ஞாயிறு, 15 மே, 2011

நடை

இன்று காலை 7.30 மணியளவில் செல்போனில் இருந்து ஏர்போன் வழியாக பண்பலை வானொலியில் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தேன். இடம் குரு நானக் கல்லூரி பெருந்து நிறுத்தம். M7க்கான காத்திருப்பு நேரத்தில் அறிவிப்பாளர் ரோஜா படத்தில் இருந்து புது வெள்ளைமழை பாடலை அறிவித்து விட்டு பாடல் தொடர்பாக ஒரு செய்தியையும் சொன்னார். முதலில் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனனை நடிக்க்க கேட்டு அவர் மறுத்து விட்டதாக சொன்னார். வெளிச்சத்தம் எதுவும் கேட்காத அந்த நிலையில் எதிரே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு கக்கத்தில் ஒரு பையை வைத்துக் கொண்டிருந்த அன்பர் எதோ கேட்கிறார். நான் காதிலிருந்த போனை கழற்றிவிட்டு என்ன என்று கேட்டென். மேடவாக்கத்துக்கு வழி கேட்டார். நான் நடந்தா போரீங்க என்று கேட்டேன். ஆமாம் என்றார். வழியை சொன்னென். விடுவிடுவென நடக்க ஆரம்பித்து விட்டார். எனது கையில் டிக்கெட் எடுக்கவென தயாராய் பத்து ரூபாய் வைத்து இருந்தேன். அவர் போய்க்கொண்டு இருக்கும் போதே ஓடிப் போய் பணம் கொடுக்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அவரின் நடையில் தெரிந்த தன்னம்பிக்கையில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். நடந்து போகுபவருக்கு இப்பொது தான் முதல் முறையாக வழி சொல்லி இருக்கிறேன். AC பேருந்தில் போகிற அளவுக்கு இப்போது வசதியாக இருக்கும் எனக்கு சென்னையில் ஒருவர் வேலச்செரியில் இருந்து மேடவாக்கத்துக்கு நடந்து செல்வது ஆச்சர்யமாக இருந்தது. அன்றாட கூலி வேலைக்கு பொகுபவராக இருக்க வேண்டும். கிழக்கு கடலோரச் சாலையில் வெள்ளைப் பலகை பேருந்துக்காக இரண்டு மணி நேரமாக காத்துக் கிடந்தவரின் அரசின் மீதான வசைச்சொற் களையும் கேட்டிருந்தேன் முன்பு. ஆனால் ஒருவர் நடந்து பொகிறார் என்பதை ஏற்கவும் முடியவில்லை . ஜீரணிக்கவும் முடியவில்லை. காசில்லாமல் நடந்து போனாரா அல்லது அவருக்கு நடைதான் பிடிக்குமா என்று தெரியாமல் குழம்பியிருக்கிறேன்.

கருத்துகள் இல்லை: