
Thanks to southdreams.com for the image.
மிஷ்கின் ஒரு கலை ராட்சசன் என்றே சொல்ல வேண்டும். ஒரு வெறித்தனமான மெனக்கெடலோடு கூடிய இயல்பான நடிப்பைக் கொடுத்தது நடக்கிற நதியின் இசையாய் எளிமையும் கலையழகும் மிக்கதான இந்தப் படத்தை இயக்கியது என்று இரண்டு முகங்கள் கொண்ட இந்த கலை ராட்சசனை இதுவரை இல்லாவிட்டாலும் இனிமேலாவது தமிழ்த்திரை கொண்டாடும். ரஜினிகாந்துக்குப் பிறகு எல்லா காட்சிகளிலும் இயல்பாக நடிக்கும் ஒரு தமிழ் நடிகர் மிஷ்கின்.
இந்தப்படத்தை அலசுவதோ எனது கருத்துக்களை முன் வைப்பதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. நான் இந்தப் படத்தை பார்த்ததன் மூலம் அனுபவித்த அழகிய திரைமொழியை மற்றவர்களுக்கு கோடிட்டு காட்டவே இந்தச் சின்ன கட்டுரை. இன்னுமொருமுறை பார்த்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.
இந்தப் படம் அம்மாவின் அன்பை-அண்மையை தொலைத்து வாழ்வில் தனித்திருக்கும் இரு குழந்தைகள் தாயைத்தேடுவதன் திரைவடிவம் என்று ஜெயமோகன் எழுதினார். அதே தான் நானும் எழுத விரும்புகிறேன். அந்த இரு குழந்தைகளும் மேற்கொள்ளும் பயணத்தில் சந்திக்கிற நல்ல உள்ளங்கள் பல; எளிய அன்பை அவர்களுக்கு கையளிக்கிறார்கள். ஒவ்வொரு பயணமும் அன்பிழையால் இணைக்கப்பட்டது. இந்தக் குழந்தைகள் மேற்கொள்கிற பயணம் நெடுகிலும் அவர்கள் சக மனிதர்கள் மீதான பேரன்பை பொழிகிறார்கள்; மிக இயல்பாக; நனைதலை பரிசளிக்கும் மழை மனிதர்களைச் சந்திக்கிறார்கள்.
அவர்கள் மாறி மாறி பயணிக்கும் வேறு வேறு வாகனங்கள், அவர்களின் பயணம் நெடுகிலும் கூடவே வரும் அகியின் காலுறையிலிருக்கும் நூறு ரூபாய், அந்த மூவரையும் இணைக்கும் இரவுமழை, தாயின் மார்பு மச்சத்தை பரத்தையிடம் காண்பவனின் தேடல், அவிழும் பேண்ட்டை இறுக்கமாக்க கட்டப்படும் பாவாடைக் கிழிசல், கொடாப்பில் ஆண்டாண்டு காலமாய் கிடக்கும் பால்யத்தின் கூழாங்கற்கள், இப்படியான கவிதைகள் இந்தப் படத்தில் ஏராளம். உங்களின் தகுதிக்கும் திற்மைக்கும் ஏற்ப உங்களுக்கு கிடைக்கும் கவிதைகளின் எண்ணிக்கை அதிகமாகும். தன் தாயை பாஸ்கர் மணி தூக்கிப்போகும் போது தாயின் கால் விரல்கள் பாஸ்கர் மனியின் கைவிரல்களைப் போல சுவரை உரசிக்கொண்டே போகிறது. பாஸ்கர்மணி விரல்வைத்து அழுத்தியதும் அந்தத் தாயின் உணர்வுகளாக ரோகிணி காட்டும் நடிப்பு இதுவரை நான் பார்த்த நடிப்புகளிலேயே மிகச்சிறந்த ஒன்று.
படத்தின் ஆரம்பத்தில் இரு காட்சிகள் மற்றும் சில பாடல்கள் இவை தவிர வேறு எங்கேயும் இசை என்பது எனக்கு தனியே கேட்கவில்லை. அது திரையிசையின் மாபெரும் சாதனை என்றே கருதுகிறேன். படம் மட்டுமே எனக்குத் தெரிந்தது. இசை தனித்து இல்லை. தாலாட்டு கேக்க எத்தனை நாள் காத்திருந்தேன் என்ற பாடல் என்னைப் போன்ற சிறுவர்களை அழவைக்கிறது.
ஆராம்பம் முதலே தாய்வாசலையும் அன்னைவயலையும் வெறும் குறியீடென்றே நம்பி வந்தேன். இறுதியில் இருவரின் தாய்களும் அங்கே தான் கிடைக்கிறார்கள். நல்ல மனதின் பிரார்த்தனை வீண்போகாது. அவர்கள் இருவரும் தம் தாயைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
இந்தப்படம் குறித்து மிஷ்கின் நிறைய பேசி வருகிறார். இன்னும் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். பாவாடை கிழிசலுக்கும் தொப்புள்கொடி உறவுக்குமான தொடர்பை மிஷ்கின் ஒரு நேர்காணாலில் சொல்லி இருந்தார். இல்லாவிட்டால் எனக்கு அந்த காட்சியழகு கண்ணில் பட்டிருக்காது. இந்தப் படத்தை ஒரு பாடப்புத்தகமாக வைத்துக்கொண்டு மிஷ்கின் என்ற கலைஞன் சினிமா மொழிப்பாடத்தை கற்பிக்குமாறு வேண்டுகிறேன். அதற்கு சகலவிதமான ஊடகங்களும் உதவ வேண்டும். நல்ல சினிமா ரசனை உள்ள நண்பர்கள் இந்தப் படத்தை முன்வைத்து எழுதுங்கள். நான் இதுவரை கேட்ட வகையில் படத்தை எல்ல்லொரும் புதுவிதமாக அணுகுகிறார்கள். இதன் திரைமொழி என்னைப் போன்ற சரசரி ரசிகனுக்கு புதிதாக உள்ளது. இதை வைத்து கற்பிக்கும் போது இன்வரும் படங்களின் திரைமொழி லகுவாக புலப்படும். மக்களின் ரசனை மேம்படும். தமில் சினிமா ரசிகர்கள் என்னாலும் ரசனைஉணர்வு மிக்கவர்கள்தான். அதை ஒருமுகப்படுத்த இது போன்ற படங்கள் உதவும்.
படத்தைப் பாருங்கள் நண்பர்களே.