ஞாயிறு, 4 ஜூலை, 2010

எப்படித்தான் இருக்கிறீர்கள்?


முள் கம்பிகளுக்குள் வாழ விதிக்கப்பட்டவர்களே!!!
எப்படி இருக்கிறீர்கள்?

இழந்து விட்ட கணுக்கால்களின்
ரணங்கள் ஆறி விட்டனவா?

கரங்களை இழந்த உமது குழந்தைகள்
உணவுண்ணப் பழகிக் கொண்டனவா?

கர்ப்பினிப் பெண்களைப் புதைத்த இடத்தில்
மலர்கள் ஏதேனும் பூத்துள்ளனவா?

ராணுவத்தடைகளைத்தாண்டி
பெண்கள் தண்ணீரை மட்டும் சுமந்து வருகிறார்களா?

காணாமல் போய்விட்டவர்களைப்பற்றி
தகவல்கள் ஏதும் உண்டா?

இங்கேயா?

உங்களின் கவிதைகளை
நாங்களே எழுதுவோம்.


உங்களின் கண்ணீரை
நாங்களே மேடையேறி வடித்துக் கொள்வோம்.

உங்கள் வாழ்வை
உருக உருக திரைப்படமாய் எடுப்போம்.

சலித்துப்போகாதிருக்க
மாநாடுகள் நடத்திக் கொள்வோம்.

சோறோ...
சுதந்திரமோ...
சுய நிர்ணய உரிமையோ...
நீங்களே தேடிக்கொள்ளுங்கள்.
இங்கேயிருந்து கரங்களும் நீளாது; குரல்களும் எழாது.

கருத்துகள் இல்லை: