும் என்றும் இலக்கியத்தொடர்பு உள்ள ஒழிவு திவசத்தே களி இலக்கியத்தொடர்பாலேயே தொழில்நுட்ப பூர்வமாகவும் கலாபூர்வமாகவும் சிறந்த படமாகிறது என்கிறார் சாரு. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. சினிமாவில் நுழைந்து தோற்றுப்போன அல்லது தடம் பதிக்காத (சினிமாவில்) இலக்கியப்புலிகள் ஏராளம். ஜெயகாந்தன், ஜெயமோகன், எஸ்ரா இப்படி. எல்லாரும் எம்.டி. வாசுதேவன் நாயர் ஆகிவிட முடியாது. பாபாவுக்கும் சண்டைக்கோழிக்கும் வசனம் எழுத எஸ்ரா எதுக்கு? எஸ் ரா எழுதியதால் அந்தப் படங்கள் கலையுச்சம் பெற்று விட்டனவா? மதுபானக் கடை என்ற எளிமையான படம் கொடுக்கும் அனுபவம் கூட இவர்களால் தர முடிவதில்லை. சினிமா ஒரு மிகப்ப்பெரும் ராட்சச மிருகம். அதனோடு சவாரி செய்ய இலக்கியம் மட்டுமே போதுமானதல்ல.

கபாலி - ஜோக்கர்


கபாலியை மட்டம் என்று சொல்வதிலும் ஜோக்கரை குப்பை என்று சொல்வதிலும் இனம் காணக்கூடிய வெறுப்பு தட்டுப்படுகிறது. சினிமாவை ஓடவைக்கும் பெரும்பாலான சராசரி சினிமா ரசிகர்கள் இண்டர்நெட் விமர்சனங்களை படிக்காதவ்ர்கள். இண்டர்னெட் படிப்பவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டரிலே படம் பார்ப்பவர்கள் தான். தியேட்டருக்கு போவதற்கென்று தனி கூட்டம் உள்ளது. இணையப்புலிகள் நுனிப்புல் கூட மேயாத பல படங்கள் தியேட்டர்களில் சக்கை போடு போடுகின்றன. பொது ஜனத்துக்கென்று ஒரு ரசனையும் தெரிவும் உள்ளது. அதை அறிவுஜீவிகளோ அப்படி சொல்லிக்கொள்பவர்களோ அல்லது நினைத்துக்கொள்பவர்களோ வடிவமைத்து விட முடியாது. ஜோல்ணாப் பை இலக்கியவாதிகளையோ மொண்னை சினிமாப்பைத்தியங்களையோ அமெச்சூர் அறிவுஜீவிகளையோ மடை மாற்றுவதைப் போல பொதுமக்களை திசை திருப்புவது அவ்வளவு எளிது அல்ல. அவர்களின் ரசனையை மட்டம் என்று சொல்லி யாரும் தங்களின் கொண்டையை மறைத்து விட முடியாது. நான் ஜோக்கர் பார்க்கவில்லை. கபாலி பார்த்து விட்டேன். கபாலி கழுவி ஊத்தும் அளவு மட்டமான படம் அல்ல. அப்படி சொல்வதற்கு நிறைய தடித்தனம் வேண்டும்

சிறீலங்காவின் தேசியத் தற்கொலை

பிரமிள் எழுதிய “சிறீலங்காவின் தேசியத் தற்கொலை” என்ற சிறிய நூலைப்படித்திருக்கிறேன். அதில் சிங்களர்களின் தமிழர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு வரலாற்று ரீதியான காரணங்களை தம் பார்வையில் வைக்கிறார். சோழ மன்னர்களின் மேலாதிக்கமே சிங்களர்கள் தமிழர்கள் மீது பயமும் வெறுப்பும் கொள்ள வைத்தது என்கிறார். தமிழர்கள் பின்பற்றிய இந்து மதமும் சோழர்கள் காலந்தொட்டு நிறுவப்பட்ட இந்துக்கோயில்களும் அவர்கள் வெறுப்பு நிலைக்க காரணமாகி விட்டது என்றும் சொல்கிறார். போதாக்குறைக்கு பிரபாகரனின் இயக்கப் பெயர் கரிகாலன்.
இன்னமும் ஒரு செய்தி சொல்கிறார். ஒரு ஆரம்ப கால சிங்கள அரசன் பெண் கேட்டு பாண்டிய நாட்டு அரசனுக்கு தூதனிப்பி இருக்கிறார். தமிழகத்தில் அவருக்கு பெண் கொடுக்கப்படவில்லை. விடாமுயற்சியோடு கேரளத்தில் இருந்து அரசகுடும்ப பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறார். அந்தப் பெண்ணோடு நிறைய கேரளத்தவர் சிறீலங்கா போனராம். சிங்களப் பெண்களின் பாரம்பரிய உடையும் சில நாட்டுப்புற கலை வடிவங்களும் கேரள பண்பாட்டை ஒத்துள்ளன என்றும் சொல்கிறார். அவர் சொன்னது போக சமீப காலத்திலும் இந்த வரலாற்றுத் தொடர்பு அறுபடவில்லை என்றெ நாம் கண்டிருக்கிறோம்.
தடம் இதழில் ஜெயமோகன் தமிழ் மக்கள் இந்துக்கள், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்கு மற்றும் சிறீலங்காவில் நடந்தது இனப்படுகொலை அல்ல போன்றவற்றை வரலாற்றுரீதியான தர்க்க நியாயங்களோடு நிறுவுகிறார்.
Disclaimer: மேலே சொன்ன இரண்டும் தனித்தனி செய்திகள். இரண்டுக்கும் துளியும் தொடர்பில்லை.