எழுதுவதை சமூகக் கடமையாக கருதுகிறவன் நான். எனது கருத்துருக்கள், அரசியல் மற்றும் பார்வைகள் மனித சமுதாய வரலாற்றின் நெடிய பக்கக்களில் இருந்து இரவல் பெறப்பட்டவை. அவற்றை எனது மொழியில் எனக்குப் பிடித்த ரகங்களில் எழுதுகிறேன். நிறைய பேர்களால் படிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன்.
ஞாயிறு, 20 டிசம்பர், 2009
முன் திட்டமிடலோடு புனையப்படும் அலங்காரக்கோவை : பாமரனின் எழுத்துக்கள்
பாமரன் என்ற பெயரிலான தனிமனிதனை நான் இங்கே விமர்சிக்கப் புகவில்லை. அவரின் சமூகப் பொறுப்புணர்வையோ அரசியல் நடவடிக்கைகளையோ நான் எடை போடவில்லை. அதற்கான அவசியமும் இங்கே இல்லை. ஆனால் பாமரனின் எழுத்தை விமர்சிக்க தமிழில் படிக்கும் வாசகன் என்ற குறைந்த பட்ச தகுதியே போதுமானது. பாமரனின் எழுத்துக்களை அவ்வப்போது வியாபாரத்துக்கென நடத்தப் படும் இதழ்களில் படித்து வந்திருக்கிறேன். அவரின் இணைய பக்கத்தையும் அவ்வப்போது படிப்பதுண்டு. ஒரு பொழுதுபோக்கின் வகையென இதை நான் கொண்டிருந்தாலும், வெளிப்பார்வைக்கு நன்றாக இருக்கிறதேயென்று சேரும் ஊருக்குப் போகாத ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்திருப்பவருக்கு அந்தப் பேருந்து அவருக்கான பயணத்துக்கல்ல என்று சொல்லும் குறைந்த பட்ச சமூகப் பொறுப்புணர்வோடு பாமரனின் எழுத்தைப் பற்றி இந்தச் சிறிய கட்டுரையை எழுதுகிறேன்.
நண்பர் சங்கர் ஒருமுறை சொன்னார். தொடர்ச்சியாக செய்திகளை கவனித்துக் கொண்டு வருபவர்களுக்கு எப்படியும் எதையாவது விமர்சிக்கிற குறைந்த பட்ச அறிவு வளர்ந்து விடும் என்று. உண்மைதான். நிறைய படிக்கவும் டி வி பார்க்க நேரமும் இருக்கிற ஒருவருக்கு பல அபிப்ராயங்கள் தோன்றும். எழுதுவதற்கு கொஞ்சம் மொழியும் கைவந்து விட்டால் அதற்கு நேரமும் கிடைத்து விட்டால் என்னத்தையும் எழுதி விடலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் என்பவன் ஒரு படைப்பாளி என்பவன் தனது எழுத்து அல்லது படைப்பு மூலமாக ஒரு கருத்தை உருவாக்க வேண்டும்; கருத்தை நிறுவ வேண்டும்; கருத்தை ஆராய வேண்டும். இந்த அளவுகோளின் படி பாமரனின் எழுத்து எனது கனக்கில் வரவில்லை.
பாமரனின் எழுத்து ஒரு சாயங்கால நேரத்து நொறுக்குத் தீனீ போல. உப்பு சப்போடு இருப்பதாகத் தோன்றினாலும் உடம்புக்கு ஒன்றும் வலு சேர்க்காது. தேவையில்லாதது. அவரின் மொழிநடை பரவலாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம் அதன் வசீகரத்தொனி. வைரமுத்துவின் மேடையலங்காரப் பேச்சு அதன் உச்சரிப்பால் கேட்பவர்களை வசீகரிக்கிறது. அதைப்போல பாமரனின் எளிய வசீகர நடையில் மயங்கி அதைப் பிடிக்கிறதென்று பலரும் சொல்கிறார்கள். இப்படியாகிவிட்ட பட்சத்தில் அவர் உண்மையாகவே ஒரு நல்ல கருத்தை முன்வைத்தாலும் மொழிநடையினது மாய வசீகரம் அதை மறைத்து விடுகிறது.
நான் சில சிற்றிதழ்களுடன் அறிமுகமானவன். அந்த எளிய இதழ்களிலும் பாமரன் போன்றதொரு தொனியில் எழுதுகிறவர்களது படைப்புகளும் வருவதுண்டு. வாசிப்பனுபவமே இல்லாதவர்கள் கூட அவற்றின் நடை தரும் சுகத்துக்காக படிப்பார்கள். நன்றாக இருக்கிறதென்றும் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் படித்ததை மறந்து விடுவார்கள். அவருக்கு அந்த எழுத்தின் சாரம் மறந்து போகும். ஆனால் நன்றாக இருக்கிறதென்ற பிம்பம் நிலைத்துப் போகும். அத்தகைய விபத்துதான் பாமரனின் எழுத்துக்கும் நேர்ந்துள்ளது.
ஈழத்தின் நான்காம் கட்டப் போரின்போது பலரும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதினார்கள் . பேசினார்கள். ஆனால் அதிலெல்லாம் ஒரு அவலச்சுவை மேலோங்கி நின்ற காரணத்தால் மக்கள் அனுதாபப் பட்டார்களேயொழிய ஆத்திரப் படவில்லை. திண்டுக்கல் லியோனி பேசினால் மக்கள் ரசிப்பார்கள். கூட்டம் முடிந்த பின்பு என்ன பேசினாரென்று ஒருவருக்கும் நினைவிருக்காது. லியோனி சிரிக்கச்சிரிக்கப் பேசுபவர் என்ற பிம்பம் நிலைத்து விடும். பாமரனுக்கும் இந்த நிலைதான். இதற்காக அவரை நான் புறக்கணிக்கச் சொல்லவில்லை. ஆனால் அதன் பின்னாலுள்ள உண்மையை எல்லோருக்கும் சொல்வது எனது கடமை. பாரதி மேல் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவனை அதற்காகப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு அவனின் படைப்பின் மேன்மை தாங்கி நிற்கிறது. பாமரனின் எழுத்தையும் சமூகப் பொறுப்புணர்வையும் நான் பிரித்துப் பார்க்கவில்லை என்கிற விஷ்ணுபுரம் சரவணனின் கருத்தை (http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=37515815&tid=5416156027488091983) நான் மதிக்க இதுவே காரணம். இந்த நுண்ணிய தொடர்பிழை பலருக்கும் புரிவதிலை. பாமரனின் எழுத்தை நான் விமர்சித்தால் அதற்கு குதர்க்கமான காரணங்கள் கற்பிப்பதால் பாமரனின் எழுத்தின் தவறுகளை நீங்கள் மறைத்து விடவோ பிழையே இல்லையென்றாக்கி விடவோ முடியாது. அப்படி நினைப்பிருந்தால் அது அறிவீனமே.
பாமரனின் எழுத்துக்களின் பலமாக விஷ்ணுபுரம் சரவணன் சொன்ன இன்னொன்று அரசியல் கட்டுரைகளில் பகடி. பாமரனிடம் நான் காணும் மிகப் பெரும் பலவீணமே அவர் பகடி பன்னுகிற விதம் தான். குஷி கிளம்பிய குழந்தை, செய்ததையே அல்லது சொன்னதையே மீண்டும் மீண்டும் நம் கவனிப்புக்காக சொல்வதை/செய்வதைப் போல, வாசகர்கள் ரசிக்கிறார்களேயென்று பகடியாகவே அதை பண்ணுகிறார். பகடி பன்னுவதற்காக விசயங்களை எடுத்துக் கொள்கிறாரோ என்ற மயக்கமும் எனக்கு உண்டு. இதுபோக, தொடர்பில்லாவிட்டாலும் இங்கே ஒன்றை பதிகிறேன். தமிழில் அரசியல் கட்டுரைகளை நுணுக்கமான அதெசமயம் எளிமையான பகடியுடன் எழுதுபவராக என் கண்ணுக்குப் படுபவர் சாரு நிவேதிதா.
சாரு நிவேதிதா தற்கால இலக்கிய உலகில் மிகவும் எளிமையான அருமையான மொழி நடை உள்ளவர். அவரும் அவ்வப்போது அரசியல் கட்டுரைகள் எழுதுகிறார். அதற்காகவே அவரின் அரசியல் கட்டுரைகள் முக்கியமானவை என்று சொல்லி விட முடியாது. ஒருவித சார்புடனே, சமரசத் தன்மையோடே எழுதுகிறார். கலகக்குரல் போன்றாதான மாயையில் அவரின் அரசியல் சமரசத்தன்மை மறைந்து விடுகிறது. பாமரனின் எழுத்துக்கள் காத்திரமான விசயங்களை சமரசத்தன்மை அற்று பேசுகிறது என்கிறார் விஷ்ணுபுரம் சரவணன். சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர் என்கிறார். இதெல்லாம் மட்டுமே ஒரு எழுத்தை நல்ல எழுத்தென்றாக்கி விடாது. அவரின் சமரசமற்றத்தன்மை என்பது வியப்புக்குரியதோ பாராட்டுக்குரியதோ அல்ல. மேலுள்ள வரியை எழுதியால் நான் அவர் சமரசமற்ற எழுத்தைக் கொடுப்பவர் என்று ஒப்புக்கொள்ளவில்லை. வியாபாரமாக்கப் பட்ட இதழ்களில் எழுதுகிறவர்கள் அப்படித்தான் எழுத முடியும். எழுதியாக வேண்டும். இது ஒருவகையில் அந்த இதழ்களின் வியாபார யுக்தி. அவர்களின் எதிர்பார்ப்புக்கு பாமரனின் எழுத்து கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. எனவே அவரின் சமரசமின்மை இயல்பானது அல்ல. அவர் எழுத்துக்களுக்கான பரவலான வரவேற்பினால் நிகழ்ந்த தொடர்விபத்து என்றே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
முன்னர் சொன்னது போல குறைகள் இல்லாதது எதுவுமே இல்லை. குறைகள் இருக்கிறதென்பதாலேயெ ஒன்றை முற்றாகப் புறக்கணிக்கவும் கூடாது. மனிதர்களை அவர்களின் பலவீனங்களுடனே ஏற்றுக் கொள்பவன் நான். நமது சமூகம் பாசாங்குகளால் நிரம்பியது. ஈழம் என்பவர்கள் இன உணர்வாளர்கள்; குரசோவவைப் பேசுகிறவர்கள் சினிமாக்காரர்கள்; புதிய ஜனநாயகம் என்பவர்கள் புரட்சிக்காரர்கள்; பாப்லோ நெரூடாவென்றால் அவர்கள் முற்போக்குவாதிகள்; பின் நவீனத்துவம் தெரிந்தவர்கள் இலக்கியவாதிகள். இப்படியாக பிம்பங்கள் கட்டமைக்கப்பட்ட தமிழ்ச்சூழலில் யாதொரு கருத்தை முன்வைத்து பொதுவுக்கு வந்தாலும் எதிர்ப்பும் ஆதரவும் சகஜமானதே. அதற்கு பாமரனும் தயாராக இருக்க வேண்டும். நானும் தயராக இருக்க வேண்டும்.
பாமரனின் எழுத்துக்களுக்கு நேர் மாற்றாக நான் முன்வைப்பது புதிய ஜன நாயகத்தின் எழுத்துக்களை. அதன் அரசியல் போக்கோடு எனக்கு சில நெருடல்கள் இருந்தாலும் அந்த எழுத்துக்களின் எளிமைத்தன்மை பூண்ட வீரியத்தை சொல்ல வேண்டும். அதீத எளிமையோடு அசலான தீவிரத்தோடு அவர்கள் உபயோகிக்கிற வார்த்தைகள் ஒரு காத்திரமான எழுத்தை நம் முன் வைக்கின்றன.
கீழுள்ள வரியை எழுதி விட்டதனால் பின்வருபவர்களோடு நான் பாமரனை ஒப்பிடுவதாக தப்பர்த்தம் பண்ணிக் கொள்ள வெண்டாம். தமிழில் முன் திட்டமிடல் இல்லாமல் சுயமாக சரளமான எளிமையான எழுத்தை கைவரப் பெற்றவர்கள் மிகக் குறைவு. பாரதி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் மற்றும் விக்கிரமாதித்யன் என்கிற எனது இந்தப் பட்டியல் ரொம்பச்சின்னது. பெருமாள் முருகனின் பட்டியல் இன்னமும் சின்னது. பாரதியும் புதுமைப்பித்தனும் தான்.இறுதியாக, பாமரனின் எழுத்துக்கள் வாசகர்களை கவரும் வண்ணமாக முன் திட்டமிடலோடு புனையப்படும் அலங்காரக்கோவை என்பது என் ஒட்டு மொத்தக் கருத்து.
வியாழன், 17 டிசம்பர், 2009
நான் ரகசியங்களை விற்பவனல்ல
என்றாலும்-
உன் பரிவான சொற்களைக் கொடுத்து
என் ரகசியங்களை வாங்கிக் கொண்டு போகிறாய்.
அல்லது-
உன் பரிவான சொற்களை வேண்டி
என் ரகசியங்களை படையலிடுகிறேன்.
உனது பரிவான சொற்களால்
சிறியதாய் ஒரு தலையணை செய்து
எனக்கேயான உறக்கங்களில்
உடன் வைத்துக் கொள்கிறேன்.
என்னதான் செய்வாய் நீ-
என் ரகசியங்களை?
சாவின் சூட்சுமம்
கேட்டவனிடம்-
தூக்க மாத்திரைகள்
நல்ல தேர்வு அல்ல என்று சொல்லி,
மண்ணில் புதையுண்டிருக்கும்
இரும்புக் கத்தியை எடுத்து
துருப்பிடித்த.... மழுங்கின....
அதன் முனையால்
குரல்வளையை அறுத்துக் கொள்;
என வழிமுறை கூறுகிறாய்.
ஒரு வேளை
உயிர் போவதற்கான
ரத்த இழப்பு இல்லாமற் போனாலும்-
விரைவில்,
சீழ் பிடித்து சாவு நேரும்;
என சாவின் சூட்சுமம் சொல்கிறாய்.
கனவில்தானென்றாலும்
இது பெருங்கொடூரமடி ஜோதி.
வாழ்வின் சுவாசம்
பூவுதிர்க்கிற பெருமரங்களையும்
பட்டுப் போக வைக்கும்
வேரடி பூஞ்சையாய் -
நிராசைகளின் பக்கங்களை
புரட்டிக்கொண்டு இருக்கும்
உள்மனம்
வாழ்வின் எளிய தருணங்களையும்
வெறுமையாக்குகிறது.
நிறைந்து போய் விடாத அந்த
வெறுமைகளில் இருக்கிறது
வாழ்வின் சுவாசம்.
சனி, 12 டிசம்பர், 2009
நான் மனிதன் என்று உணர்கிறேன்
கண்கள் தளும்புகிற கணங்களில்
நான் மனிதன் என்று உணர்கிறேன்.
ஞாயிறு, 22 நவம்பர், 2009
என்ன கொடுமை சரவணன் இது?
திங்கள், 16 நவம்பர், 2009
செம்பனார்கோயில்
அதிசயம் ஆனால் உண்மை.
புதன், 14 அக்டோபர், 2009
முதல்வர் அடிக்கும் அவசர கால அரசியல் கூத்து
வெள்ளி, 2 அக்டோபர், 2009
சாதியும் சாதி நிமித்தமுமாய்.......
சாதீய மனப்பான்மை வளர்ந்து கொண்டு போகிறதே ஒழிய குறைந்த பாடில்லை. வெறும் மனதுக்குள் மட்டும் சாதி இல்லை. பல வடிவங்களில் அது அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. சாதிய அடக்கு முறை என்பது மேல் சாதி இடைசாதியினர் மட்டும் செய்வது இல்லை. பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் என்று அரசிடம் சான்றிதழ் வாங்கியவர்கள் கூட- ஆதிதிராவிடர் பள்ளர் பறையர் முதலானோர் சக்கிலியரை அடக்கி வைக்கிறதை பார்த்து உள்ளேன். சமீபத்தில் பெருமாள் முருகனிடம் பேசியபோதும் இது சம்பந்தமாக பேசியபோது ஒரு தகவல் சொன்னார். பாமா தலித் மக்களின் வாழ்வை பதிவு செய்கிற நாவலில் அல்லது நாவல்களில் அருந்ததியரை அவன் இவன் எனவும் வேறு சாதியினரை மரியாதையாகவும் குறிப்பிட்டுள்ளதாக சொன்னார். கரூர் மாவட்டம் புலியூர் வட்டாரம் மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டாரம் இந்த இரண்டும் சிறுவயதில் இருந்தே எனக்கு தெரிந்த பகுதிகள். நான் பிறந்து படித்து வளர்ந்த இடங்கள். இங்கே சக்கிலியர்கள் மிகவும் கீழான நிலையில் உள்ளனர். என் கிராமத்தில் நிலம் வைத்து விவசாயம் செய்கிற பள்ளர் இன மக்கள் நிலம் இல்லாத கூலிகளான பறையர் இன மக்களை கீழாக மதிப்பதையும் பார்த்து வளர்ந்துள்ளேன்.
எனது ஊரில் இந்த இரண்டு இன மக்களையும் உறவு முறை சொல்லி அழைத்து பழகினாலும் வீட்டுக்குள் அழைத்து வருவதோ அவர்களும் வர நினைப்பதோ இல்லை. எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். அவர்களது விசேசங்களுக்கு இந்த மக்களும் போவது உண்டு. ஆனால் சாப்பிடுவதில்லை. போகப் போக இந்த கொஞ்ச நஞ்ச வித்யாசமும் மறைந்து விட வேண்டும் என விரும்புகிறேன். பறத் தெரு பள்ளத் தெரு என்று சொன்ன மக்கள் இப்போது ரோஜா நகர் முல்லை நகர் என சொல்கிறார்கள். அரசுப் பதிவுகளிலும் மாறி விட்டது. இதெல்லாம் வரவேற்க வேண்டிய அம்சங்கள்.
எல்லோருக்கும் ஓரளவு பொருளாதார நிறைவு அல்லது சமத்துவம் வரும்போது சாதி என்பது அவசியமாக இருக்காது. அப்போது கண்டிப்பாக சாதி மறக்கப் படும் ஒழிந்து போகும். அந்த அடிப்படையிலேயே பெரியார் தன சமூகப் புரட்சியினை வழிநடத்தினார். சாதியக் கட்டுமானங்களை தகர்க்க அவர் கடவுளை முதலில் தகர்க்க வேண்டி இருந்தது. அதனால் கடவுள் இல்லை என்றார். கடவுளை கட்டிக் காப்பது பார்ப்பன சாதி. எனவே அந்த சாதியை விரோதிகளாக பிரகடப்படுத்தி போராடினார். ஆனால் காலப் போக்கில் பெரியார் எந்த நோக்கத்திற்காக இந்த இரண்டு விசயங்களையும் தொடங்கினாரோ அதை மறந்து விட்டு கடவுள் இல்லை என்பதையும் பார்ப்பானை திட்டுவதையுமே பெரியாரியல் என்று பலரும் நினைக்கிறார்கள். நமது சமுகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை சாதி இருக்கும். இன்று நகரங்களில் வாழும் வசதியான தாழ்த்தப்பட்ட மக்களோடு இடைசாதியினரும் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகளின் விருப்பத்தின் பேராலோ திருமண பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை கிராமங்களில் வர வெகு காலமாகும். எனது கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் கடன் வாங்கும் குடியானவர்கள் உண்டு. குடியானர்வளின் நிலங்களை தாழ்த்தப்பட்டோர் வாங்குவதும் நடக்கிறது. மாற்றங்கள் கண்டிப்பாக நடக்கும். ஆனால் மெதுவாக நடக்கும் என்றே படுகிறது. அதுவரை செத்துப் போன பாரதியிடம் வீரம் காட்டாமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது நடக்கும்.
செவ்வாய், 29 செப்டம்பர், 2009
நான்கு வழிச்சாலைகள்
திங்கள், 28 செப்டம்பர், 2009
வேடிக்கை பார்த்தவன்
சனி, 4 ஜூலை, 2009
உயிரும் மனமும்
இதுவரையில் எனது புரிதல் இதுவாக இருந்தது. கடந்த மாதம் ரயிலில் ஒருவரிடம் பேசிய பொது அவர் வேறு மாதிரி சொன்னார். விந்தணு ஆணில் உற்பத்தியாகும் போதே ஆன்மா அங்கே குடியேருகிரது. அதுதான் பின் இயக்குகிறது என்றார். அவரின் கருத்துப் படி நமது ஆன்மா ஒன்று அல்ல . அது பல உயிர்களது ஆன்மாக்களின் கலவை. அதனால் தான் ஒவ்வொருவரின் குணாதிசயமும் மாறுபடுகிறது. ஒரு சமயம் நல்லவனா போலவும் மறு சமயம் கெட்டவன் போலவும் . அவர் சொன்னதும் யோசிக்க வேண்டியது.
நான் சொன்ன விசயங்கள் இரண்டு. ஒன்று எனது புரிதல் இன்னொன்று ஒரு ரயில் நண்பர் சொன்னது. இரண்டும் உண்மை என்று சொல்லவில்லை. யோசிக்க வேண்டியது. இது தொடர்பாக இன்னும் அறிவியல் உலகமே முழு தீர்மானத்திற்கு வரவில்லை. இதன் மீதான ஆய்வுகளும் குறைவு.
ஆன்மா என்பது என்னை பொறுத்துவரை நமது சிந்தனை. அதை மனம் என்றும் சொல்லலாம். அது தான் மூளையை இயக்கு கிறது.
கருவுறுதல் என்பது இரண்டு இருபத்து மூன்று குரோமோசோம்கள் உள்ள பாளினசெல்கள் இணைந்து ஒரு நாற்பத்து ஆறு குரோமோசோம் உள்ள செல்லாக மாறுவது . அது தான் கரு. இந்த கருதான் முழு மாநிதனாக வளர முடியும். விந்து அண்டம் இரண்டும் உயிருள்ள செல்கள் தான். மனித உடலில் நகம் முடி எலும்பு இன்னும் வெகு சிலவற்றை தவிர மற்ற எல்லலாமே உயிருள்ளது தான். அறிவியல் கோட்பாடுகளின் படி எந்த செல்லையும் எடுத்து ஒரு முழு உயிரியை உருவாக்கி விட முடியும்.
எல்லா வகையான மரண காரணிகளும் ஏற்படுத்தும் இறுதி விளைவு மூளை தனது வேலேயை நிறுத்துவது தான். முளை செத்த பின்னும் கொஞ்ச காலம் இந்த உறுப்புகள் இயங்கலாம். ஆனால் அந்த உடல் அதன் பிறகு உயிர் இல்லை என்றுதான் கருதப் படுகிறது. இந்த இதயம் மற்ற உறுப்புகள் எல்லாம் ஒரு இயந்திரம் போல. இவை எல்லாவற்றுக்கும் சாவி மூளைதான். அதன் செயல்பாட்டை நான் மனம் என்கிறேன். சிந்தனை என்றும் சொல்லலாம். ஆனால் இதற்கும் நமது உடலை அது இயக்குவதற்கும் சம்பந்தம் இல்லை. வாதம் வந்தவர்கள் உறுப்புகள் இயங்காவிட்டாலும் சிந்தனை குறைவு துளியும் இல்லை. நமது உடலை முளை இயக்கம் விதம் நன்றாக ஆராயப் பட்டுள்ளது. அதற்கும் சிந்தனைக்கும் மனதிற்கும் சம்பந்தம் இஉல்லை. உடல் இயக்கம் என்பது தன்னிச்சையாய் நிகழ்வது. ஆனால் சிந்தனையை நாம் கட்டுப்படுத்தலாம். அதுதான் அந்த கட்டுப்பட்ட சிந்தனைதான் அல்லது சிந்தனையை கட்டுப்படுத்தும் மூளையின் செயல்பாடுதான் மனம்.
இந்த ஒட்டு மொத்த பிரபஞ்ச இயக்கம் மனித உயிர் உள்பட புறத்தில் இருந்து பெறப்பட்ட சக்தியால் தான் இயக்கப் படுகிறது. ஒரு கரு உருவாகும் பொது என்னென நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பது ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கூட உள்ளது. ஆனால் அந்த நிகழ்வுகளை தூண்டும் சக்தி அல்லது காரணி என்னவென்பதை இன்னும் முழுதாக மனிதகுலம் அறிந்த பாடில்லை. இந்த மதங்கள் சொல்கிற பரம்பொருளை இயற்பியல்வாதிகள் சொல்கிற கருந்துளையுடன் நான் ஒப்பிடுவீன். இந்த பிரபஞ்சத்தில் சக்க்தி உருவாகவும் இல்லை அழிவதும் இல்லை. ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலான்\க பரிணாமம் பெறுகிறது. இதைதான் நான் மறு பிறப்பு என கொள்கிறேன். இதற்காக நான் வேத சாஸ்திர அபிமானி என என்ன வேண்டாம். அறிவியல் புலத்தில்; முனைவர் பட்டம் வரை பெற்று உள்ள எனது எனது அறிவு இதை ஏற்றுக் கொள்கிறது.
அறிவியல் உலகம் எதிர்மறை ஆய்வுகளையும் ஒத்துக் கொள்கிறது. ஆனால் நமது முன்னோர்கள் உணர்ந்த எழுதியவற்றை புரட்டு என ஆய்வு செய்யாமலே ஒதுக்குவதில் பெருமிதம் கொள்கிறது.
உலகம் தட்டை என்றபோதும் அது ஒரு அறிவியல் கருத்து. உலகம் உருண்டை என்றானபோதும் அது அறிவியல் கருத்து.
செவ்வாய் என்று சோதிடம் சொன்னால் புரட்டு. என்னை பொறுத்தவரை உண்மை இல்லாமை எந்த ஒரு கருத்தையும் உருவாக்க முடியாது. ஆன்மா என்ற ஒன்று இல்லை என்று இதுவரை யாரும் நிரூபித்து காட்டவில்லை. நமது அறிவியல் ஐரோப்பிய வளர்ச்சியோடு இணைந்தது. அதன் வயது ரொம்ம குறைவு. ஆனால் நம் இந்திய மரபு சார் சிந்தனைகள் மிகப் பழையன. முறையாக ஆய்வு செய்தால் நிறைய உண்மைகள் புலனாகும்.
ந்த ஒன்று இயங்குவதற்கும் அடிப்படையாக ஒரு சக்தி அல்லது ஆற்றல் தேவை. எளிதாக் சொன்னால் எரிபொருள். பள்ளத்தில் உருளும் பந்தில் கூட potential energy இறுக்க வேண்டும். இல்லாவிட்டால் உருளாது. இது ஆறாம் வகுப்பு இயற்பியல். உடலின் இயக்கம் உயிர். அதாவது உடலின் இயக்கங்களை இயக்குவது உயிர்.
ந்திய சிந்தனை மரபின் (இந்து மரபு என்று கொள்ள வேண்டாம். அது வேறு வகையில் விவாதிக்க சொல்லும். அது எனக்கு ஏற்புடையது அல்ல ) படியும் நான் ஏற்றுக் கொண்ட வரையிலும் ஆன்மா பிரிந்து வேருரோ உடலில் உயிரை உருவாக்கும். அல்லது பிரபஞ்ச பரம்பொருளுடன் இணையும் . அறிவியல் உலகம் விவாதிக்கிற கருந்துளை ஆகா கூட இது இருக்கலாம். நீங்கள் தொலைக்காட்சி பெட்டியை அணைத்தால் உங்களுக்கு மட்டும் தான் காட்சிகள் மறையும். உலகில் எத்தனை பெட்டிகள் உள்ளன?
அதுபோல உலகில் பல உயிர்கள் உள்ளன. இந்த ஆன்மா என்பதை மீண்டும் சொல்கிறேன் அது ஒரு வகை சக்தி. ஆற்றல். உடலில் இருந்து பிரிந்தால் அது வேறு ஏதாவது உயிரினத்தின் இயங்கு சக்தியாக இருக்கலாம். அல்லது ஒரு நிக்கல் கட்மியம் பேட்டரியில் மின்சாரமாக போகலாம். ஒரு உயிரில் இருந்து பிரிந்த ஆன்மா இன்னொரு உயிரில் தான் சேர வேண்டும் என்பது இல்லை. ஏதாவது உயிரற்ற பொருளிலும் ஆற்றலாக சேரலாம். இந்த பிரபஞ்சத்தின் எல்லா உயிருள்ள உயிரற்ற பொருட்களும் பிரபஞ்சத்தின் அங்கம். அதற்கு ஒரே ஒரு ஆதார சக்திதான். அது தான் சூரியனையும் இயக்குகிறது. உங்களையும் இயக்குகிறது. காற்றில் குப்பையையும் பறக்க வைக்கிறது. இது அறிவியல் பூர்வமான உண்மை
மொத்தத்தில் உயிர் என்பதும் உண்டு. மனம் அல்லது ஆன்மா என்பதும் உண்டு. இதை இரண்டையும் அறிவியல் உலகம் இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை. அதனால் அது இல்லை என்று முடிவாகிவிடவில்லை. நமது மனித குளத்தின் தற்போதைய அறிவு வளர்ச்சி அதயு ஆராயும் அளவு இன்னும் வளரவில்லை.
திங்கள், 1 ஜூன், 2009
செவ்வாய், 21 ஏப்ரல், 2009
சிவானந்தம் இறுதி ஊர்வலம்
தாரள மயமாக்கம், ஏகாதிபத்தியம் பொன்ற முழக்கங்கல் எழுப்பப் பட்டது எனக்கு தெவையற்றதாகப் பட்டது. சிற்பிமகனும் வந்தேறிகளே வெளியேறுங்கள் என்ற பொதுவான முழக்கத்திற்காக வருந்தினார்.
இரங்கல் உரையின் போது ஒரு நண்பர் உணர்வு மிகுதியால் சில முழக்கங்களை எழுப்ப நெடுமாறன் அய்யா கடிந்து கொன்டார். கூச்சல் என்று சொன்னதை அந்த தோழர் முழக்கம் என திருத்தினார். ஆனால் நெடுமாறன் இரன்டு பதங்களையும் உபயொகப் படுத்தினார். இதுவும் தேவையற்றது. ஆனால் அவர் விரும்பியது ஒரு கட்டுப் பாடு. சில பேர் சரக்கில் இருந்தனர்.அதுவும் இந்த குழப்படிகளுக்கு காரணம். என்றாலும் இந்த ஊர்வலத்திற்காக வந்த அந்த முன்னூறுக்கும் குறையாத பேர்கள் தமிழுணர்வு உந்திதான் வந்தனர். தள்ளாத வயதினரும் இதில் அட்ங்குவர். இதன் கானொளிகளை நாலை இணைக்கிரேன்.
சனி, 21 பிப்ரவரி, 2009
தமிழக சட்ட ஒழுங்கு சீர் கெட்டதா?
இரண்டு சம்பவங்கள் நமது தமிழக காவல் துறையை தலை குனிய வைத்துள்ளன. பலமுறை குனிந்த தலைதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் குனிய தவறுவதில்லை.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல். கடலூரில் தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தின் பின்னான கலவரங்கள். முதலாவது காவல் துரையின் கொடூரப் போக்கையும் இரண்டாவது காவல்துறையின் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின் பின்னாலும் ஆல்வோர் இல்லை என சொல்ல முடியுமா?
காவல் துறையை அடியாள் துறையாக மாற்றி வரும் அரசு ஒன்றை மறக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது என சொல்ல இவை போதும். இவற்றால் மக்கள் படும் துயரமும் , அவர்கள் கண்ட பீதியும் தேர்தல் நேரங்களில் எதிரொலிக்கும். எதிர்கட்சிகள் இதை நினைவூட்டும்
திங்கள், 16 பிப்ரவரி, 2009
செவ்வாய், 10 பிப்ரவரி, 2009
சுத்தப் படுத்துவதை விடவும் சுத்தமாக வைத்திருப்பது எளிது.
௩. 3. குப்பை சேகரம்
5. வண்டியில் பொகிற போது கிழக்கு கடற்கரை சாலையில் ஓரிடம்
கோயில் நகரம்
௪. கைலாசநாதர் கோவில்
௬. ஒரு சுவரில் இருந்த கல்வெட்டு
௭. சுரகறேஷ்வரர் கோவில் : இதன் முஉலவர் சன்னதி வழ்க்கமான சதுர வடிவில் இல்லாமல் வட்ட வடிவில் உள்ளது.
௮. கைலாசநாதர் கோவிலில் இது போல நிறைய சிலைகள் உள்ளன.
௯. கைலாசநாதர் கோயில் பிரகாரம்
புதன், 4 பிப்ரவரி, 2009
அணைகள் உடையும்
சிலர் உழுது பிழைக்கிறார்கள்
சிலர் உடலை விற்று பிழைக்கிறார்கள்
சிலர் இரந்தும் பிழைக்கிறார்கள்.
ஆனால் உன் பிழைப்பை யாரும் பிழைக்கவில்லை.
அடுத்தவர்களின் உழைப்பில் குளிர் காய
உன் அண்ணன் சொல்லித் தந்தான்.
அடுத்தவர்களின் உணர்வில் குளிர் காய நீ கற்றுக் கொண்டாய்.
அடுத்தவன் உழைப்பை சுரண்டுவது திருட்டு.
உனது வகைமாதிரிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
ஒரு இனமே உன் பின்னால் நின்றது
ஒரு தேசமே உன்னை நம்பியது.
துரோகிகளுக்கு தேச எல்லைகள் இல்லை.
ஈழமானாலும் இங்கேயானாலும்
ஒரே பெயர்தானென்று சொல்லி விட்டாய்.
கல்மடுவை உடைக்க வெடியொன்று போதுமானது.
இங்கேயும் ஒரு வெடி பற்றிக் கொண்டது.
வெடிக்கும் முன் உன் செங்கோல் அணைத்துவிடத் துடிக்கிறது.
அணை உடைய வெகுநாள் ஆகாது.
அவன் பெயர் தமிழன்
இவன் கண்கள் கலங்கின.
மும்பையில் குண்டு வெடித்த போது
இவனின் நெஞ்சு வெடித்தது.
குஜராத்தில் பூகம்பம் வந்தது
உணவு உடைகளோடு ஓடினான்
கார்கிலில் சண்டை என்றார்கள்
இங்கே உண்டியல் தூக்கினான்.
இப்போது-
அவன் பிள்ளைகள் சாகின்றன.
அவன் பெண்டுகள் மானம் காக்கவும் வழியற்று மாய்கிறார்கள்
அவன் சகோதரனோ-
பதுங்கு குழிகளையோ புதைகுழிகளையோ வெட்டிக் கொண்டிருக்கிறான்.
அவர்களின் கதறலும் அவர்களுக்கான கதறலும்
வங்காள விரிகுடாவில் கரைகிறது.
சொந்தமென்று அவனை நம்ப வைத்தவர்கள்
சும்மா இருந்தார்கள்
கொஞ்சமாவது சூடு வரட்டும்.
கொஞ்சமாவது சொரணை ஊறட்டும்
என்று-
செத்துச் சொல்லிக் காண்பித்தான் முத்துக்குமரன்.
சூடும் வரவில்லை;
சொரணையும் வரவில்லை;
கவிதைதான் வருகிறது.
சனி, 10 ஜனவரி, 2009
கயிறுகள் அவர்களைக் காப்பாற்றின
மழைகள் அவர்களை ஏமாற்றின;
விளைபொருட்கள் அவர்களை ஏமாற்றின;
சந்தைகள் அவர்களை ஏமாற்றின;
அரசுகள் அவர்களை ஏமாற்றின;
ஆனால் -
முழநீளக் கயிறுகள் அவர்களைக் காப்பாற்றின.
கடனும் கயிறும் கழுத்தை இறுக்க,
விளை நிலங்களில் பிணமே விளைந்தது.
பிணப் பரிசோதனைகளுக்குக் கூட
பணம் கேட்கிற தேசத்தில் வேறென்ன எதிர் பார்ப்பீர்கள்?
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவதாய் சொன்னான் ஒருவன்;
அங்கேதான் ஜகத்தினுக்கே உணவளித்தவன்
தனியனாகி அழிந்தான்.
விதர்பாவில் விழுந்த இருளின் நிழல்;
பன்டில்கண்ட் பகுதியில் எழுந்த துயரத்தின் குரல்-
ஆந்திரம், கர்னாடகம் என எங்கெங்கும் விரவியது.
தடையற்ற வாணிபமும் உலகமயமாக்கலும்
வாகை சூடி வலம் வர,
இந்த இறப்புகள்.........
இந்த இழப்புகள்........
அரசுகளுக்கு புள்ளிவிவரமாகவும்
பத்திரிகைகளுக்கு செய்தியாகவும் சுறுங்கும்.
உலகம் இனி ஒற்றைக் கிராமமாக மாறும்.
அங்கே-
அமெரிக்க கொடி
சில நூறு நட்சத்திரங்களுடன் அசைந்தாடும்.
நன்றி: புதிய பயணம் 2009
வால்பாறை
நீங்கள் வெட்டிய முதல் மரம்
ஒரு ஓநாயின் மேல் விழுந்தது.
வெட்டுண்ட மரத்தின்
வேரைப் பறித்த போது
சிறு முயலின் குழியை மூடி விட்டீர்கள்.
தரையை சமதளமாக்குகையில்
பாறைகளை உருட்டி
லைக்கன்களைப் புதைத்தீர்கள்.
நீங்கள் உண்டாக்கின
தேயிலையின் கசப்பில்
மான்கள் தடுமாறின.
நடுவே உங்களின் வீடுள்ள
குன்றில் தான்
முன்பு வரையாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
வழியெங்கிலும் உங்கள்
வாகனங்களே வலம் வந்ததால்
சிறுத்தைகளும் புதர்களுக்குள்ளே முடங்கி விட்டன.
வலசைப் பாதை மாறின யானைகள்
உங்களின் ஆலைச்சங்கொலியில்
தமது பிளிறலையும் மறந்து விட்டன.
சிற்றாறுகளின் வழிகளை மாற்றினீர்கள்;
ஓடைகளின் பாடலை நிறுத்தினீர்கள்.
கானகத்தில் இருளை எழுதியவை உங்களின் விரல்களே.
வெளிச்சம் வரட்டும்;
வெளியே வாருங்கள்.
லைக்கன்கள் : மண்ணை வளமாக்கும் சிலவகை பாசிகள் மற்றும் பூஞ்சைகள் சேர்ந்த கூட்டுயிரி