வியாழன், 30 செப்டம்பர், 2010

உண்மையில் புரட்சி என்பது அன்பு எனும் பேருணர்வால் கட்டப்படுவது





உண்மையில் புரட்சி என்பது அன்பு எனும் பேருணர்வால் கட்டப்படுவது - சே குவேரா

தோழர் மதிகண்ணன் முன்பொரு முறை சே குவேராவின் படம் தாங்கிய ஒரு படம் கொடுத்தார். அதில் மேல் கண்ட வாசகம் இருக்கும். அதன் உண்மையான அர்த்தம் தி மோட்டர் சைக்கிள் டயரிஸ் என்ற படம் பார்த்த போதுதான் எனக்கு விளங்கியது.

மிக இளம் வயதில் சே குவேரா தனது மருத்துவப் படிப்பின் இடையில் நண்பர் அல்பர்ட்டொ கிரனடோவுடன் மேற்கொண்ட தென்னமெரிக்க கண்ட பயணங்களின் தொகுப்பு போன்றதொரு படம் அது. அதில் பயணத்தின் இறுதிக்கட்டங்களில் அவர்கள் அமேசான் நதிக்கரையில் இருக்கும் தொழு நோயாளிகளின் முகாமில் கொஞ்ச நாட்கள் இருப்பார்கள். நோயாளிகளின் முகாம் ஆற்றின் மறுகரையிலும் பணியாளர்கள் பகுதி இக்கரையிலுமாக இருக்கும் நிலை. அங்கிருந்து கிளம்ப வேண்டியதற்கு முதல் நாளில் குவேராவுக்கு பிறந்த நாள். அந்த இரவில் இக்கரையில் பணியாளர்களுடன் ஒரளவிற்கு சொகுசானதொரு விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் நடக்கிறது. இடையிலேயே வெளியே வந்து அந்த நள்ளிரவில் அக்கரை போக படகு தேடுகிறார். அக்கரையிலுள்ள நொயுற்றவர்களுடன் அவர் தனது பிறந்த நாளைக் கொண்டாட எண்ணம். படகு கிடைக்காது என தெரிந்ததும் கிரனடோவின் மன்றாடல்களையும் வசைகளையும் மீறி, அமேசான் நதியில் பாய்கிறார் குவேரா. அமேசான் நதியின் வேகமும் ஆழமும் சொல்ல வேண்டியதில்லை. சே குவேராவுக்கு ஆஸ்த்மா என்பதும் விறைக்கும் உறைபனிக் குளிரில் நதியில் நீச்சலடிப்பது என்னவொரு முட்டாள்தனம் என்பது அன்று அந்தக் கரையில் நின்றவர்களுக்கும் இப்பொது நினைக்கும் நமக்கும் தெரியும். அதையும் மீறி சே குவேரா அக்கரை போய் சேர்கிறார். அங்கே ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். எல்லொரையும் அணைத்து அவர்களின் வாழ்த்துக்களை பெறுகிறார். கவனிக்க அவர்கள் தொழு நோயாளிகள். தொழு நோயாளிகள் இருக்கும் ஊருக்கு பெண்கொடுக்கவும் தயங்கும் தைரியசாலிகளான நாம் இதை மிக எளிதாக புரிந்து கொள்ளலாம். ஒரு கருப்பருக்கு சே-வை அணைப்பதில் தயக்கம். சே அவரை இறுகத்தழுவியும் சில வினாடிகள் தயக்கத்தின் பின்னரே பனிக்கிற கண்களுடன் அந்த கருப்பர் ஆரத்தழுவிக்கொள்கிறார். அந்தத் தயக்கமும், பின் அது விலகி அவர் தழுவிக்கொள்வதும், நான் கண்ட சினிமாக் காட்சிகளிலேயே மிகவும் உணர்ச்சிகரமானது. அவரின் தயக்கத்தை உடைத்தது சே-வின் அன்பு எனும் பேருணர்வுதான். சேவின் மற்றெல்லா சாகச, வீர, தத்துவார்த்த உதாரணங்களையும் மீறி அவரை ஒரு மாபெரும் புரட்சியாளராக எனக்குக் காட்டியது இந்த நிகழ்வுதான். இயல்பிலேயே அவருக்கிருந்த அந்த மாபெரும் அன்புதான் அவரை புரட்சியாளராக தூண்டியிருக்கிறது.

இதற்குச்சமமான வேறு இரு நிகழ்வுகளும் நினைவுக்கு வருகின்றன. முதலாவது: யார் என்ன எங்கே என்பது நினைவில்லை. ஒரு செவிலி, அனேகமாக ஐரோப்பியர், தொண்டையில் சீழ் பிடித்த ஒருவருக்கான அறுவை சிகிச்சையின் போது இடையில் மின்சாரம் தடை பட்டதால், மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ள நிலையில் தனது வாயால் குழாய் வைத்து அந்த சீழை உறிஞ்சி எடுத்து நோயாளியின் உயிரைக்காப்பாற்றிய நிகழ்வு. அர்பணிப்பின் உச்ச பட்ச உதாரணமாக இதைச்சொல்லலாம். நிகழ்வு மிகச்சரியாக நினைவில் இல்லை.

மற்றொன்று பிளேக் என்கிற படு கொடூரமாக படு விரைவாக தொற்றிக்கொள்ளக்கூடிய கொள்ளை நோயால் மக்கள் ஊர்களை காலி பண்ணிக் கொன்டிருந்த நாட்களில், எடுத்துப் போடவும் ஆட்களற்றுக் கிடந்த, நோயால் மாண்ட மக்களின் பிணங்களை, ஆட்சுமையாக எடுத்து அடக்கம் செய்தார் பெரியார் என்றொரு தகவல் படித்ததாக நினைவு.

இந்த நிகழ்வுகளை இன்று நான் நினைவு கொள்ளக் காரணம் இருக்கிறது. இன்று மாலை நான் தங்கியிருக்கிற தெருவில் மெட்ராஸ் -யால் பாதிக்கப்பட்ட ஒருவர் நின்று கொண்டிருந்தார். கூடுமான வரை அவரை நெருங்காமல் அந்த இடத்தைக் கடந்து வந்தேன். மனிதர்கள் எப்படியெல்லாம் இருக்கிறார்கள்?

கருத்துகள் இல்லை: