ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும்? Part 1

யமுனா ராஜேந்திரனின் சமீபத்திய பதிவு ஒன்றில் “காட்சிப்பிழை' முன்னிறுத்தும் வெகுஜன சினிமா பார்வையில் எனக்குக் கிஞ்சிற்றும் உடன்பாடு இல்லை” என்பதாக எழுதி இருந்தார். ஏன் வெகுஜன சினிமா கவனிக்கப்பட வேண்டும் என்பது குறித்து என் பார்வையில் கொஞ்சம் விரிவாக எழுதி வருகிறேன். அதற்கு முன்னோட்டமாக இது. தற்கால சூழலில் காட்சிப்பிழையின் தேவை மிகவும் அவசியம். தமிழின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக சினிமா மாறி விட்டது. வெகு மக்கள் பேசுகிற பேச்சுகளில் எடுத்தாளுகிற உவமானங்களில் எல்லாமும் சினிமா இரன்டற கலந்து விட்டது. சில மாதங்கள் முன்பு கவுதம சித்தார்த்தன் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு வரி-வணிக சினிமாவில் கலையின் சாத்தியங்களை அடையக் கூடிய இடங்களும் உள்ளதாக வருகிறது. உண்மை. சிவாஜி கனேசன் நன்றாக நடித்த படங்களும் உண்டு. வணிக சினிமாக்களை முற்றாக புறக்கனித்து விட்டு மாற்று சினிமா என்று சொல்லப்படுவதையோ நல்ல சினிமா என்பதையோ முன்னெடுத்து விட முடியாது. உணர்வெழுச்சியால் மட்டுமே ஆட்சிக்கு வந்த திராவிட கட்சிகள் வெகுஜன சினிமாவின் வலைமையை புரிந்து கொண்ட அலவு கூட லட்சிய பின்புலமுள்ள அமைப்புகளோ சிந்தனையாளர்களோ புரிந்து கொள்வதில்லை. இங்கே சினிமா என்ற பெயரில் ஒன்று இருக்கிறது. அதில் இருந்து தான் நல்ல சினிமா தர முடியும். இலக்கியங்கள் பிறந்த பின்புதான் இலக்கணங்கள் எழுதப்பட்டன. ஆக நல்ல சினிமா என்பதன் அளவுகோல்கள் வெளியே இருந்து வந்து விட முடியாது. ஏற்கனவே இருப்பது ஒன்றில் இருந்து வருவது எளிதாகவும் முன்னெடுத்துச் செல்ல லகுவாகவும் இருக்கும். நாளைய இயக்குனர்கள் காப்பி அடிக்கிறார்கள் அப்படி இப்படி என்று சொன்னாலும், அவர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை ஆரம்பித்து வைத்து இருக்கிறார்கள். கதாநாயக பிம்பங்களை உடைத்து வருகிறார்கள்.  ஆனானப்பட்ட விஜயே நண்பன் படத்தில் நடிக்கிறார். இப்படியான மாற்றங்களை விரும்புபவர்கள் வெகுஜன சினிமாவை கவனிப்பதும் அதில் நல்ல அம்சங்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி சினிமா பார்வையாளர்களின் ரசனையை மேம்படுத்தவும் செய்தல் முக்கியமானது.

இலக்கியம் எதற்காகப் படிக்கிறீர்கள்?



கடந்த சில வாரங்கள் முன்பு நண்பர் சங்கர் அவர்களின் இல்லத்தில் கவிஞானி சபரி வந்த ஒரு மாலை வேளையில் பலதரப்பட்ட பேச்சுக்களின் நடுவே இலக்கியவாதிகளின் நாடகத்தனம் பற்றிய பேச்சு வந்தது. எழுத்தாளர் கவிதா எழுத்துக்கும் எழுதுபவர்களின் வாழ்வுக்கும் இடையேயான முரண்களை மிகவும் கடுமையாக விமர்சித்தார். எழுத்தில் அன்பையும் அறத்தையும் சொல்லிவிட்டு வாழ்வில் வன்மத்தையும் குரூரத்தையும் வெளிக்காட்டும் இலக்கியவாதிகள் மிகவும் எமாற்றுக்காரர்கள் என்று ஆதங்கப்பட்டார். மற்றெல்லாரின் கருத்தும் அதுவேவாக இருந்தது. நான் மட்டும்வேறு கட்சி (போலி அறிவுஜீவியாதலால்). அதில் என்ன ஆச்சர்யம்... அப்படியானவர்களிடம் நாம் என்ன எதிர்பார்ப்பது என்று கேட்டேன். ஒட்டு மொத்த தேசமே ஒருவன் அல்லது அணி நல்லா விளையாடனும் என்று எதிர்பார்க்கிறது. காசுக்காக தோற்றுப் போகிறார்கள். போலியாக சினிமா செய்கிறார்கள். போலியாக வைத்தியம் பார்க்கிறார்கள் போலியாக கல்வி கொடுக்கிறார்கள். இப்படி அடிப்படை விஷயங்களிலேயே போலித்தனமாக இருக்கும் சமூகத்தில் ஏன் இலக்கியத்தில் மட்டும் தூய்மையை எதிர்பார்க்கிறீர்கள் என்றேன்.  சபரியும் சங்கரும் சொன்னார்கள் இலக்கியம் மனுஷனை பண்படுத்துவது. ஒரு நல்ல இலக்கியப்படைப்பை வாசிக்கும் போது மனிதனின் மனோபாவம் பண்படுகிறது. ஒரு அருமையான படைப்பை வாசித்து முடித்த உடனே ஒருவன் ஒரு கொடுமையான செயலை செய்து விட முடியாது என்றனர். நான் அப்படி எந்தெந்த இலக்கியவாதிகள் ஏமாற்றி விட்டனர் என்று கேட்டேன். அவர்கள் சொன்னதில் சற்றேரக்குறைய தமிழில் அதிகம் புத்தகம் விக்கிற எழுதுகிற எழுத்தாளர்கள் மிகப்பெரும்பாலோனோர் வந்து விட்டனர். எனக்கு அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நான் சில ஆண்டுகளுக்கு முன் பெற்ற முதிர்ச்சியை இப்போது நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்றேன். நல்ல இலக்கியவாதிகள் இன்னுமுள்ளனர் என்றும் அவர்கள் விளம்பரத்தில் பெரும்பாலும் இல்லை என்றும் முக்கியமாக சென்னைக்கு வெளியே நிறைய பேர் உள்ளனர் என்றும் சொன்னேன்.

வேடசந்தூர் என்னும் சிறிய நகரத்தில் மணிகண்டன் என்ற நண்பர் பால் வியாபரம் செய்கிறார். குறி என்கிற இலக்கிய இதழை நடத்தி வருகிறார். அந்த பத்திரிக்கையில் அவர் எழுதுவதில்லை. நிறைய பேர்களை எழுத வைக்கிறார். தமிழின் பெரும்பாலான புத்தகங்களை படிக்கிறார். புத்தகங்களை படிக்க வைக்கிறார். ஜீவ கரிகாலன் இருக்கிறார். குகை மா புகழேந்தி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி இலக்கிய உலகில் இவர்களைபோல எத்தனையோ பேர்கள் இலக்கியம் செய்து கொண்டு இருக்கிறார்கள். வெளிச்சத்தில் மட்டுமே உண்மை இருப்பதில்லை. உண்மை இருட்டிலும் இருக்கும். நான் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி சொல்வது ஒன்று. இது போலிகளின் உலகம். இங்கே உண்மையை கண்டடைவது பெரும் சாதனை.

கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்று உறுதியாக நம்புகிறவன் நான். எனது நண்பர்கள் இந்த நம்பிக்கை அதாவது எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருக்கனும் என்ற நம்பிக்கை எனக்கு மிகப் பெரும் ஆறுதலையும் நம்பிக்கையும் கொடுத்தது. கவிஞர் முருகேசனின் ஒரு தோழியின் வாசலில் முன்னுரையில் வாசு மாமா எழுதியிருப்பார். எதிர்பார்ப்புகளின் திடவடிவம் தான் எஅம்பிக்கை என்று. அப்படியான நம்பிக்கையை நொறுக்கும் விதமான ஒரு வாழ்வை இன்றைய ந்கர்வுகலாச்சார பயணாலிகளான சில போலி இலக்கியவாதிகள் நொறுக்கி வருவது சகஜமாகிவிட்டது. நிறைய பேர் புதிதாக படிக்கவும் படைக்கவும் வருகிறார்கள். அப்படியான காலகட்டத்தில் வெளிச்சத்தில் வாழும் இலக்கியவாதிகள் உண்மையில் இலக்கியத்தின் உள்ளர்த்தத்தை உண்மையாக்க வேண்டும். பிழைக்க வழிகள் நிறைய உள்ளன.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014