சனி, 10 ஜனவரி, 2009

கயிறுகள் அவர்களைக் காப்பாற்றின

விதைகள் அவர்களை ஏமாற்றின;
மழைகள் அவர்களை ஏமாற்றின;
விளைபொருட்கள் அவர்களை ஏமாற்றின;
சந்தைகள் அவர்களை ஏமாற்றின;
அரசுகள் அவர்களை ஏமாற்றின;
ஆனால் -
முழநீளக் கயிறுகள் அவர்களைக் காப்பாற்றின.

கடனும் கயிறும் கழுத்தை இறுக்க,
விளை நிலங்களில் பிணமே விளைந்தது.
பிணப் பரிசோதனைகளுக்குக் கூட
பணம் கேட்கிற தேசத்தில் வேறென்ன எதிர் பார்ப்பீர்கள்?

தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவதாய் சொன்னான் ஒருவன்;
அங்கேதான் ஜகத்தினுக்கே உணவளித்தவன்
தனியனாகி அழிந்தான்.

விதர்பாவில் விழுந்த இருளின் நிழல்;
பன்டில்கண்ட் பகுதியில் எழுந்த துயரத்தின் குரல்-
ஆந்திரம், கர்னாடகம் என எங்கெங்கும் விரவியது.


தடையற்ற வாணிபமும் உலகமயமாக்கலும்
வாகை சூடி வலம் வர,
இந்த இறப்புகள்.........
இந்த இழப்புகள்........
அரசுகளுக்கு புள்ளிவிவரமாகவும்
பத்திரிகைகளுக்கு செய்தியாகவும் சுறுங்கும்.

உலகம் இனி ஒற்றைக் கிராமமாக மாறும்.
அங்கே-
அமெரிக்க கொடி
சில நூறு நட்சத்திரங்களுடன் அசைந்தாடும்.

நன்றி: புதிய பயணம் 2009


கருத்துகள் இல்லை: