செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஜம்புவின் மரணம்


இன்று உண்மையில் மிகவும் வருத்தமான நாள். அப்பாவின் நாய் ஜம்பு இறந்து விட்டது. விஷம் கொடுக்கப்பட்டு கொன்று விட்டதாக சொல்கிறார்கள். ஊரில் அப்பாவுக்கு இருந்த ஒரே துணைதான் இந்த ஜம்பு. கொஞ்ச மாதங்கள் முன்பு அப்பா இந்த நாயைக் குட்டியாக எடுத்து வரும் போது வீட்டில் மிகப்பெரும் எதிர்ப்பு. நானும் அம்மாவும் பழைய நாயான ராமுவின் நிலையைக் கருத்தில் கொண்டு வேண்டவே வேண்டாம் என்று சொன்னோம். இதற்கு முன்பு நான் நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும் போது (சுமார் இருபது வருடங்கள் முன்பு)  வீட்டில் வளர்த்த நாய்தான் ராமு. ராமு மிகவும் நாசுக்கான நாயாகத்தான் இருந்தது. பின் போகப்போக மற்ற தெரு நாய்களைப்போல சகலமும் செய்தது. ஒரு நாளில் ராமுவுக்கு வெறி பிடித்து விட்டது. சிலரைக் கடித்தும் விட்டது. நாயைக் கொல்வதில் நிபுணத்துவம் பெற்ற செல்வம் சித்தப்பாவுக்கு காசு கொடுத்து கொல்லச் சொல்லி விட்டோம். உலக்கையில் அடிவாங்கிக் கொண்டு நானும் தங்கையும் வீட்டுக்குள் இருந்த போது வாசல் படியில் வந்து ரத்தம் கக்கிக் கதறிய ராமுவைக் கம்பியைக் கட்டி இழுத்துக் கொண்டு போனார்கள். எங்களின் பசு மாட்டை அப்பா விற்று விட்ட சில நாட்களில் ஒரு கட்டை வண்டியை இழுக்க அது பழக்கப்படுத்தப்படும் கொடுமையான காட்சியைப் பார்த்து விட்டு நானும் தங்கையும் கதறியதை விடவும் ராமுவுக்காக அதிகம் கதறினோம். ராமு வீட்டு வாசல் படியில் ரத்தம் கக்கியபடி பார்த்த பார்வை இன்றும் கண்ணில் நீரை வரவழைக்கும் படியாக நிலைத்து விட்டது. அதன் பிறகு நாய் பூனை எதுவும் வீட்டில் வளர்க்கவில்லை. இப்போது ஜம்பு தான்.
ஜம்புவுக்கு அப்பாவோ அம்மாவோ பெயர் வைத்திருக்கக் கூடும். அதற்கு அர்த்தம் இருக்கிறது. நான் இன்னும் சின்னப் பிள்ளையாக இருந்த நாட்களில் பள்ளி செல்லாத நாட்களில் மங்கலான நினைவுகளோடு வீட்டில் ஒரு ஜம்பு இருந்தது. அப்பாயி வளர்த்த நாய் அது. ஒரு முறை தொட்டியம் வெங்கடேசா தியேட்டரில் எதோ ஒரு படம் பார்க்க அப்பாயி உடன் பஸ்ஸில் போனோம். ஜம்பு பஸ்ஸை பின் தொடார்ந்து தியேட்டருக்கு வந்து விட்டது. படம் பார்த்து மிடிக்கும் வரை தியேட்டர் வாசலில் இருந்தது. நாங்கள் மறூபடியும் லதா பஸ்ஸில் ஏறி ஊர் வந்தோம். எங்களுக்கு முன்னதாக வீடு வந்து விட்டது ஜம்பு. மிகவும் அறிவான நாய் என்று பெயர் பெற்றது. மிகவும் வயதாகி தோலெல்லாம் சுருங்கிப் போன ஜம்பு நினைவில் இருக்கிறது. சாகும் தருவாயில் வீட்டில் சாகாமல் எங்கேயோ ஓடி மறைந்து விட்டதாக அம்மா இன்னமும் சொல்வார்கள்.

இந்த ஜம்புவும் மிகவும் அறிவான நாய்தான். எந்த சந்தோசங்களையும் அனுபவிக்க விரும்பாத வறட்டுத்தனமான விவசாயியான என் அப்பவின் ஓட்டை டி வி எஸ் 50 ல் முன்புறம் ஒரு குழந்தையைப் போல உட்கார்ந்து போகும். நான் ஊருக்கு போயிருக்கிற நாட்களில் என்னிடம் மிகுந்த பிரியத்துடன் வாலை ஆட்டும். எனக்கென்னவோ என் அப்பா என்னிடம் நலம் விசாரிப்பதைப் போல இருக்கும். ஜம்புவுக்கு அசைவம் இல்லாமல் உணவு இறங்காதாம். முட்டை கூட சாப்பிடாத (அதை வாங்கி சமைத்து சாப்பிடுகிற நேரத்தில் வயலில் எதாவது வேலை பார்க்கலாம் என்கிற அளவுக்கு பிஸியானவர்) அப்பா ஜம்புவுக்கு அடிக்கடி முட்டையை வறுத்துக் கொடுத்து வளர்த்திருக்கிறார். நேற்று கூட கருவாடு வாங்கி வந்திருக்கிறார். ஜம்பு என்ற பெயர் என் தங்கை மகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவளுக்கும் ஜம்புவைப் பிடிக்கும். அவள் ஊரில் இருக்கிற இந்த நாளில் ஜம்பு இறந்து விடவே மிகவும் அழுதிருக்கிறாள். என் அப்பவும் அழுததாகச் சொன்னார்கள். சித்தி வீரம்மாவைத்தவிர யாருடைய சாவிலும் அழாத எனக்கு ஜம்புவின் இறப்பு கண்ணீரை வரவழைத்து விட்டது. மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. இரவில் தண்ணீர் பாய்ச்சப் போகும் நேரங்களில் ஜம்பு அப்பாவுடன் போகும். ஜம்பு குட்டியாக இருந்த போது பல முறை தெரு நாய்களால் குதறப்பட்டு இருக்கிறது. அப்பா அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போய் காப்பாற்றி வைத்தார். சங்கிலி மாமா ஜம்புவைக் குட்டியாக பார்த்த போது கேட்டார். கொடுத்திருக்கலாம். அங்கே இருந்தாலாவது உயிரோடு இருந்திருக்குமோ என்னவோ.
யார் யாரோ என்னென்னவோ கஷ்டப்படுகிறார்கள். மக்கள் கொடும் துயர்களையெல்லாம் அனுபவிக்கிறார்கள். கொல்லப் படுகிறார்கள். வதைக்கப் படுகிறார்கள். இப்படியான சூழலில் ஒரு நாயின் மரணத்துக்கு இரங்கல் குறிப்பு எழுதுவதா என்று எனக்கு கேள்வி இல்லை. ஜம்பு என் அப்பாவின் நண்பன். ஜம்பு எனக்கு உறவு. ஜம்பு எங்கள் வீட்டை நம்பி வந்தவன். ஜம்பு எங்களிடம் பிரியம் காட்டியவன். ஜம்புவின் உடலை இன்று எரித்து விட்டார்கள். ஜம்புவின் புகைப்படம் ஒன்று கூட இல்லை. ஜம்பு-என்னென்றும் என் நினைவில் நிற்பான்.

கருத்துகள் இல்லை: